சேலத்தில் ராமதாஸ் குற்றச்சாட்டு புயல் நிவாரணப்பணிகளில் அரசு தோல்வி அடைந்துள்ளது

சேலம்: கஜா புயல் நிவாரண பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, சேலத்தில் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணி மந்தமாக நடக்கிறது. 4 நாளாகியும் மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். தமிழக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

12 ஆயிரம் மின்ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு சொல்கிறது. அப்படி பணியில் ஈடுபட்டிருந்தால் 2 நாட்களில் பணியை முடித்திருக்கலாம். 1.5 லட்சம் மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதல்வர் இன்று வரை அங்கு செல்லவில்லை.

சேலத்தில் பாலம் திறக்க வேண்டும் என்கிறார். அதிகாரிகளை வைத்து பாலத்தை திறந்திருக்கலாம். ஜெயலலிதாவை விட அதிக ஆடம்பரமாக  முதல்வர் இருக்கிறார். புயலால் டெல்டாவில் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய குழுவையும் உடனடியாக அனுப்ப வேண்டும். பிரதமரும் புயல் பாதிப்புகளை பார்வையிட வர வேண்டும்.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் நியமனம் நேர்மையாக நடக்க வேண்டும். துணை வேந்தருக்கு வேண்டிய ஒருவரை பொறுப்பு பதிவாளராக நியமித்துள்ளனர். இதன் பின்னணியில் பல மர்மங்கள் உள்ளன. வெளிப்படையாக நியமனம் நடைபெறாவிட்டால் வழக்கு தொடருவோம். 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் துடிப்பது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: