சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏப்.30-ல் வெளியாகும் இப்படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் ராஜா கூறியதாவது:
செல்போன் இல்லாத காலத்தில் 1991-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போன்ற கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த கதை இருக்கும். படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் அதுவே முழு படம் கிடையாது. 7 கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருக்கும். வன்முறை காட்சிகள் இருக்காது.
மமிதா பைஜு வழக்கமான ஹீரோயினாக இதில் வந்து போகமாட்டார். அவருக்கு வலுவான வேடம் தந்துள்ளேன். சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிகுமார், பிருத்வி பாண்டியராஜன், ஜெயராம் உள்பட எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. அவர்களின் லுக்கிலும் மெனக்கெட்டு மாற்றம் செய்திருக்கிறோம். இப்போது போரினால் கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது போல் இதற்கு முன்பும் நடந்துள்ளது. அது படத்தில் சில காட்சிகளில் எதிரொலிக்கும்.
