குஜராத்தில் விவசாயிகள் 5 ஆயிரம் பேர் தற்கொலைக்கு அனுமதி கோரி மனு

அகமதாபாத்: குஜராத்தில் தற்கொலை செய்து கொல்ல அனுமதிக்குமாறு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கதிராமங்கலம், நெடுவாசல் போல குஜராத் மாநிலம் பாவ்நகரில் அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 150 நாட்களை கடந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதால் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலங்களை பறித்துவிட்டால் வாழ வழியில்லை என்பதால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்துள்ளனர். குஜராத் அரசும் மின் உற்பத்தி நிறுவனமும் காவல்துறையை ஏவி விட்டு தாக்குதல் நடத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாவ்நகரை சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை கடந்த டிசம்பரில் அரசு தொடங்கியது முதலே விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: