சென்னை: இந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் கூறியது: கரூர் கூட்ட நெரிசல் எவ்வளவு துயரமான சம்பவம் என்பதை அனைவரும் அறிவார்கள். விஜய் பேசும்போது, அதற்கு முழுக்க முழுக்க திமுகதான் காரணம். ஸ்டாலின் சார், ஸ்டாலின் அங்கிள் காரணம் என்று விஜய் பேசினார். ஆனால் அப்படி பேசியதற்காக விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காரணம் அந்த வழக்கை சிபிஐ விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எந்த ஒரு கட்சி தலைவரும் தன் சொந்தக் கட்சியினருக்கு இப்படி ஒரு துயரம் ஏற்படுவதை விரும்ப மாட்டார் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எவ்வளவு கண்ணியமாக பேசினார்.
அவர் தவெகவுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் எல்லாம் எங்கள் கொள்கை தலைவர்கள் என்று தம்பி விஜய் சொன்னார். அந்த கொள்கைகளை உங்கள் ரசிகர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டாமா? எம்ஜிஆர் அரசியலில் இருந்தபோது அண்ணாவும், பெரியாரும் அவரின் கொள்கை தலைவர் என்றார். பாடல்கள் மூலமே அவர்களின் கொள்கைகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.
எனக்கும் தம்பி விஜய்யின் படங்களை பார்க்கும்போது ஜாலியாக இருக்கும். கில்லி படம் ரிரீலிஸ் ஆனபோது கூட என் பேரக்குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்த்தேன். படத்தை பயங்கரமாக ரசித்தேன். சினிமாவிலேயே இருந்தால் தான் அவரை ரசிப்போம். ஏதோ ஆர்வ கோளாறு காரணமாக விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.
தேர்தலுக்கு பிறகு ஓடி ஒளிந்துவிடுவார். அவரால் ஸ்டாலின்போல கெத்தா, தில்லாக நிற்க முடியுமா? டெல்லியில் அவர்களை எதிர்த்து சண்டை போட முடியுமா? டெல்லிக்கு இவரைப் பற்றி தெரியும். டோய் என்றால் ஓடி ஒளிந்துவிடுவார். டெல்லியை எதிர்த்து சண்டையிட நமக்கு ஒருவர் தேவை. அதற்காக தான் திமுகவை ஆதரிக்க வேண்டியது அவசியம்.
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அதிமுக, எப்போது ஆரம்பித்தார்கள் என்று எனக்கு தெரியும். பழனிசாமிக்கு தெரியாது. அதிமுக, ஆரம்பத்தில் இருந்து எம்ஜிஆர் மறையும் வரை இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன். அதன் பின், திமுகவுக்கு ஓட்டு போட்டு வருகிறேன். வேறு எந்த கட்சிக்கும் போட மாட்டேன். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் வந்தது கொள்கை தகராறு அல்ல. பங்காளி தகராறுதான். நான் கொரோனா காலத்தில் வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை.
ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடையுடன், கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று வந்தார். அவர் தலைவர். நான் தொண்டன். தற்குறிகளே… ஸ்டாலினின் கேரக்டரை புரிந்து கொள்ள மாட்டேங்கிறீர்களே. உதய சூரியனை விட்டுவிட்டு, இரட்டை இலை, விசில் என வேறு எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அது தாமரைக்குத்தான் செல்லும். இதில், உள்குத்து இருக்கிறது; ஏமா ர்ந்து விடாதீர்கள். வடநாட்டவர் உங்களை ஆள வேண்டுமென்றால் அங்கு ஓட்டு போடுங்கள். தமிழக ஆட்சி வேண்டுமென்றால் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள். விஜய் நாம் அனுப்பாவிட்டாலும் அவரே சினிமாவுக்கு போய்விடுவார். அவரது அடுத்த படத்திற்காக நான் காத்திருக்கிறேன்.
