சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நாளை கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இடையில் சில ஆண்டுகள் கல்வி வளர்ச்சி நாள் பெரும்பாலும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், பெயரளவில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவசர சுற்றறிக்கை நேற்று அனுப்பியுள்ளனர். அதில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
