சென்னை: சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ படத்தின் கதையை திடீரென இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மாற்றிவிட்டதாக ராஷ்மிகா புகார் கூறியுள்ளார். சல்மான் கான், ராஷ்மிகா நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற இந்தி படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படம் தோல்வி அடைந்தது. படத்தின் தோல்விக்கு சல்மான் கான் நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வராததுதான் காரணம் என முருகதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் ‘மதராஸி’ படத்தை முருகதாஸ் இயக்கினார்.
‘மதராஸி’ பட ஹீரோ நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்ததால் அந்த படம் என்ன வெற்றி பெற்றுவிட்டதா? என முருகதாஸை கிண்டலடிக்கும் விதமாக சல்மான் கான் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ராஷ்மிகாவிடம் நேற்று முன்தினம் வீடியோ பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘சல்மான் கான், முருகதாஸ் இடையே நடந்த கருத்து மோதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் முருகதாஸ் சார் என்னிடம் சொன்ன கதையை படமாக எடுக்கவில்லை. படப்பிடிப்பில் கதை மாறி இருந்தது. இது எனக்கு அதிர்ச்சியை தந்தது. ஆனாலும் சினிமாவில் இது எல்லாம் சகஜம் என்பதால் நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை’’ என்றார்.
