தேர்தலுக்கு முன் கடைசியாக நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால தொடர் டிச.11ல் துவக்கம் : 20 நாட்கள் நடக்கிறது

புதுடெல்லி: அடுத்த பொது தேர்தலுக்கு முன் இறுதியாக நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். ஆனால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக இந்த ஆண்டு தாமதம் ஆனது. இந்த கூட்டத்தை டிசம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று முன்தினம் இரவு பரிந்துரை செய்தது. இது அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் நடைபெறும் மோடி அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி அன்று வெளியாகவுள்ளன. அன்றைய தினம் குளிர்க்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளும் பாஜ கட்சியும், காங்கிரசும் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளது. எனவே, தேர்தல் முடிவுகளும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதிபலிக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் கூட்டம் டிசம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை 20 வேலை நாட்களுக்கு நடைபெறும். குளிர்கால கூட்டம் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும். உடனடி முத்தலாக் வழக்கம் தண்டனைக்குரிய குற்றம் என மத்திய அரசு அவசர சட்டமும் பிறப்பித்துள்ளது. மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம், கம்பெனிகள் சட்ட திருத்தத்துக்கான அவசர சட்டம் ஆகியவையும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: