தையல் ஆசிரியர் தேர்வில் குளறுபடியா? தேர்வு எழுதியோர் புகார்

சென்னை: தொழில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பட்டியலில் ஆசிரியர் தேர்வு வாரியம் குளறுபடிகளை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தொழில் ஆசிரியர்களான தையல், ஓவியம், விவசாயம், இசை உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவு பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு காலதாமதம் ஆனது. இதற்கிடையே, கல்லூரிப் பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்தை அடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றுவோர் மற்றும் தனியார் கணினி நிறுவன ஊழியர்கள் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இதையடுத்து, பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி தொழில் ஆசிரியர்களுக்கு நடந்த சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எஸ்டி பிரிவில் இடம் பெற்ற நபர் ஒருவர், அக்டோபர் மாதம் 12ம் தேதி வெளியான இறுதிப் பட்டியலில் விதவை என்ற பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளார். இது குறித்து பலர் ஆட்சேபணை தெரிவித்து வருகின்றனர். இறுதிப் பட்டியல் தயாரிக்கும் போது விதவை என்ற பிரிவின் கீழ் யாரும் தெரிவு செய்யப்படுவதில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மேற்கண்ட பட்டியலில் ஒரே நபர் எஸ்டி பிரிவிலும், விதவை என்ற பிரிவின் கீழும் இடம் பெற்றது எப்படி என்று தேர்வு எழுதியவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: