செந்தில் பாலாஜி சென்றதில் எந்த வருத்தமும் இல்லை: டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: அமமுகவை விட்டு செந்தில் பாலாஜி சென்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என கட்சி துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செந்தில் பாலாஜியை 2006ம் ஆண்டு முதல் நன்றாக தெரியும். சிறிது காலமாக என்னிடம் சொந்த பிரச்னை இருப்பதாக கூறினார். இந்நிலையில் திமுகவிற்கு சென்றுவிட்டார். யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. எங்களிடம் இருந்த ஒன்றரை ஆண்டுகாலம் அவர் நன்றாக தான் இருந்தார். எங்கள் கூடாரம் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். எங்கள் கூடாரம் எப்போதும் காலியாகவில்லை. அவர் அமமுகவை விட்டு சென்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

யாராக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த விருப்பப்படி செல்லலாம். கரூர் மாவட்டத்தில் அவர் சேகரித்த உறுப்பினர் விண்ணப்பங்கள் என்னிடம் வரவில்லை என்றுதான் கவலையே தவிர, அவர் சென்றது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சிலர் எங்களுடைய கட்சி மதிமுக, தேமுதிக போல் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள். அதிமுகவில் எங்களுக்கு துரோகம் செய்த 12 பேர் இல்லை என்றால், அதிமுகவை இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றுதான் கூறினோமே தவிர, அதிமுகவுடன் நாங்கள் இணையப்போவதாக கூறவில்லை. எந்த காலத்திலும் நான் துரோகிகளுடன் இணைய மாட்டேன்.

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை. 1 கோடியே 20 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய இயக்கமாக அமமுக வளர்ந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றிபெற போவது நாங்கள்தான்.  எப்போதும் அமமுக சிறப்பாக இயங்கும். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: