அமைச்சர் காமராஜின் உறவினரான கான்ட்ராக்டர் வீட்டில் ஐ.டி. ரெய்டு: அடுத்தடுத்து நடக்கும் சோதனைகளால் : தமிழக அரசியலில் பரபரப்பு

மன்னார்குடி: மன்னார்குடியில் அமைச்சர் காமராஜின் உறவினரான கான்ட்ராக்டர் மனோகரனின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறையின் தொடர் சோதனைகள், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கனகாம்பாள் கோயில் தெருவை சேர்ந்தவர்  மனோகரன் (57). இவர் அதிமுகவில் ஊராட்சி செயலாளராக உள்ளார். தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குனராகவும் உள்ளார். மாநில அளவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறையில் ஒப்பந்தக்காரராக பல்வேறு பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க், ஜல்லி உடைக்கும் பிளான்ட்,  டி.எம்.ஏ.டவர்ஸ் என்ற வணிக வளாகம் என பல தொழில்கள் உள்ளன.

மணல் அள்ளும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.  இவர் அமைச்சர் காமராஜின் தூரத்து உறவினர். இந்நிலையில் மனோகரன் வெளியூர் சென்றிருந்த நிலையில்  நேற்று காலை 10 மணியளவில் திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள மத்திய வருமான வரித்துறையை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். மன்னார்குடியிலுள்ள மனோகரனுக்கு சொந்தமான வீடு, பந்தலடி பகுதியில் உள்ள டவர்ஸ்,  பெட்ரோல் பங்க், அலுவலகம், நீடாமங்கலம் அருகில் உள்ள சாலை பணிகளுக்காக உள்ள பிளான்ட் மற்றும் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் ஆகிய 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

அதிகாரிகளுக்கு  பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய போலீசார்  வந்திருந்தனர். சோதனை முடிவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் செய்யாத்துரை வீடு, அலுவலகம், முட்டை கொள்முதல் விவகாரத்தில் கிறிஸ்டி ஃபுட் அலுவலகம், குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தமிழக டிஜிபி ராஜேந்திரன் வீடு என வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் காமராஜின் உறவினரும், அதிமுக நிர்வாகியுமான மனோகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: