சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ 3வது பாடல் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் 3வது பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் டிவி நெட்வொர்க்  தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா  இயக்க, வெற்றி ஒளிப்பதிவு  செய்கிறார். இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா,  குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். எந்திரன், பேட்ட ஆகிய படங்களுக்கு பிறகு சன்  பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள 3வது படம் அண்ணாத்த. ஏற்கனவே எந்திரன், பேட்ட ஆகிய படங்களின்  மாபெரும் வெற்றியால் அண்ணாத்த படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும்  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் தீபாவளி  பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில்  வெளியாகிறது. இப்படத்துக்காக இமான் இசையில் விவேகா எழுதிய ‘அண்ணாத்த... அண்ணாத்த...  வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு’ என்ற பாடல் கடந்த 4ம் தேதி மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல் வரிகளுக்கான வீடியோவில் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றிய காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், வெளியான சில மணி நேரங்களிலே யூடியூப்பில்  வைரலானது. தொடர்ந்து அண்ணாத்த படத்தின் 2வது பாடல் கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இமான் இசையில் யுகபாரதி எழுதிய ‘சாரல் காற்றே...’ என்ற பாடலை சித்ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருந்தனர். இதில் ரஜினிகாந்த், நயன்தாரா தோன்றி ஆடிப் பாடிய காட்சிகள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மனதை கொள்ளைகொள்ளும் மெலடி பாடலாக இது உருவாகியுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இமான் இசையில் மணி அமுதவன் எழுதிய இந்த பாடலை அஸிஸ் நகாஷ், ஆண்டனி தாசன், வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். ‘மருதாணி... செவப்பு.. செவப்பு.. மகராணி... சிரிப்பு.. சிரிப்பு..’ என்ற இந்த பாடல் ரசிகர்களை கவரும் துள்ளலான பாடலாக அமைந்துள்ளது. இதில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர். இந்த பாடலுக்கான லிங்க்கை  ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் முதல் 2 பாடல்களை போலவே 3வது பாடலும் யூடியுப்பில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் இந்த மூன்று பாடல்களையும் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories:

More
>