டி.வி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர், ராணவ். தற்போது ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். வரும் 24ம் தேதி படம் திரைக்கு வருகிறது. நடித்த அனுபவம் குறித்து ராணவ் கூறுகையில், ‘இதற்கு முன்பு ‘நிலா காலம்’, ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய படங்களை வழங்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அறிமுகமாவது என்பது, எனது கனவு நனவான தருணமாகும். தமிழ் படவுலகில் அவரது பயணம் இன்ஸ்பயரிங்கானது மட்டுமல்ல, மனித உணர்வுகளை கொண்டாடும் வெற்றிப் படங்களை அவர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் நான் நடிக்கிறேன் என்பது எனக்கு கூடுதல் ஸ்பெஷலாகும்.
காதல், உண்மை, குழப்பம், தன்னை அறிதல் போன்ற உணர்வுப்பூர்வமான அடுக்குகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன். உறவுகளுக்கு இடையிலான அமைதியை, வார்த்தைகளை தாண்டி புரிந்துகொள்ளும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். இது வெறும் படம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பயணம்’ என்றார். ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாதன், அர்ச்சனா, பாலாஜி சக்திவேல், சி.ரங்கநாதன், ரவிமரியா நடித்துள்ள இப்படத்தை கிரிஜா வரதராஜ் தயாரிக்க, தமிழகம் முழுவதும் குகன் திரைக்கு கொண்டு வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வைரமுத்து, விவேக் பாடல்கள் எழுதியுள்ளனர்.
