சென்னை: வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களாக ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடந்தது. 140 கல்லூரிகளை சேர்ந்த 1,150 மாணவர்கள் பங்கேற்றனர். ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. முதல் நாள் நிகழ்ச்சியில் ‘96’ பிரேம் குமார், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ், விஜே சித்து, ஹர்ஷத்கான், சாய் அப்யங்கர், ஷிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் 2வது நாள் நிகழ்ச்சியில் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் பங்கேற்றனர்.
அப்போது தனுஷ் பேசுகையில், ‘நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசீர்வாதமாக நினைத்து, அதை தக்கவைத்துக்கொள்ள இரவும், பகலும் அயராது பாடுபட வேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது எனது திரைப்பயணத்தில் 2வது அத்தியாத்தை தொடங்கியுள்ளேன். எனக்கும், வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நான் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் படப்பிடிப்பு இங்குதான் நடந்தது. மேலும், ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் நான் பூட்ஸ் காலால் அடி வாங்கினேன்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள்தான் நம்முடைய வாழ்நாளில் மிகச்சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன், மேனிஃபெஸ்டேஷன் ஆகியவதைான் நீங்கள் அடையத்துடிக்கும் உயரங்களை அடைய உதவும். தயவுசெய்து இதை பின்பற்றுங்கள்’ என்றார். அடுத்து பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், ‘எனது கனவு புராஜக்ட் என்றால், அது தனுஷ் நடிக்க இருக்கும் ‘வட சென்னை 2’ என்ற படம்தான். தனுஷ் நடித்துள்ள ‘கர’ என்ற படம், வரும் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது’ என்றார்.
