சென்னை: பள்ளி மாணவிகளை மர்ம நபர்கள் சிலர் வீடியோ எடுத்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூரில் உள்ள கேசரி அரசினர் மேனிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பஸ் போக்குவரத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, பள்ளி முடிந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்ததிற்கு வரும் மாணவிகளை மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக படமெடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ராயப்பேட்டை சாலையில் நேற்று காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். மாணவர்களுடன் அதிக அளவில் மாணவிகளும் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.