கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வெளியேற்றும் கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு: கிராமமக்கள் புகார்

கரூர்: கரூர் அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் சுமார் 15,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகி விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முறையிட்டுள்ளனர். கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் காகிதங்கள் உற்பத்தியாகின்றன. ஆலைக்கு தேவையான தண்ணீர், கட்டிபாளையம் கிராமத்தின் அருகே காவிரி ஆற்றுப்படுகையில் நீரேற்று நிலையம் அமைத்து அதன்மூலம் கொண்டு வரப்படுகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேற்ற வேண்டிய கழிவுநீர், சீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

ஆனால், பெயரளவில் மட்டும் சுத்திகரித்து விட்டு கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் பொன்விளையும் பூமியாக தங்கள் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஐயம்பாளையத்தில் புகலூரான் வாய்களில் கலப்பதால், வாங்கல், நெரூர் மற்றும் தலவாய்ப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் விளைநிலங்கள் பயிரிடத் தகுதியற்று விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதையடுத்து கழிவு நீர் பாதிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், சுவாமி கமிஷன் என்ற ஒருநபர் குழு இப்பகுதியில் ஆய்வு செய்தது. அதன்படி காகித ஆலையில் கழிவுநீரும், ஹைட்ரஜன் சல்பைடு வாயு திறக்கப்படுவதன் காரணமாகவே விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கழிவுநீரையும், வாயுவையும் திறக்க கூடாது என 1997ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து கழிவுநீரை திறந்துவிடுவதாகவும், இதனால் புகலூரான் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் போன்றவற்றில் தண்ணீர் முற்றிலும் நஞ்சாக மாறிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு இந்த ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: