உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரபேல் விமான ஒப்பந்த அறிக்கையை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பான ஒப்பந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மத்தியில் பாஜ பொறுப்பேற்றபிறகு, கடந்த 2016ல் இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தனது பிரான்ஸ் பயணத்தில் இறுதி செய்தார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை பறக்கும் நிலையில் வாங்கவும், அவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வாகி இருப்பதாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் பேரம் பேசப்பட்டதை விட 3 மடங்கு அதிக விலை கொடுத்து பாஜ விமானத்தை வாங்குவதாகவும், ஒப்பந்ததால் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் ஆதாயம் பெறுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். இதற்கிடையே, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இறுதி செய்தது வரை எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டுமென கடந்த மாதம் 31ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஒப்பந்த அறிக்கையை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டது.

அதில், ராணுவ கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றியே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இந்திய குழுவினர் பிரான்ஸ் நிறுவனத்திடம் விலை தொடர்பாக சுமார் ஓராண்டு காலம் பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பின் பாதுகாப்பு துறை அமைச்சரவை கமிட்டியின் அனுமதி பெற்று, பாதுகாப்பு தளவாட பொருட்கள் கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலோடுதான் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்பட்டுள்ளது. ேமலும் 2013ல் ஐ.மு. கூட்டணி அரசின் கொள் முதல் நடைமுறைகளே பின்பற்றப்பட்டுள்ள தாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

விலை விவரம் குறித்த பிரமாண பத்திரம்

விமானத்தின் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை வெளியிட தேவையில்லை என கூறியிருந்த உச்ச நீதிமன்றம், விலை தொடர்பான விவரத்தை மத்திய அரசு பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டால், அது தொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. எனவே, விலை தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து பிரமாண பத்திரத்தை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

* ரபேல் ஒப்பந்தத்திற்கு 2016 ஆகஸ்ட் 24ல் ஒப்புதல் வழங்கப்பட்டது.

* ஒப்பந்தத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டது.

* ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறியுள்ளது.

* இந்தியா - பிரான்ஸ் அரசுகள் இடையே 26 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

* பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு இடையே 48 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது,

* முதலில் விமானப்படையை வலுசேர்க்க நவீன ரபேல் விமானத்தோடு, ஆயுதம் தாங்கும் தொழில்நுட்பம், சர்வீஸ் மற்றும் உதிரி பாகம் தொடர்பான அனைத்து விவரத்தை உறுதி செய்து பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் அனுமதியளித்த பின்னர்,  ஒப்பந்தம் கோர முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த பேரத்தின் கூட்டங்களில் கவுன்சிலும்  இடம்பெற்றிருந்தது

* மேலும் ஒப்பந்த பேரம் சுமார் ஒரு வருட காலம் நடைபெற்று, அனைத்து அனுமதியுடன் முழுமையடைந்த நிலையில் அதிநவீன ரக  36 ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

* உதிரிபாகங்கள் தயாரிப்பு, சர்வீஸ் உள்ளிட்டவை தொடர்பாக இந்திய தனியார் நிறுவனமான ரிலையன்சை  பிரான்ஸ் நிறுவனம் டசால்ட் தேர்ந்தெடுத்துள்ளது என்பது இரு தனியார் நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம், அதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: