அரக்கோணம் : அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் உடனடியாக கண்டுபடிக்கப்பட்டதால் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திலிருந்து தப்பியது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள் நேற்று மதியம் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக, புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் பகுதியில் தற்காலிகமாக பக்கவாட்டில் இரும்பு சட்டம் வைத்து கிளாம்ப் மூலம் இணைத்து சரி செய்தனர். இதையடுத்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அரைமணி நேரத்திற்கு பிறகு காலதாமதமாக புறப்பட்டு குறைந்த வேகத்தில் சென்றது. உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டறியப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயிலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!