இந்த வேலைக்கு இரண்டரை லட்சம் பேர் தேவை!

உலகம் முழுக்க இந்த வேலைக்கு இரண்டரை லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் இரண்டு லட்சம் பேரும், இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரும் வேலை பார்க்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வேலை தெரிந்தவர்களுக்கு செம டிமாண்டு. இப்போதே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக மதிப்பு கொண்ட தொழில். பெரிய தொழில் முதலைகள் பலரும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டக்கூடிய தொழிலாக வளர்ந்து நிற்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையோடு சேர்ந்து இயங்கக்கூடிய வேலைதான். என்னவோ ‘கப்பல்லே வேலை’ என்பது மாதிரி பெரிய பில்டப் கொடுக்கிறீர்களே, என்ன வேலையென்றுதானே கேட்கிறீர்கள்? Clinical research என்று சொல்லப்படக்கூடிய மருந்தாய்வுப் பணிகள்தான். மருந்தாய்வு என்றால் என்ன? சோதனைச்சாலையில் ஒரு மருந்து கண்டறியப்பட்டு விட்டதுமே, அது நேரடியாக மக்களுக்கு சந்தையில் கிடைத்துவிடாது. அது முதலில் விலங்குகளுக்கு தரப்பட்டு பரிசோதிக்கப்படும். பின்னர் தன்னார்வலர்களாக வரும் மனிதர்களுக்கு (நல்ல உடல்நலத்தோடு இருப்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும்) தரப்பட்டு பரிசோதிக்கப்படும்.

எந்தவிதப் பக்கவிளைவுகளோ, எதிர்விளைவுகளோ ஏற்படாத பட்சத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். பயன்பாட்டுக்கு முன்னதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் (Food and Drug Administration) விண்ணப்பித்து சான்றிதழும் பெறவேண்டும். ஒரே ஒரு உயிர் காக்கும் மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரை சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சராசரியாக ஐயாயிரம் பேரின் உழைப்பு இதற்கு பின்னணியில் அவசியமாகிறது. பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது.

சில மருந்துகளுக்கு பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம். உயிரியல், உயிர்தொழில்நுட்பம், வேதியியல், பல்மருத்துவம், மருந்தாக்கவியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணைப்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் அனைவருமே மருந்தாய்வுப் பயிற்சியை முடித்துவிட்டு, இப்பணிகளில் சேரமுடியும். உடல்நலத்துறை வல்லுனர்களுக்கு ஏற்ற சரியான துறை இது. இன்றைய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாய்வு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஆயிரம் பேர் மட்டுமே இன்றைய தேதியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் இத்துறையில் பணியாற்ற லட்சக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். உலகளவிலும் இந்த வேலை தெரிந்தவர்களுக்கு செம டிமாண்டு. ஆட்களுக்கு பற்றாக்குறை இருக்கும் துறை என்பதால் சம்பளம் பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வப்போது உலகை தேக்கும் பொருளாதார மந்தத்தால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு திடீர் திடீரென வேலை இழப்பு ஏற்படுகிறது. எத்தகைய வீழ்ச்சியையும் தாக்குப்பிடித்து, முன்னேற்றம் கண்டு இயங்கும் துறைகள் மிக சிலவே.

உணவு, உடை, கல்வி ஆகிய துறைகளுடன் மருத்துவத் துறையும் இவற்றில் ஒன்று. எனவே மருந்தாய்வுத் துறையில் பணியாற்றுபவர்கள் Recession என்ற சொல்லுக்கு அஞ்சவேண்டிய நிலையே இருக்காது. பன்னாட்டு மருந்தாய்வு நிறுவனங்களின் கழுகுப்பார்வை ஏற்கனவே இந்திய சந்தையின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது. ஏனெனில் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மக்கள் தொகை, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம். ஆய்வுகளுக்கு துணை செய்யும் தகவல் தொழில்நுட்பம் குறித்த போதுமான அறிவும் இந்தியர்களுக்கே அதிகம்.

உலகத் தொடர்புமொழியான ஆங்கிலத்திலும் நாம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளோம். குறைந்த செலவில், தரமாக பணிகளை முடித்துத் தருபவர்கள் என்ற பெயரும் இந்தியர்களுக்கே உரித்தானது. உங்கள் குழந்தைகள் பத்தாவது, +2 படித்துக் கொண்டிருந்தால், அவர்களின் நிச்சயமான எதிர்காலத்துக்கு இத்துறையில் ஈடுபடுத்த பரிசீலனை செய்யுங்கள். எம்.எஸ்சி., (க்ளினிக்கல் ரிசர்ச்) என்ற முழுநேர, இரண்டாண்டுகள் படிப்பு பல பல்கலைக் கழகங்களால் இந்தியாவில் வழங்கப் படுகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் முழுநேர, பகுதிநேர, தொலைதூர மற்றும் இணையவழி மூலமாகவும் இப்பயிற்சியினை வழங்குகின்றன.

- யுவகிருஷ்ணா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: