மிசோரமில் எம்என்எப் பெரும்பான்மை ஆட்சியமைக்க உரிமை கோரினார் சோரம் தங்கா

மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மிசோரம் தேசிய முன்னணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோரம் தங்கா ஆட்சி அமைக்க  உரிமை கோரினார்.

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் மிசோரம் தேசிய முன்னணி (எம்என்எப்) வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.  இந்நிலையில் முதல்வராக பதவி வகித்து வந்த காங்கிரசை சேர்ந்த லால்தன் வாலா, தான் போட்டியிட்ட செர்சிப் மற்றும் சம்பை தெற்கு ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை கவர்னரிடம் சமர்ப்பித்தார். இந்த நிலையில் எம்என்எப் சார்பில் சட்டப்பேரவை கட்சி தலைவராக சோரம் தங்கா போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநர்  ராஜசேகரனை நேற்று மாலை 6 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

மதுவுக்கு முழு தடை: ேசாரம் தங்கா உறுதி

மிசோரமில், ஆட்சி அமைக்க உரிமை கோரிய மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தங்கா நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘‘மிசோரமில் நாங்கள் உறுதியளித்தபடி, மதுவுக்கு முழுமையாக  தடை விதிக்கப்படும். மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

மிசோரமில் ஒவ்வொரு முறை ஆட்சியாளர்கள் மதுவுக்கு தடை விதிப்பது பின்னர் கொண்டு வருவதுமாக உள்ளனர். கடந்த 1997ல் அப்போதைய காங்கிரஸ் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது. பின்னர் 2015ல் இப்போதைய  காங்கிரஸ் அரசு அதை விலக்கியது. மதுவுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் மிசோ தேசிய முன்னணி, முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று  தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலே... கீழே... மேலே... கீழே...

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், எதிர்பார்த்ததுபோலவே காங்கிரஸ் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. ஆனால், நேரம் ஆக, ஆக, பாஜ.வும் திடீரென காங்கிரசை ஒட்டி வர ஆரம்பித்தது. இதனால்  பெரும் பரபரப்பு நிவவியது. பின்னர் நிலைமை மாறி காங்கிரஸ் முன்னேற ஆரம்பித்தது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணி நிலவரத்தின்போது, மீண்டும் பாஜ எண்ணிக்கை உயர்ந்து காங்கிரஸ் எண்ணிக்கை குறைந்தது.  பெரும்பான்மை இடத்துக்கு சற்று குறைவான இடமே கிடைக்கும் நிலை இருந்ததால், சுயேச்சைகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஆதரவை பெற காங்கிரஸ் முடிவு செய்தது. இந்நிலையில், மதியம் 2 மணிக்கு மொத்தமுள்ள 200  தொகுதிகளில் 101 பெற்றால் பெரும்பான்மை என்ற நிலையை காங்கிரஸ் எட்டியது. அதாவது 103 இடங்களை தொட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் நிம்மதி அடைந்தனர்.இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் பெரும் இழுபறி நீடித்தது. நேற்று மாலை 4 வரையில் கூட காங்கிரசும் பாஜவும் ஒருவரை ஒருவர் முந்தும் நிலைமைதான் இருந்தது. அதன்பின்னர்தான் நிலைமை அப்படியே மாறி, காங்கிரஸ்  ஒவ்வொரு அடியாக முன்னேற ஆரம்பித்தது. இறுதியில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

வாக்கு சதவீதத்திலும் பாஜவுக்கு பலத்த அடி

ராஜஸ்தானில் ஆட்சியை இழந்ததோடு, 5 மாநில தேர்தலில் பாஜவின் வாக்கு சதவீதமும் வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 2013 சட்டப்பேரவை தேர்தலையும், 2014 மக்களவை தேர்தலையும் ஒப்பிட்டு பார்க்கையில் இம்முறை  பாஜவின் வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது. அதே சமயம், காங்கிரசின் வாக்கு சதவீதமும், சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது.சட்டீஸ்கரில் இம்முறை காங்கிரஸ் 43.2 சதவீத வாக்கு பெற்றுள்ளது. 2013ல் அக்கட்சி 40.3 சதவீத வாக்குகளும், 2014 மக்களவை தேர்தலில் 38.37 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன. மக்களவை தேர்தலில் 11 தொகுதிகளில்  ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

இங்கு, பாஜ 2013 பேரவை தேர்தலில் 41 சதவீத வாக்குகளும், 2014 மக்களவை தேர்தலில் 11ல் 10 தொகுதிகளை வென்று 49 சதவீத வாக்குகளையும் அள்ளியது. தற்போது பாஜவின் வாக்கு சதவீதம் 32.9 சதவீதமாக சரிந்துள்ளது.  2013ல் 4.3 சதவீத வாக்கு பெற்ற பகுஜன் சமாஜ் தற்போது 10.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

இதே போல, ராஜஸ்தானில் பாஜவின் வாக்கு சதவீதம் 45.2 சதவீதத்தில் இருந்து 38.8 சதவீதமாக குறைந்துள்ளது. இங்கு, 2014 மக்களவை தேர்தலில், 25 தொகுதிகளையும் வென்றிருந்த பாஜவின் வாக்கு சதவீதம 55 சதவீதமாக  இருந்தது. 2013ல் 33.1 சதவீதத்தை பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 39.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. சுயேச்சைகளின் வாக்கு சதவீதம் 8.2 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.மபியில் காங்கிரசின் வாக்கு சதவீதம் 36.4 சதவீதத்தில் இருந்து 41.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாஜவின் வாக்கு சதவீதம் 44.9 சதவீதத்தில் இருந்து 41.3 சதவீதமாக சரிந்துள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் வாக்கு சதவீதம்  34ல் இருந்து 47 ஆகவும், காங்கிரஸ் வாக்கு சதவீதம் 25.2ல் இருந்து 28.7 ஆகவும் அதிகரித்துள்ளது. இங்கு மக்களவை தேர்தலில் 10.4 சதவீதம் வாக்கு பெற்ற பாஜ தற்போது 7 சதவீத வாக்கை மட்டுமே பெற்றுள்ளது.மிசோரமில் பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு தொகுதியை கைப்பற்றி உள்ள பாஜவின் வாக்கு சதவீதம் 0.4 சதவீதத்தில் இருந்து 5 மடங்கு அதிகரித்து 8 சதவீதமாகி உள்ளது. இதன் மூலம் 2019 மக்களவை தேர்தலில் பிராந்திய கட்சிகள்  முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘இனி தேசிய அரசியலில் டிஆர்எஸ்’

டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகரராவ் கூறுகையில், ‘‘மாபெரும் வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும். அடுத்ததாக தேசிய அரசியலில் தீவிரமாக  பங்கேற்க உள்ளேன்’’ என்றார். மத்தியில் காங்கிரஸ், பாஜ அல்லாத 3வது கூட்டணியை உருவாக்குவதற்காக சந்திரசேகரராவ் ஏற்கனவே முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘ஒன்றும், ஒன்றும் சேர்ந்தால் 11 ஆகலாம். இறுதியில் அதிகாரம் படைத்த பெரிய மனிதர்கள் மங்கிவிட்டார்கள்’’ எனக் கூறி உள்ளார்.

தெலங்கானாவில் 7 இடங்களை கைப்பற்றிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி அளித்த பேட்டியில், ‘‘சந்திரபாபு நாயுடு ஒரு மூழ்கும் படகு. அவரால் 25 எம்பி தொகுதியில் 2 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாது.  மத்தியில் பாஜவை வீழ்த்தும் தகுதி காங்கிரசிடம் கூட இல்லை என்றே கருதுகிறேன். காங்கிரஸ், பாஜவுக்கு அல்லாத மாற்று கூட்டணியே தேசிய அரசியலில் மக்கள் நம்பிக்கையை பெற முடியும். அதற்கான தகுதியும்,  பொறுப்பும் சந்திரசேகரராவுக்கே உண்டு’’ என்றார்.பதவி விலகிய சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறுகையில், ‘‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். பாஜ முயன்ற அளவுக்கு சிறப்பாகவே பணியாற்றியது. தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன்’’ என்றார்.பஞ்சாப் மாநில அமைச்சரான காங்கிரசின் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், ‘‘மோசமான நாட்கள் கடந்து போகின்றன. செங்கோட்டையில் ராகுல் தேசியக் கொடியை ஏற்றப் போகிறார். இதற்கான அடித்தளத்தை மக்கள்  அமைத்து கொடுத்துள்ளார்கள். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளன’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: