புதுச்சேரி: ஏடிஎம் மோசடியில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் முறையிட்டுள்ளனர். புதுவையில் போலி ஏடிஎம் கார்டு மோசடியில் சிபிசிஐடி போலீசார் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியை 82 நாட்களாக தேடி வந்த நிலையில் 11ம்தேதி சென்னையில் அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் புதுச்சேரி கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது சந்துருஜி பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதுவும் தெரியாது... என்ற ஒரே வார்த்தையை கூறியதால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 26ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கிருஷ்ணசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சந்துருஜியை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கேட்டு சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதை ஏற்றுக்கொண்டு நீதிபதி, போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதி வழங்கும்பட்சத்தில் புதுவையில் யார், யாருடன் சந்துருஜிக்கு தொடர்பு இருந்தது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த, புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் சந்துருஜி இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க பல்வேறு உதவிகளை செய்த தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த சில அரசியல் பிரபலங்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!