பெரியோர்களே... தாய்மார்களே..!

குரல் கலைஞர் கருப்பையாவை தெரியுமா?

Advertising
Advertising

“அன்பான பெரியோர்களே... தாய்மார்களே..!” லவுட் ஸ்பீக்கரில் இந்தக் குரல் ஒலிக்கப்படும் போதெல்லாம், “நம்ம கருப்பையாதானே?” என்று தென்மாவட்டத்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாக விசாரித்துக் கொள்வார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ரிமோட் கருப்பையாவின் குரல் ஒலிக்காத ஊரே இல்லை எனலாம். அங்கிருக்கும் கிராமங்களுக்கு ஆர்ஜே, வீஜே, டீஜேவெல்லாம் இவர்தான். எந்தத் திருவிழாவாக இருந்தாலும் முதல் அழைப்பு நம்ம ரிமோட் கருப்பையாவுக்குதான்.

மைக், லவுட் ஸ்பீக்கரோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு முதலில் ஆஜர் ஆவதும் அவர்தான். காணவில்லை அறிவிப்பு, காவல்துறை எச்சரிக்கைகள், போக்குவரத்து விதிமுறைகள், மரண அறிவிப்பு என்று மக்களுக்கான செய்திகளை அறிவிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நல்ல உள்ளம் கருப்பையா. எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் முதலில், “காது, கழுத்துலே இருக்கிற நகை.. இடுப்பிலே இருக்கிற குழந்தை பத்திரம்” என்று சொல்லிதான் ஆரம்பிப்பார். அவருடைய யதார்த்தமான பாணி பேச்சுக்கு ஏகப்பட்ட அபிமானிகள்.

இந்தக் குரலை கேட்டதுமே விசில் அடிக்கும் ரசிகர் கூட்டமே ரிமோட்டுக்கு உண்டு.“பேச்சுக்கு ரசிகர்கள்னா அது திமுக கட்சியை சார்ந்தவங்கதான். அந்தக் கட்சியைதான் பேச்சாலே ஆட்சியைப் பிடிச்ச கட்சின்னு மக்கள் சொல்லுவாங்க. அந்தக் கட்சி பேச்சாளர்களோட பேச்சுலே அனல் பறக்கும். மக்கள் நலமும் பிரதானமா இருக்கும். அப்போவெல்லாம் திமுக பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் திரளா மக்கள் கலந்துப்பாங்க. கலைஞர், வீரபாண்டியார், ஆற்காட்டார் மாதிரி தலைவர்கள் பேச்சுக்கு கட்சி கடந்து மக்கள் ஆர்வமா வருவாங்க.

அப்போ இந்த மாதிரி கூட்டங்களை ஊர் ஊரா போய் அறிவிப்பாங்க. வேலாயுதம்னு ஒருத்தர் சைக்கிள் ரிக்‌ஷா இல்லைன்னா குதிரை வண்டியிலே மைக் செட்டு கட்டி ஊர் ஊராப் போய் நோட்டீஸு கொடுத்துக்கிட்டே ‘கலைஞர் பேசுகிறார்’னு கம்பீரமா கலைஞர் மாதிரியே கரகர குரலில் அறிவிப்பார். ஜனங்க ஆர்வமா அவர் கொடுக்கிற நோட்டீஸை வாங்குவாங்க. வேலாயுதத்தோட அறிவிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதில் நானும் ஒருத்தன். ஒருக்கட்டத்துலே அவரோடவே பயணம் பண்ணி, அவரோடவே பழகி அவருக்கு சீடன் மாதிரி ஆனேன்.

அறிவிப்புக் கலையோட அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம் நானும் அறிவிப்பாளரா ஆனேன்” என்று தான் அறிவிப்பாளரான வரலாற்றை சுருக்கமாக சொல்கிறார் ரிமோட் கருப்பையா. ஒரு திருவிழாக் கூட்டத்தில்தான் அவரிடம் பேசினோம். “அறிவிப்பு என்பது எந்தமாதிரியான பணி? ரேடியோ, டிவியெல்லாம் வந்துட்டபிறகும் உங்களை மாதிரி அறிவிப்பாளர்களுக்கு என்ன வேலை?” “ரேடியோ, டிவியெல்லாம் மாஸ் மீடியா. நாமதான் எப்பவுமே மக்கள் மீடியா. அன்னைலேருந்து இன்னைக்கு வரைக்கும் நான் பிஸியாதானே இருக்கேன்?

ஆரம்பக் காலத்துலே சினிமா பட ரிலீஸுகளுக்கு மாட்டு வண்டியில் மைக் கட்டிக்கிட்டுப் போய் விளம்பரம் செய்வாங்களாம். அதுக்கும் முன்னாடி டமுக்கு அடிச்சி அரசனோட, அரசாங்கத்தோட அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதெல்லாம் நூற்றாண்டுக் காலமா இருக்கிற வேலைதான். நாங்கள்லாம் ஒருவகையில் மக்கள் தொடர்பாளர்கள். மக்களோடு நேரடியாக பரிச்சயம் கொண்டவங்க. சொந்த பந்தம், ஊர் உறவுகள், நட்புகள் சொல்லுறதையெல்லாம் மக்கள் நம்புறாங்களோ இல்லையோ.. நாங்க சொல்லுறதை எந்தக் கேள்வியும் கேட்காம அப்படியே நம்புவாங்க.”

“நீங்க எந்தமாதிரி அறிவிப்புகள் செய்வீங்க?” “இப்போ எடுத்துக்கிட்டீங்கன்னா ராமநாதபுரம் சுத்து வட்டாரத்துலே எங்கே திருவிழா நடந்தாலும் முதலில் போலீஸ்காரங்க என்னைதான் போன் போட்டு கூப்பிடுவாங்க. கடந்த நாப்பது வருஷத்துலே திருவிழாவிலே காணாமப்போன ஆயிரக்

கணக்கான குழந்தைகளை அவங்க பெற்றோர் கிட்டே என்னோட அறிவிப்பு சேர்த்திருக்கு. இது ஒரு சாதனைதானே? புண்ணியம்தானே? எத்தனை பேருக்கு இப்படியொரு அரிய பணியை சமுதாயத்துக்கு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்?

அப்புறம் மரண அறிவிப்பு. இதை செய்யுறப்போ ரொம்ப கவனமா இருக்கணும். இறந்தவங்களை பத்தி நல்லவிதமான நினைவூட்டலை மக்களுக்கு கொடுக்கணும். அதே மாதிரி நம்ம குரல் உருக்கமாவும் இருக்கணும். கல் நெஞ்சை கூட கரைய வைக்கிற மாதிரி மரண அறிவிப்பு செய்வேன். பெரும்பாலும் அரசு மற்றும் நகராட்சி அமைப்புகளோட அறிவிப்புகள், போலீஸ்காரங்க மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள், போக்குவரத்து விதிமுறைகள் மாதிரி வேலைகள்தான் எனக்கு இருக்கும். திருவிழான்னாதான் ரொம்ப உற்சாகம் ஆயிடுவேன்.

தேர்தல் நேரத்திலும் ஆட்டோ பிரச்சாரத்துக்கெல்லாம் கூப்பிடுவாங்க.” “இந்த வேலையிலே உங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்கள் உண்டா?”

“நிறையவே இருக்கு. ஒண்ணு ரெண்டு சொல்றேன். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நாகப்பட்டினத்துலே ஒரு கோயில் திருவிழா. ஒரு அம்மா அவங்க நகையைத் தொலைச்சிட்டாங்க. தரையிலே உட்கார்ந்து மாருலே அடிச்சிக்கிட்டு அழுவறாங்க. அவங்க கிட்டே பேசி அவங்க குடும்பப் பின்னணியை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். ரொம்ப உருக்கமா அவங்களோட குடும்பக் கஷ்டத்தை மைக்கிலே அறிவிப்பு செஞ்சு பேசினேன்.

இந்த நகையை எடுத்த மகராசன் நல்லவருதான், ஏதோ சூழ்நிலையிலே எடுத்துட்டாரு. ஆனாக்கா, இந்தம்மாவோட சூழ்நிலையையும் அவரு புரிஞ்சுப்பாருன்னு நேக்கா பேசினேன். கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொரு லேடி அறிவிப்பு மேடைக்கு வந்தாங்க. ‘இந்த நகை கீழே கிடந்தது. எனக்கும் குடும்பக் கஷ்டம்தான். இதை வெச்சு என் கஷ்டத்துலே கொஞ்சம் தீர்த்துக்கலாம்னு நெனைச்சேன். ஆனா, உங்கப் பேச்சு என் மனசை கரைச்சிடிச்சி’ன்னு சொல்லிட்டு நகையைக் கொடுத்துட்டு திரும்பிப் பார்க்காம நடந்தாங்க.

நகை திரும்பக் கிடைச்சதுமே அந்தம்மா என்னை கையெடுத்து கும்பிட்டுது. நல்ல பேச்சு எப்பவுமே நல்ல விளைவைதான் ஏற்படுத்தும். இது யாருக்கு தெரியுமோ இல்லையோ, எங்களை மாதிரி குரல் கலைஞர்களுக்கு நல்லாவே தெரியும். இப்போகூட ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்தோணியார் கோயில் திருவிழா. லட்சக்கணக்குலே மக்கள் கூடுற பெரிய விழா அது. அப்போ ராஜான்னு ஒரு மூணு வயசுப் பய திருவிழாவுலே காணாமப் போயிட்டான். நான் பாட்டுக்கு அவனைப் பத்தி மணிக்கணக்குலே அனவுன்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்கேன்.

பய கிடைக்கிறமாதிரி இல்லை. புள்ளையப் பெத்தவங்க கதறிக்கிட்டு இருக்காங்க. எனக்கு மனசு கேட்கலை. உடனே போலீஸ் கிட்டே கேட்டு ஒரு வண்டி ஏற்பாடு பண்ணிக்கிட்டு மைக் கட்டிக்கிட்டு சுத்துவட்டார கிராமத்துக்கெல்லாம் போய், இன்னமாதிரி பையன் காணாமப் போயிட்டான், பார்த்தீங்கன்னா சொல்லுங்கன்னு அறிவிப்பு செஞ்சிக்கிட்டே போனேன். ராத்திரி பத்து மணி வாக்கிலே ஒரு கிராமத்துலே பையன் கிடைச்சான். சின்னக் குழந்தைதானே? அவனுக்கு சரியா பேச்சு வரலை.

அவனை எங்கேயோ கூட்டத்துலே பார்த்துட்டு, இவங்க கொண்டு வந்து சாப்பாடெல்லாம் கொடுத்து தூங்க வெச்சிருந்தீங்க. நட்ட நடு ராத்திரியிலே குழந்தையைக் கொண்டு போய் பெத்தவங்க கிட்டே சேர்த்தப்போ கிடைச்ச திருப்தி இருக்கே? எந்த வேலையிலும் கிடைக்காது. பல விழாக்களில் காலையிலே 4 மணிக்கு ஆரம்பிச்சி இடைவெளி விடாம, சாப்பிடாமக் கூட நைட்டு பத்து மணி வரைக்கும் தொண்டை கட்டத் தொடர்ந்து கத்தியிருக்கேன். மேலே சொன்ன அனுபவங்கள் மாதிரி எனக்கு ஆயிரக்கணக்குலே அனுபவம் உண்டு. எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்க முடியுமா என்ன?”

 “அறிவிப்பு தமிழில் மட்டும்தான் செய்வீங்களா?” என்னங்க நீங்க. இப்படி கேட்டுட்டீங்க. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கெல்லாம் நமக்கு அத்துப்படி. ராமேஸ்வரம் ஒரு இன்டர்நேஷனல் ஊரு. உலகம் முழுக்க இருந்து இங்கே மக்கள் வர்றாங்க. அவங்களுக்கு தெரிஞ்ச மொழியில் அறிவிப்பு செஞ்சாதானே அறிவிப்புக்கே ஓர் அர்த்தம் பிறக்கும்?”“மக்களோட உங்களுக்கு எந்தமாதிரி உறவு இருக்கு?” “நான் போற ஒவ்வொரு ஊர்லேயும் குறைஞ்சது பத்து பேராவது எனக்கு அறிமுகமானவங்க இருப்பாங்க. பல ஊர்களிலும் நிறைய பேருக்கு என்னைத் தெரியும்.

ஏதாவது திருவிழாவுலே யாராவது பார்த்துட்டு சிரிப்பாங்க. எனக்கு சட்டுன்னு அடையாளம் தெரியாது. ‘என்னய்யா மறந்துட்டீங்களா? ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சுப்பிரமணியசாமி கோயில் திருவிழாவுலே காணாமப் போன எங்க குழந்தையை கண்டுப்பிடிச்சி கொடுத்தீங்களே?’ன்னு ரொம்ப பாசமா பேசுவாங்க. என்னோட கஷ்டமெல்லாம் இவங்கப் பேச்சுலே ஒட்டுமொத்தமா மறந்துப் போவும். ரொம்ப நெகிழ்ச்சியா அவங்க கையைப் பிடிச்சிப்பேன். அதேமாதிரி திருவிழா மற்றும் கூட்டங்களில் பிக்பாக்கெட் தொல்லை ஏகத்துக்கும் இருக்கும்.

திடீர்னு யாராவது வந்து, ‘அய்யா, என் பர்ஸை அடிச்சிட்டாங்க. ஊருக்கு போக துட்டில்லை’ன்னு சொல்லுவாங்க. நான் அறிவிப்பு செஞ்சு, இன்னார் இதுமாதிரி பிரச்சினையிலே இருக்காப்புலே, நாமதான் உதவணும், நம்ம ஊரு மானத்தைக் காப்பாத்தணும்னு சொல்லுவேன். பொதுமக்கள் தாமா முன்வந்து காசு கொடுப்பாங்க. அதை வசூல் பண்ணி அவங்களை நல்லபடியா சாப்பிடவெச்சி ஊருக்கு அனுப்பி வைப்பேன்.” “அதிருக்கட்டும். கருப்பையாங்கிறது உங்க பேரு. ‘ரிமோட்’டுங்கிறது நீங்க படிச்சி வாங்கின பட்டமா?”

பெருகுரலெடுத்து பலமாக சிரிக்கிறார். “எனக்கும் எல்லாரும் நண்பர்கள்தான். ஆனா, நான் தனிப்பட்ட முறையில் தீவிரமான திமுககாரன். தெருமுனை பிரச்சாரக் காலத்துலே தொடங்கி, இப்போ பெரிய பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்துற காலம் வரைக்கும் கழகக் கூட்டம்னா மைக் செட் பக்கத்துலே நான்தான் நிப்பேன். கூட்டத்துக்கு நாலஞ்சி நாள் முன்னாடி சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் போய் ஆர்வமா விளம்பரப் படுத்துவேன். ‘தலைவர் கலைஞர் வருகிறார்’னு சொல்லுறப்போ எனக்கே அப்படியே சிலிர்ப்பா இருக்கும்.

இப்போ ‘கழகத்தூண் தளபதி ஸ்டாலின் பேசுகிறார்’னு சொல்லுறப்பவே அதே உணர்வு. ஒரு முறை ராமேஸ்வரத்துலே பொதுக்கூட்டம். ஸ்டாலின் பேசுறாரு. அப்போதான் எங்க ஊருலே சவுண்ட் சிஸ்டம், ரிமோட் கண்ட்ரோல் முறைக்கு மாறியிருந்தது. ஸ்டாலின் பேசிக்கிட்டிருக்கப்போ சவுண்ட் கொஞ்சம் மக்கர் செஞ்சது. நான் ரிமோட்டைக் கையில் வெச்சுக்கிட்டு அவரது குரலுக்கு தக்கவாறு மாத்தி, மாத்தி மக்கள் தெளிவா கேட்குறதுக்கு வழி செஞ்சேன். ஆவேசமான பேச்சுக்கு இடையிலேயும் என்னோட துல்லியமான வேலையை தளபதி உன்னிப்பா கவனிச்சுக்கிட்டே இருந்திருக்காரு.

அவருதான் பேச்சோட முடிவுலே ‘என்னோட பேச்சை தெளிவாக கேட்குறதுக்கு உதவி செஞ்ச ரிமோட் கருப்பையா அவர்களுக்கு நன்றி’ன்னு சொன்னாரு. தளபதியே சொல்லிட்டாருங்கிறதாலே கட்சிக்காரங்க என்னை ‘ரிமோட்டு, ரிமோட்டு’ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ மக்கள் மத்தியிலும் பிரபலமாயிடிச்சி. இந்தப் பட்டமும் கொஞ்சம் கெத்தாதான் இருக்கு இல்லையா?” “வருமானமெல்லாம் எப்படி?”“அதைப்பத்தியெல்லாம் பெருசா சொல்லிக்க முடியாது.

இவ்வளவு மனத்திருப்தி கொடுக்கிற வேலையை செய்யுறேன். உங்களுக்கு வாழ்க்கையிலே எல்லாமே பிரமாதமா அமையாது. பணம் நிறைய இருந்தாதான் சந்தோஷம்னு யாரு சொன்னது? என்னை மாதிரி என்னோட குடும்பமே தி.மு.கழகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டது. தலைவர் கலைஞர் அவர்கள் என்னோட மனைவிக்கு சத்துணவுப் பணியாளர் வேலையை போட்டுக் கொடுத்தாங்க. அதனாலே நாங்க நிம்மதியாதான் இருக்கோம். நாலு பேருக்கு நல்லது சொல்லுறது, நல்லது செய்யுறதுன்னு இருக்கேன்.

என் குடும்பத்துக்கும் இது பெருமைதான். இதைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டே இருப்போமே? என்ன தம்பி சொல்லுறீங்க?” நம்மிடம் பேசிவிட்டு, சட்டென்று மைக்கை பிடித்து அறிவிப்பை செய்ய ஆரம்பிக்கிறார். “அன்பான பெரியோர்களே... தாய்மார்களே.. காது, கழுத்துல இருக்கிற நகை, இடுப்பில் இருக்கிற குழந்தை பத்திரம்’’ காற்றில் கலந்து எட்டுத் திக்கும் எதிரொலிக்கிறது ‘ரிமோட்’ கருப்பையாவின் கம்பீரக் குரல்.

- திலீபன் புகழ்

படங்கள் : சத்தியா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: