அமைச்சர்கள் பொறுப்போடுதான் செயல்படுகிறார்கள் : ரஜினிக்கு செல்லூர் ராஜு பதில்

சென்னை: அமைச்சர்கள் பொறுப்போடும் கவனத்தோடும்தான் செயல்படுகிறோம் என்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்தார். தமிழகம் முழுவதும் 65வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடக்க விழா நேற்று நடந்தது. கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூட்டுறவு சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கூட்டுறவு துறையை பிரதமராக இருந்த நேருதான் மிகச்சிறப்பாக கட்டமைத்து பேணிக்காத்தார். அவரது பிறந்தநாளையொட்டி கூட்டுறவு சங்கத்தின் வார விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழக கூட்டுறவுத்துறை தான் சிறப்பான கூட்டுறவு துறையாக விளங்குகிறது. அகில இந்திய அளவில் 24 விருதுகளை தமிழக கூட்டுறவு சங்கங்கள் பெற்றிருக்கின்றன. கூட்டுறவுத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் 114 ஆண்டுகளில் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு  10 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை ஊதிய உயர்வு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் வழங்கப்பட்டது. இப்போதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில்தான் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ெதாடர்ந்து அமைச்சரிடம், “அமைச்சர்கள் பொறுப்பாடும், நாகரீகத்தோடும், கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே” என்று கேட்டபோது, “அமைச்சர்கள் பொறுப்போடும் நாகரீகத்தோடும் கவனத்தோடும்தான் நடந்து கொள்கிறோம். இப்போது கூட நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த கூட்டுறவு வார விழாவில் அரசியல் பேசுவதை தவிர்த்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்  பாதுகாப்புத்துறை முதன்மைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கோவிந்தராஜ், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, கூடுதல் பதிவாளர்கள் ராசேந்திரன், ஆ.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: