குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கென் கருணாஸ், பிறகு `அசுரன்’, `வாத்தி’, `விடுதலை 1’, `விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள `யூத்’ என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு திரைப்படம் இயக்கும் எண்ணம் இல்லை. நான் உருவாக்கிய ‘வாடா ராசா’ என்ற ஆல்பத்தை வெளியிட சொல்லி தனுஷ் சாரை சந்தித்தேன். அப்போது அவர், தான் நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற அழைத்தார். `திருச்சிற்றம்பலம்’ படத்தில் சேர்ந்தேன்.
பிறகு ஒரு கதை எழுதினேன். இப்போது இயக்குனராகி விட்டேன். இதற்கு காரணம் தனுஷ் சார். ஜாலியான கதையை எழுதி ஆர்ஜே பாலாஜியிடம் சொன்னபோது, ‘இதை நீயே இயக்கி நடி’ என்று உற்சாகப்படுத்தினார். பிறகு எனது மொபைலில் பாதி படத்தை படமாக்கி, தயாரிப்பாளரிடம் ஒளிபரப்பி ‘யூத்’ பட வாய்ப்பை பெற்றேன். முதலில் வேறொரு தலைப்பை யோசித்தேன். ஆனால், கவர்ச்சியான தலைப்பு வேண்டும் என்று நினைத்தபோது, `ஹேப்பி எண்டிங்’ என்ற படத்தின் இயக்குனர் அம்மாமுத்து சூர்யா, விஜய்யின் `யூத்’ தலைப்பை சிபாரிசு செய்தார்.
படிக்கும் காலக்கட்டத்தில் கதை நடப்பதால் இத்தலைப்பு பொருத்தமாக இருந்தது. நிஜத்தில் நான் சிம்பு ரசிகன். இதை நான் தனுஷ் சாரிடம் கூட சொல்லியிருக்கிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. எனினும், ஷூட்டிங்கில் சிம்புடன் ஒரு போட்டோவாவது எடுக்க வேண்டும்’ என்றார்.
