மதசார்பற்ற வலுவான அணியை ஒருங்கிணைத்து மக்கள் விரோத அதிமுக, மத்திய பாஜக அரசுகளை ஜனநாயக வழியில் விரட்டுவோம்

* கருணாநிதி மறைந்த 100வது நாளில் சூளுரையேற்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மதசார்பற்ற வலுவான அணியை ஒருங்கிணைத்து, மக்கள் விரோத அதிமுக, மத்திய பா.ஜ.க. அரசுகளை ஜனநாயக வழியில் விரட்ட கருணாநிதி மறைந்த 100வது நாளில் சூளுரையேற்போம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெஞ்சம் மறந்தால்தானே நினைப்பதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இதயத்தில், எண்ணத்தில், உதிரத்தில், உயிர்த்துடிப்பில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கலைஞரை நொடிக்கு நூறுமுறையாவது நினைக்காமல் இருப்பதில்லை. ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயத்துடிப்பும் கலைஞரின் நினைவுகளுடனேயே இயங்கி நீடிக்கிறது. ஆகஸ்ட் 7ல் நம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு கலைஞர் நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்தவர் கலைஞர். 1988ம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு சென்னையில் கலைஞர் பெருமுயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகம் வியந்த பிரமாண்டமான பேரணியுடன் தொடங்கப்பட்ட தேசிய முன்னணிதான், 1989 தேர்தலில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வி.பி.சிங் பிரதமராக வழி வகுத்தது.

30 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே ஆந்திர மாநிலத்தின் இன்றைய முதல்வரும் என்.டி.ஆர். மருமகனுமான சந்திரபாபு நாயுடு, இந்தியாவை ஆளும் மதவெறி பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கும் நல்லெண்ணத்துடன், மதச்சார்பற்ற வலுவான அணி அமைக்கும் முயற்சியாக கலைஞரின் மகனும் உங்களில் ஒருவனுமான என்னைச் சந்தித்தார். அந்த நல் முயற்சிக்கு திமுக விரும்பித் துணை நிற்கும் என தெரிவித்துள்ளேன். அதே எண்ணத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செலயாளர் சீதாராம் யெச்சூரி என்னை சந்தித்து மதவெறி சக்திக்கு எதிரான மதநல்லிணக்க சமயச்சார்பற்ற அணியை தேசிய அளவில் ஒருங்கிணைப்பது குறித்து உரையாடினார். நாட்டின் எதிர்காலத்தைக் காக்கும் நல்ல சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கி விட்டன. தமிழ்நாடு அரசு இன்று பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. இந்தியா மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு.

 மாநில உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு, அரசுக் கருவூலத்தைக் கொள்ளையடித்து, வருமானம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியையும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை வஞ்சித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து, அமைதியைக் கெடுக்கும் மதவெறியுடன் கோலோச்சும் பாசிச பா.ஜ.க ஆட்சியையும் வீழ்த்திட கலைஞரின் நினைவு போற்றும் நூறாவது நாளில் நெஞ்சுயர்த்திச் சூளுரைப்போம். அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழுலகம் மகிழ, வென்று காட்டுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நினைவிடத்தில் மரியாதை

கருணாநிதி மறைந்து 100 நாட்கள் ஆவதை முன்னிட்டு கடற்ரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அழகுற அலங்கரிக்–்கப்பட்டு இருந்தது. இதை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். நேற்று திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடம் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: