750 அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அரையாண்டு தேர்வுகள்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கும் நிலையில் 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2016-17ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 809 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அங்கு கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இப்போதுகூட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 1474 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை மாதம் ரூ.7,500 என்ற ஊதியத்தில் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள தமிழக அரசு  அனுமதி வழங்கியது. ஆனால், இதில் கூட கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் கணினி அறிவியல் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு தலைமுறை கணினி அறிவியல் பாடத்தில் அரையாண்டுத் தேர்வு எழுதப் போகிறது.  கணினி அறிவியல் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் அப்பாடத்தின் தேர்வை எழுதும் மாணவனால் எதை சாதிக்க முடியும்? கணினி அறிவியல் பாடத்திற்கு  ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படாமல் கல்வித்துறை சீரழிகிறது.

முதுகலைப் பட்டதாரி கணினி ஆசிரியர்கள் நியமனம் இன்றுவரை முறைப்படுத்தப்படவில்லை. மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் பணிகளில் காலியிடங்கள் ஏற்பட்டால் அது அடுத்து வரும் ஆசிரியர் தேர்வில் நிரப்பப்படும். ஆனால், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படுவதில்லை. தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: