பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:
‘சிக்கிட்டு’ பாடலுக்கு சாண்டி நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டேன், இது 1950 மாடல், பல லட்சம் கிலோமீட்டர் ஓடிருக்கு, பார்ட்ஸ் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது என்றேன். பிறகு என்னை சாண்டி அந்த பாடலுக்கு நன்றாக ஆட வைத்துள்ளார். அனிருத் இந்த சின்ன வயதில் அமைதி, தனிமையை தேடி இமயமலை செல்கிறார். அவரிடம் சிறு வயதிலேயே பெரும் புகழ் சேர்ந்துள்ளது. முன்பெல்லாம் கலாநிதி மாறனுடன் நிறைய பேசுவேன், பிறகு அவருடைய உழைப்பு பற்றி தெரிந்த பிறகு அவர் மீது எனக்கு மரியாதை அதிகமானது. அப்போது முதல் பேசுவதை குறைத்துக்கொண்டேன். அவர் சொல்வதை கேட்பேன்.
‘மாநகரம்’, ‘கைதி’ பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜை அழைத்து கதை கேட்டேன். பிறகு கமலுடன் ‘விக்ரம்’ எடுக்க சென்றுவிட்டார். நானும் வேறு படங்களுக்கு சென்று விட்டேன். 2வது முறை என்னிடம் லோகேஷ் சொன்ன கதையில் முழுக்க முழுக்க வில்லனிசம் இருந்தது. அதன் பிறகு சொன்ன கதைதான் ‘கூலி’. சத்யராஜுக்கும் எனக்கும் பல கருத்து முரண்பாடு இருக்கலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் உள்ள பணக்காரர்களில் ஒருவர் நாகார்ஜுனா. வெங்கட் பிரபு அஜித்துக்கு ‘‘எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது’’ என்ற டயலாக் எழுதியிருப்பார். அதுபோல எவ்வளவு நாள்தான் ஹீரோவாக நடிப்பேன் என நாகார்ஜுனா இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
நான் பஸ் கண்டக்டராக ஆவதற்கு முன்னதாக என் அண்ணன்தான் என்னை நல்ல கல்லூரியில் பணம் கட்டி படிக்க வைத்தார். பரீட்சைக்கு செலுத்த வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டேன். பணம் தீர்ந்த பிறகு மீண்டும் ஊருக்கு சென்றபோது என்னை ஒரு அரிசி மண்டியில் கூலி ஆள் வேலைக்கு சேர்த்துவிட்டார் என் அப்பா. அந்த கூலி வேலையில் இருந்து பிறகு பஸ் கண்டக்டர் வேலைக்கு சேர்ந்தேன். பெங்களூரில் இருந்த இந்த செடியை கே.பாலசந்தர் சென்னைக்கு எடுத்துவந்து வளர்த்து எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம் போன்ற இயக்குனர்களிடம் கொடுத்தார்.
இப்போது அந்த செடி மரமாக வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு முறை இந்த மரம் சாய்ந்துவிடும் என்று சொல்லும்போது ரசிகர்கள் கைகொடுக்கின்றனர். நமக்குள் இரண்டு குரல் கேட்கும், ஒன்று கடவுள் குரல் மற்றொன்று நமது குரல். கடவுள் குரல் எப்போதும் பிறர் நலனைத்தான் சொல்லும். நமது குரல் நமது நலனை மட்டுமே சொல்லும். இறைவன் குரல் கேட்டு நடந்ததால்தான் நான் குடும்பத்துடன் மனநிம்மதியாக இருக்கிறேன். இந்த கெட்ட பையனை கட்டிக்கொண்ட லதா மாதிரியான நல்ல மனைவியும் கிடைத்தார். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்தை வைத்து 25 படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமன், விழாவில் ரஜினியுடன் தனது திரைப்பயணம் குறித்து பேசியது பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர் கான் பேசுகையில், ‘இப்படத்தில் நான் நடிப்பதற்கு ரஜினிகாந்த் சார் மட்டுமே காரணம். அவரது புன்னகை, கண்கள், எனர்ஜி ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கதை கூட கேட்கவில்லை. பணம் கேட்கவில்லை. தேதி விவரங்கள் பற்றி கூட கேட்கவில்லை. எப்போது படப்பிடிப்பு என்று மட்டும்தான் கேட்டேன்’ என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘‘நான் ‘மிஸ்டர் பாரத்’ என்ற படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து ரஜினி சாருடன் நடிக்கிறேன். ஒரு மனிதன் நின்றால் ஸ்டைலாக இருக்கலாம், நடந்தால் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால், தூங்கும்போது கூட ரஜினி ஸ்டைலாக இருக்கிறார். ஸ்டைல் மட்டும்தான் வரும் என்று பார்த்தால், ரஜினி ஒரு நல்ல நடிகர் என்பதும் தெரியும். எமோஷனல் சீன் என்று எடுத்துக்கொண்டால், ‘ஊர தெரிஞ்சுகிட்டேன்’ என்ற பாடலை சொல்லலாம். காதல் என்று எடுத்துக்கொண்டால், ‘காதலின் தீபம் ஒன்று’ என்ற பாடலை உதாரணமாக சொல்லலாம். இதுவரை 7 படங்களில் ரஜினியுடன் நான் வில்லனாக நடித்துள்ளேன். இப்போது முதல்முறையாக அவரது நண்பனாக நடித்துள்ளேன்’’ என்றார்.
ஸ்ருதிஹாசன் பேசுகையில், ‘‘இந்த நாள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். ரஜினி சாருக்கு மிகவும் நன்றி. இப்படத்தில் நடித்திருக்கும் சவுபின் சாகிர் மிகவும் திறமை வாய்ந்தவர்’’ என்றார்.
இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத் பேசும்போது, ‘இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி இணைந்ததை நினைத்து, உலகிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைந்த முதல் நபர் நான்தான். இந்தமுறை நாம் பந்தயத்தில் ஜெயிக்கிறோம். கண்டிப்பாக நமக்கு ‘கப்’ இருக்கிறது. 10 கப், 10 ஃபயர் நிச்சயமாக இருக்கிறது’ என்றார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘‘ரஜினி சாருடன் பயணித்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அவையெல்லாம் அனுபவங்களால் நிறைந்தவை. உங்களுடைய 50 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில், அதே ஆகஸ்ட் மாதத்தில் ‘கூலி’ படம் வெளியாவதை பெருமையாக நினைக்கிறேன். படத்தில் ரஜினி சாரின் கூலி நம்பர் 1421. ஒருநாள் ஷூட்டிங்கில் இருந்தபோது அவர் என்னிடம், ‘இந்த நம்பர் எதற்காக?’ என்றார். அதற்கு நான், ‘என் அப்பாவின் கூலி நம்பர் இது. என் அப்பா பஸ் கண்டக்டர்’ என்றேன். உடனே அவர், ‘இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவில்லை?’ என்றார். உடனே நான், ‘இதுபற்றி என்றாவது ஒருநாள் நீங்கள் கேட்பீர்கள். அப்போது ஒரு மெமரியாக இருக்கும் என்று சொல்லாமல் இருந்தேன். இப்போது என் அப்பா இதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்படுவார்’ என்றேன். இது என் தந்தைக்கு நான் செலுத்தும் டிரிபியூட்’ என்றார்.
மலையாள நடிகர் சவுபின் சாகிர் பேசும்போது, ‘‘நான் என் அம்மா வயிற்றில் இருக்கும்போதே ரஜினி சாரின் தீவிர ரசிகனாக இருந்தேன். காரணம், என் அம்மா ரஜினி சாரின் ரசிகை. இப்போது எனக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர்’ என்றார்.
தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா பேசுகையில், ‘‘ஒரு ‘கூலி’ படம், 100 ‘பாட்ஷா’ படத்துக்கு சமம். ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்திய சினிமாவின் ஒரு தூண். சிகரட்டை தூக்கிப்போட்டு பிடிப்பதை முதல்முறையாக நான் பார்த்தபோதே ரஜினி சாரின் தீவிர ரசிகனாகி விட்டேன்’’ என்றார்.
கன்னட நடிகர் உபேந்திரா பேசுகையில், ‘25 வருடங்களுக்கு முன்பு நான் ரஜினிகாந்தை பார்த்தேன். அன்று முதல் இன்றுவரை நான் அவரை பின்தொடர்ந்து வருகிறேன். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், முதல் ஷோவுக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் ரஜினி சார்’ என்றார்.
