முக்குலத்தோர் புலிப்படை விவகாரம் : தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து விசாரிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணனின் மனைவி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.முக்குலத்தோர் புலிப்படை கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன் சார்பாக அவரது மனைவி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 10ம் தேதி ஒரு வழக்கு பதிவு செய்திருந்தார். அதில், “கூவத்தூர் விவகாரத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் பட்டியலிட்டு வெளியே கொண்டு வருவேன் என தெரிவித்த எனது கணவர் மீது துணை ஆணையர் அரவிந்தன் பொய் வழக்கு பதிவு செய்து எங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இதற்கு தமிழக அரசும் உடந்தையாக இருந்துள்ளது. அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனு குறித்து எந்த ஒரு விசாரணையையும் தேசிய மனித உரிமை ஆணையம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணன் மனைவி லாவண்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “எனது கணவருக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த துணை ஆணையர் அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்ககோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: