10 கோடி குடும்பங்கள் இலவச சிகிச்சை பெறும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று தொடங்குகிறார் மோடி: ஜார்கண்ட் மாநிலத்தில் விழா

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு புதிய திட்டம் ஒன்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டது. மேலும், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’  என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது.இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தை சேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழு வகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவு தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், வீதியில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,  கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கல்தச்சர்கள், கூலித்தொழிலாளர்கள், தினக்கூலிகள், பெயின்டர்கள், காவலாளிகள், தலை சுமை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துவிட்டன. தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதில்  இணையவில்லை. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார். இதுபற்றி நிதி ஆயோக் உறுப்பினரும், இந்த இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தின்  வடிவமைப்பாளருமான வி.கே.பால் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளான செப்டம்பர்  25ம் தேதி இந்த திட்டம் முறைப்படி செயல்படும் என்றார்.

ஒடிசாவை இணைக்க பிரதமர் வேண்டுகோள்

பிரதமர் மோடி நேற்று ஒடிசா மாநிலத்தில் தல்ேசர் பகுதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பங்கேற்றார். மத்திய அரசின் இலவச சுகாதார திட்டத்தில் ஒடிசா  இதுவரை இணையாதது குறித்து பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டு பேசினார். அவர் கூறும்போது, ‘ ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாளை(இன்று) தொடங்கப்படுகிறது. இதில் ஒடிசா மாநிலத்தையும் இணைக்கும்படி முதல்வர்  நவீன் பட்நாயக்கிற்கு  வேண்டுகோள் விடுக்கிறேன். மத்திய அரசின் திட்டங்கள் முறைப்படி மக்களைப்போல் சேர்வதில்லை. அதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரச்னையை தீர்க்க எந்தவழியும்  இல்லை’ என்றார்.

‘சட்டீஸ்கர் மக்கள் நிலையான

அரசை தேர்வு செய்வார்கள்’

சட்டீஸ்கரின் ஜான்ஜ்கிர் சம்பா பகுதியில் நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘குற்றச்சாட்டுக்கள், புரளிகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படும் நிலையிலும் சட்டீஸ்கர் மக்கள்  நிலையான அரசை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன். மத்திய அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் தான் உருவாக்கப்படுகிறது. புதிய, நவீன சட்டீஸ்கரை உருவாக்க பாஜ விரும்புகிறது. இவ்வாறு  மோடி பேசினார்.

தல்சேர் உரத்தொழிற்சாலை பிரதமர் அடிக்கல் நாட்டினார்

ஒடிசா மாநிலத்தில் உள்ள தல்ேசரில் ரூ.13 ஆயிரம் கோடியில் உரத்தொழிற்சாலை அமைப்பதற்கான தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.    2002ம் ஆண்டு இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. அதன்பின், 2011 ஆகஸ்டில் மீண்டும் இந்த தொழிற்சாலையை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தல்சேர்  பகுதியில் நிலக்கரி  வாயுவின் மூலம் உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:  இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள உரத்தொழிற்சாலை இன்னும் 3 ஆண்டில் உற்பத்தியை தொடங்கும். அந்த தொடக்க விழாவுக்கு நான் மீண்டும் இங்கு வருவேன்.

இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதே  இலட்சியம். ஒடிசா அரசில் உள்ள ஊழல் மற்றும் முடிவெடுப்பதில் தாமதம் ஆகியவற்றால் மாநிலம் வளர்ச்சி பெற முடியாமல் போனது.முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சிக் காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மூடிய தொழிற்சாலைகளை திறக்க அந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், எங்கள் அரசு தொழிற்சாலைகளை  புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் அனைத்தும் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் வாயு மூலம் இந்த உற்பத்தி பணி நடக்கும். நிலக்கரி  எரிவாயுவாக மாற்றப்படும் தொழில்நுட்பம் இந்தியாவிலே முதல்முறையாக இங்குதான் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: