சபரிமலை கோயில் யாருக்கு சொந்தம்?: கேரள உயர் நீதிமன்றத்தில் அரசு பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ள நிலையில், கோயில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. சபரிமலையில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் தரிசனம் செய்ய தடை விதிக்கக் கோரி பா.ஜ. தலைவர் மோகன்தாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து கேரள அரசு நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான கோயிலாகும். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு தரிசனத்திற்கு வருகின்றனர். சபரிமலையில் உள்ள வாவர் பள்ளிவாசலில் பிரார்த்திப்பது சபரிமலையின் ஒரு ஆச்சாரமாக உள்ளது. சபரிமலை கோயில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வருகிறது. இக்கோயில் ஆதிவாசி சமூகத்தினரின் வழிபாட்டு தலம் என்றும், புத்த மதக் கோயில் என்றும் கூறப்படுகிறது.

எனவே, இந்த மனு மீது தீர்ப்பளிப்பதற்கு முன் விசாரணை அமைப்புகள் வாவர் அறக்கட்டளை மற்றும் ஆதிவாசி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். பிறப்பால் கிறிஸ்தவரான இயேசுதாஸ்தான் சபரிமலையில் ஹரிவரசாசனம் பாடலை பாடியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நவம்பர்  17ம் தேதி முதல் தொடங்க உள்ள மண்டல கால பூஜையின்போது இளம்பெண்கள் சபரிமலைக்கு வருவார்கள் என கருதப்படுகிறது. இதனால் சபரிமலையில் மேலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என அச்சம் நிலவுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆச்சாரங்களில் அரசு தலையிடாது

திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை கோயில் விவகாரங்களில் கேரள அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும். சபரிமலையில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேரள அரசு சார்பில் நேற்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை அரசு தடுக்காது.

என்றாலும் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுடைய இளம் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் அரசு விட்டு கொடுக்காது. ஆனால் கோயில் ஆச்சாரம் தொடர்பான விஷயங்களில் கேரள அரசு தலையிடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: