எஸ்பிஜி அதிகாரிகள் நியமனம் பற்றி ராகுல் தெரிவித்த கருத்து அடிப்படை ஆதாரமற்றது : உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: ‘‘எஸ்பிஜி அதிகாரிகள் நியமனம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து அடிப்படை ஆதாரமற்றது’’ என உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவினர்(எஸ்பிஜி) பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அதன்படி சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் கல்வியாளர்கள் இடையே சமீபத்தில் பேசிய ராகுல், ‘‘கல்வி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உட்பட பல அமைப்புகளை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதமர் மோடி பதவி ஏற்றதும், குஜராத்தை சேர்ந்த ஒருவர் எஸ்பிஜி தலைவராக நியமிக்கப்பட்டார். குறுகியக் காலத்தில் அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். அவர் என்னிடம் கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ் தேர்வு செய்த அதிகாரிகளை எஸ்பிஜியில் நியமிக்கும்படி என்னிடம் கூறினர். இதற்கு நான் மறுத்தேன். அதனால் அந்த பதவியில் இருந்து நான் அனுப்பப்பட்டேன்’ என்றார். ஒரே கொள்கை அடிப்படையில் இந்த நாடு இயங்கங்கூடாது’’ என்றார். இந்நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எஸ்பிஜி கட்டுகோப்பான அமைப்பு. அதில் நடைபெறும் நியமனம் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து அடிப்படை ஆதாரமற்றது. எஸ்.பி.ஜி பாதுகாப்பில் உள்ள நபர் இதுபோல் கருத்து தெரிவித்திருப்பது துரதிருஷ்டம். ராகுலிடம் இதுகுறித்து பேசியது இல்லை என  எஸ்பிஜி முன்னாள் இயக்குனர் விவேக் வஸ்தவா கூறியுள்ளார். ‘எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளவர்களிடம் பாதுகாப்பு விஷயமாக பேசியுள்ளேன். ஆனால் ராகுலிடம் அதிகாரிகள் நியமனம் குறித்தோ, நான் விலகியதற்கான காரணம் குறித்தோ பேசியதில்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: