இளங்கோவன் குறித்து பேச திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது?: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கேள்வி

சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சண்முகம், ரங்கபாஷ்யம், சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்த ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது.

சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈவிகேஎஸ் சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை.

ஒரே நபர் பதவி சுகத்துக்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவதுதான் கேவலமான செயல். பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை. பதவி சுகத்திற்காக பல கட்சிகளுக்கு இடம்பெயர்ந்து இருந்த இடத்திற்கு விசுவாசமும், நன்றியும் இல்லாத திருநாவுக்கரசர் தேசம் போற்றும் தந்தை பெரியாரை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது. எங்களது தன்மானத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இனிமேலும் இதுபோன்று தரமற்ற விமர்சனங்களை செய்தால் இவர் வீட்டுவசதிதுறை அமைச்சராக இருந்தபோது மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் மறைந்த இரவு அன்று என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களை எல்லாம் வெளியிட நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: