2008ல் ஏற்பட்டதுபோல் சர்வதேச நிதி நெருக்கடி மீண்டும் ஏற்பட வாய்ப்பு: துபாய் மால்கள் இப்போதே ஈ ஓட்டுகின்றன

புதுடெல்லி: கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியை போல், இந்தாண்டில் மீண்டும் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச நிதி நெருக்கடி கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது, அமெரிக்காவில் உள்ள லேமன் பிரதர்ஸ் வங்கி திவால் நிலைக்கு சென்றது. அதிகளவில் கொடுக்கப்பட்ட கடன்கள் திருப்பி செலுத்தப்படாததால், அது  முடங்கியது. அமெரிக்க பங்குச் சந்தையும் சரிந்தது. இதே போன்ற நெருக்கடியில் பல நாடுகள் சிக்கின. இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் அதிகளவிலான பணத்தை அச்சடித்தன.  இவற்றில் 290 டிரில்லியன் டாலர் அளவுக்கு சந்தையில் பங்குகள், பாண்டுகள் என முதலீடு செய்யப்பட்டன. மத்திய வங்கிகள் வட்டி வீதத்தின் அளவை குறைவாக பராமரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பங்குச்  சந்தைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இது மிகப் பெரிய அபாயம் என கூறப்படுகிறது.

      கடந்த 2008ம் ஆண்டு உலகம் சந்தித்த நிதி நெருக்கடி, இந்த ஆண்டில் மீண்டும் ஏற்படுமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா, துருக்கி, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய  நாடுகளின் கரன்சி மதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி பல்வேறு உலக நாடுகளும், சர்வதேச சந்தைகளும் அமெரிக்க டாலரிலேயே முதலீடுகளை குவிக்கின்றன. நிதிச்சந்தையில் தற்போதுள்ள தடுமாற்றத்துக்கு வளரும் நாடுகளின் பொருளாதார கொள்கைகளே காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகும், வளர்ந்த நாடுகள் பலவற்றில்  பொருளாதர வளர்ச்சியும், முதலீடுகளின் அளவும் குறைவாகவே உள்ளது. துபாயில் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன. இந்தாண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை 26 பில்லியன் திர்காம் மதிப்பிலான காசோலைகள் பணம்  இல்லாமல் திரும்பியுள்ளன. கைது நடவடிக்கைக்கு பயந்து பலர் துபாயை விட்டு குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர்.

 இங்குள்ள அரேபியன் சென்டர், சன்செப் மால், எமிரேட்ஸ் டவர் போன்ற பிரபல மால்களில் கடைகள் காலியாக கிடக்கின்றன. துபாய் வர்த்தக பகுதிகளில் கடைகள் காலியாக இருப்பது கடந்த 35 ஆண்டுகளில் இதுவே முதல்  முறை. 2300 திர்காமுக்கு விற்கப்பட்ட ஒரு சதுர அடி இடம் தற்போது 600 திர்காமுக்கும் குறைவாக விற்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது, அமெரிக்கா-சீனா வர்த்தக போர் போன்றவை, மீண்டும் சர்வதேச நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. பல நாடுகளில் பணவீக்கம் கட்டுக்குள்  இருப்பதால், முன்பு ஏற்பட்ட அளவுக்கு தற்போது சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், கொலம்பிய பல்கலையின் சட்ட பேராசிரியர் கேத்ரின் கூறுகையில்,  ‘‘கடந்த நிதி நெருக்கடிக்கு சிக்கலான நிதி ஒழுங்குமுறைகளே காரணம். அந்த நிலை இன்னும் நீடிப்பதால், விரைவில் மற்றொரு நிதி நெருக்கடி ஏற்படலாம்’’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: