தெப்பக்காட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சமயபுரம் யானை மசினி மேட்டுப்பாளையத்தில் ஓய்வு

மேட்டுப்பாளையம்: தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்க இன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது கோவை அடுத்த மேட்டுப்பாளையத்திற்கு வந்த யானைக்கு உணவு வழங்கி ஓய்வு அளிக்கப்பட்டது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பெண் யானை (12) மசினி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாகன் கஜேந்திரனை யானை மசினி கடந்த 25.5.2018ல் தாக்கி கொன்றது. இதையடுத்து உடல் நலமில்லாமல் தவித்த யானையை இனி கோயிலில் பராமரிக்க முடியாது என கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது.  இதையடுத்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள தமிழக கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யானை சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் கடந்த 6 மாதமாக பெற்ற சிகிச்சையால் யானை பூரண குணமடைந்தது. இதன் பின் யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை அருகில் உள்ள தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த யானை ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு லாரி மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு சென்றனர். உடன் பாதுகாப்பிற்கு தஞ்சாவூர் வனத்துறையினர் பார்த்தசாரதி, மருத்துவர் அருள்குமார் தலைமையிலான வெங்கடேசன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இருந்தனர். இன்று காலை 10 மணியளவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மரக்கிடங்கு பகுதிக்கு யானை வந்து சேர்ந்தது. நீண்ட நேர பயணத்தால் யானை சோர்வாக இருந்தது. இதையடுத்து யானைக்கு உணவாக அவலை தண்ணீரில் நனைத்து கொடுத்தனர். பிறகு சிறிது நேரம் ஓய்வளித்தனர். இதற்கான ஏற்பாட்டை மேட்டுப்பாளையம் ரேஞ்சர் செல்வராஜ், பாரஸ்டர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். பிறகு இன்று மதியம் யானை தெப்பக்காடு முகாம் அனுப்பி வைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: