தமிழகம் முழுவதும் 39 ஆயிரம் ஏரிகளில் ஆக்கிரமிப்பு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

* தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன. இவற்றில் 14,098 நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 39 ஆயிரம் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் ஆக்கிரமிப்பாளர்கள் பல அடுக்கு கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மக்களுக்கு நீர் ஆதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு கொண்டுவந்தது.

இந்த சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து அது சம்பந்தமான பதிவேடுகளை தயாரிக்க வேண்டும். வருவாய் ஆவணங்கள் அடிப்படையில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் கண்டறியப்பட்டு அவை மீண்டும் கையகப்படுத்தப்பட வேண்டும். அவற்றை ஆவணங்களில் உள்ள கணக்குகளின்படி அளவீடு செய்ய வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகியும் இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

கடந்த 2017-18ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்கக் குறிப்பின்படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் 14,098 ஏரிகள் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த துறையின் கீழ் உள்ள 21 துணை மண்டலங்களில் உள்ள ஏரிகள் சர்வே செய்யப்படவில்லை.

கீழ் பாலாறு துணை மண்டலம், திருவள்ளூர் கொசஸ்தலை ஆறு மண்டலம், உள்ளிட்ட மண்டலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஏரிகளில் மட்டுமே சர்வே செய்யப்பட்டுள்ளன. சர்வே செய்யப்பட்டுள்ள இடங்களில் கூட அரசு அரை மனதுடன், உரிய முறையில் இல்லாமல் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமே என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. ஏரிகளின் பரப்பு, ஆக்கிரமிப்புகள் குறித்த சரியான தகவல்களைக் கூட அரசு தெரிவிக்க மறுக்கிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து, அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் இளந்திரையன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: