ஆடிப் பெருக்கில் வெறிச்சோடிய பவானி கூடுதுறை

பவானி :  கொரோனா தடை உத்தரவால் ஆடிப்பெருக்கான நேற்று பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் பகுதியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடியது. ஆடிப்பெருக்கு விழா பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில், ஏராளமானோர் கூடுதுறையில் புனித நீராடி, இறைவனை வழிபட்டுச் செல்வர். மேலும், திருமணத் தடை, தோஷ நிவர்த்தி பரிகாரம் மற்றும் உயிரிழந்த தங்களின் முன்னோர்களுக்கு திதி, பிண்டம் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறும். பெண்கள் புதிதாக மஞ்சள் தாலிக் கயிறு மாற்றுதல், புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு நடத்துவர். காவிரி படித்துறைகளில் பழங்கள், காய்கள், தானியங்களை வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடும் நடத்தப்படும். இதற்காக, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்க வருவர். இதனால், வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி, ரோட்டோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படும். பக்தர்களின் நடமாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் காணப்படும். ஆனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களை மூட உத்தரவிட்டது. இதனால், பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.  சங்கமேஸ்வரர் கோயில் மூடப்பட்டதால் வழிபாடுக்கும் அனுமதியில்லை. பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில் ரோட்டின் நுழைவாயில்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. காவிரி ஆற்றின் படித்துறைக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கோயில் பகுதிக்கு பக்தர்கள் செல்வது தடுக்கப்பட்டது. இதனால், மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் வளாகம் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது….

The post ஆடிப் பெருக்கில் வெறிச்சோடிய பவானி கூடுதுறை appeared first on Dinakaran.

Related Stories: