பூரண ஜோதி ஒளிரும் பூசத் திருநாளில் ஓர் அற்புதம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

(5.2.2023 - தைப்பூசம்)

‘‘அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்        

ஆருயிர் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்        

எப்பாரும் எப்பதமும் எங்ஙனும் நான் சென்று       

எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்        

செப்பாத மேனிலை மேல் சுத்த சன்மார்க்கம்        

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடம் வேண்டும்’’

 - என்று,உலகமெங்கும் சமரச சுத்த சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்பதையே அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் தமது அவதார நோக்கமாகக் கொண்டிருந்தார் என்றால் அது மிகையில்லை.

தாமே இயங்கும் தன் நிறைவு உடைய நிறுவனங்களாக ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கமே நடத்த வேண்டும்’ என்று விரும்பினார். விதி செய்தார்.அதன்படி வாழ்க்கைக்குத் தேவையான சமூகக் கல்வியையும், ஆன்மிகக் கல்வியையும், அருள்நெறி ஆற்றலையும் மாணவர்கள் பயில்வதற்கு வசதியாகத்தான் சத்திய தர்மச் சாலைக்கு அருகிலேயே ‘‘சத்திய ஞான சபையை’’யும் நிறுவினார். வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தைப்பூச நாளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். உத்தர ஞான சிதம்பரம் என்ற வடலூரில் அவர் அமைத்த சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருநாளில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் செய்யும் அற்புத ஏற்பாட்டைச் செய்தார்.

`அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மந்திர வாசகத்தைத் தோற்றுவிக்கவும் செய்தார்! ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலரின் தீர்மானமான கருத்து. மும்மூர்த்திகளை வழிபடும் தெய்வங்களாக ஏற்ற இந்து சமயத்தார் அந்த மும்மூர்த்திகளின் பெருமைகளைத் தனித்தனியே சிலாகித்து, சமய பேதம் எங்ஙனும் வளர்ந்து நலிந்த கதையை அனைவரும் அறிவர். இதைச் சாடி, மும்மூர்த்திகளும் ஒருவரே - ஒரு பரம் பொருளின் மகாசக்தியே, இந்த மூன்று தோற்றங்களாகவும் திகழ்கிறது என்று முழக்கமிட்டவர் திருமூலர்!

‘‘ஆதிப் பிரானும் அணி மணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர் மிசையானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்

பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே!’’

- என்று வருத்தமுறும் திருமூலர்;

‘‘சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர்’’ எனக் கூறுகிறார்.

இதில் அவர் ஆதிப்பரம் பொருள் ஜோதி வடிவானத - பேரொளி என்று உறுதி புலப்படக் கூறுகிறார். இப்படி இறைவனை - ஈசனை - பரம்பொருளை ‘ஜோதி’ வடிவில் கண்டவர் திருவருட்பிரகாச வள்ளலார். தைப்பூச நன்னாளில் இன்றைக்கும், வள்ளலார் கண்ட வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனமே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த ஆலயமேகூட ஒரு மனித சரீரத்தின் சூட்சுமங்களைச் சித்தரிக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘இது உள்ளமே பெருங்கோயில் - ஊனுடம்பே ஆலயம்’ என்ற திரூமூலரின் கருத்தை ஒட்டியிருப்பதைக் நாம் உணரலாம். ‘வள்ளல் பிரானார்’ என்று திருமூலர் யாரைக்குறிப்பிடுகிறார்? ஆம். அருட்பிரகாச வள்ளலாரைத் தான்! ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வள்ளலார்தான் முழுதுமாக இந்தக் கருத்துக்களை உணர்ந்த வராகத்திகழ்கிறார்.

பன்மார்க்கம் சன்மார்க்கம் தழைக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் கனவாக இருந்தது. ஆன்ம நேயமும், ஆழ்ந்த மனித நேயமும் கொண்டிருந்த வள்ளலார், ஓர் ஒப்பற்ற மகான் - இறையருளாளர் - சித்தர். ‘எம்மதமும் சம்மதம்’ என்ற அற்புதமான சொற்றொடர் இப்போதெல்லாம் அறிஞர்களிடையே மிகவும் பிரசித்தமாக இருக்கிறது. ‘மந்திரம்’ போன்ற இந்த மகாவாக்கியத்தை முதலில் சொன்னவர் வள்ளலார்தான்’.

திருமூலரைப் போலவே வள்ளலாரும் மகா சிவபக்தராகத் திகழ்ந்தவர். சிவஞானத்தை உலகுக்கு உபதேசிக்கும் ஞான குருவான செவ்வேள் முருகனை நேரடியாகத் தரிசித்தவர்.

சிவபக்தர் என்பதற்காக இதர தெய்வங்களை ஒரு போதும் இகழ எண்ணியவரல்ல வள்ளலார். ஆன்ம நேய ஒருமைப் பாடுடையவருக்கு எல்லா தெய்வ தத்துவமும் ஒன்றே.

பரஞ்ஜோதியான இறைவனை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அவன் ‘ஒருவனே’ தவிர வேறல்ல என்பது வள்ளலாரின் உறுதியான நம்பிக்கை. ஆதிசிவன், அயன், நாரணன் எல்லாம் ஒன்றே என்கிற வள்ளலார், அந்த ஒரு பரம் பொருளை அருகன், புத்தன் என்றாலும் பொருந்தும் என்கிறார். புறச்சமயம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாமே, இறைவனின் சித்து விளையாட்டு. இறைவனை ‘ஜோதி’ வடிவமாக அனைவரும் தொழலாம் என்பது அவர் கருத்து.

உண்மை தானே? உலகம் முழுவதும் ஒளியைத் தேடித் தானே சென்றாக வேண்டும். ஒளியைப் போற்றாதவர் எவர்? ஞான ஒளி, அறிவொளி - என்றெல்லாம் நாம் போற்றுவது எதை? ஜோதியைத் தானே? இறைவன் பேரொளி மயமானவன் என்பதை உலகின் எல்லாச் சமயங்களின் ஆதி நூல்களும் ஒப்புக் கொள்கின்றன.

எவன் தன் உள்ளொளியை உணர்கிறானோ அவன்தான் பேரொளியான, ஜோதி சொரூபனான இறைவனை உணர பல்லவன். இதைச் சாதாரண மக்களுக்குப் புரியும்படி காட்டுவதற்குத் தான் வடலூர் சத்ய ஞான சபையில் அவர் எடுத்தது ‘தைப்பூசத் திருநாள்’ விழாவாகும். தைப்பூசம் திருநாள் அன்று காலையில் சத்ய ஞான சபையில் ஜோதியும், ஞான சபைக்கு இடது பக்கத்தில் சூரியனும் வலது பக்கத்தில் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும் அற்புதத்தைக் காணலாம். இந்த முச்சுடரும் வெளியில் இருப்பது போல ஒவ்வொருவர் உடலிலும் இருக்கிறது என்பதை உணர்த்தி மக்களுக்கு ஆன்மிக அறிவை ஊட்டும் திருவிழாதான் வடலூர் சத்ய ஞான சபையில் தைப்பூசத்தன்று நடைபெறும் ‘ஜோதி தரிசனத்திருவிழா’.

கி.பி.1871 - ஆம் ஆண்டில் திரு.அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் சத்ய ஞானசபைத் திருப்பணியை ஆரம்பித்தார். கி.பி.1872-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் நாள் தைப்பூசத்தன்று சத்ய ஞான சபையில் ‘ஜோதி’ வழிபாட்டை தாமே நடத்தினார். சத்ய ஞான சபைக்குள் அமைதியான ஜோதி வழிபாடு நடைபெற்றது.

இந்த சமயத்தில் சத்யஞான சபையில் எப்படி, எப்படி ‘ஜோதி வழிபாடு’ நடைபெற வேண்டும் என்று சில விதிமுறைகளை ஏற்படுத்தினார். சத்ய ஞான சபைக்குள் அருட்பெரும் ஜோதியைத் தவிர வேறு ஒன்றுமே இருக்கக் கூடாது. ஜோதியின் சந்நதியில் குத்து விளக்கு, அகல் விளக்கு போன்றவைகளை ஏற்றி வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அவைவெறும் அலங்காரப் பொருள் ஆகிவிடும். எனவே ஜோதியின் சந்நதியில் எந்த அலங்காரமும் இருக்கக் கூடாது. சத்ய ஞான சபைக்குள் அருட்பெருஞ் ஜோதியைத் தவிர வேறு கடவுளர்களின் சிலைகளோ. படங்களோ, வேறு பொருள்களோ எதுவுமே இருக்கக் கூடாது.

சத்ய ஞான சபைக்குள் மேள தாளங்கள் நடக்கக் கூடாது. ஜோதிக்கு நைவேத்தியமாக எந்தவொரு பொருளையும் வைக்கக்கூடாது. ஜோதிக்கு தீபாராதனை எதுவும் காட்டக்கூடாது. அருட்பெருஞ்ஜோதியை அப்படியே நேரில் பார்த்து இடைத்தரகர், பூசாரி, அர்ச்சகர் என யாரும் இல்லாமல் மக்கள் வழிபட வேண்டும்.

சத்ய ஞான சபைக்குள் இருந்து வழிபடும் போது மற்றவர்கள் வழிபாட்டுக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெருஞ்ஜோதி’ என மெல்லெனக் கூறித் துதிக்க வேண்டும். தினந்தோறும் ஆறுகாலமும் ஜோதி வழிபாடு செய்ய வேண்டும். சபைக்குள் எப்போதும் மௌனம் காக்கப்பட வேண்டும் என்று பல விதிமுறைகளை வகுத்தார். அன்று கற்பனையில் கூடகாண முடியுத ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஞான சபைக்கு வெளியே ஏராளமான பாமர மக்கள் கூடியிருந்தார்கள். பிரசித்தி ெபற்ற திருத்தலங்களில் கொண்டாடும் திருவிழாக்களைப் போன்றே இங்கும் தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள்.

மைதானமெங்கும் பல பொருள் அங்காடிகளும், பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிழாக்களில் வழக்கமாக நடைபெறும் வாண வேடிக்கைகளும், அதிர் வேட்டுக்களும் விட்டு குதூகலத்தோடு மக்கள் கொண்டாடினார்கள். அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் இவை எதையும் தடுக்கவில்லை. காரணம் நாளடைவில் அவர்கள் இந்தக் கோலாகலமான வாண வேடிக்கை போன்றவை அவசியம் இல்லை என்பதை உணர்ந்து அவர்களே குறைத்துக் கொண்டு விடுவார்கள். முடிவில் அதைவிட்டு விடுவார்கள் என்று தம் அபிப்பிராயத்தையும் தெரிவித்தார்.

ஜோதி வழிபாடு முடிந்தவுடன் ஞான சபைக்கு வெளியே பாமர மக்கள் தங்கள் வழக்கப்படி விழாக் கொண்டாடுவது போல் வாண வேடிக்கைகளும், பயங்கரமான அதிர் வேட்டுகளும் போட்டு கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவற்றையெல்லாம் மன மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே ஓசை மிகுந்த அதிர் வேட்டுக்களையும் வெடித்துக் கொண்டிருந்தனர். அதிர் வேட்டை ஒரு கூனன் வெடித்துக் கொண்டிருந்தான். கூனன், மிகுந்த உற்சாகத்துடன் வேட்டுத் திரியைக் கொளுத்திவிட்டு, வெடிக்குழாய்களுக்கு அப்பால் சென்றுவிட்டான்.

கூனன் கொளுத்திய அதிர் வேட்டுத்திரிமத்தாப்பு போல தீச்சுடர்ப் பூக்களை விசிறி விட்டு எரிந்து கொண்டு அதிர் வேட்டு வெடிக்குழாய் வரை சென்றுவிட்டது. அடுத்த கணம் அதிர் வேட்டு வெடித்தாக வேண்டும். ஏனோ அதிர் வேட்டுக் குழாய் வெடிக்கவில்லை. ‘கம்’ மென்றிருந்தது. கூனன், வெடி ஏன் வெடிக்கவில்லை என்பதைக் கவனிப்பதற்காக அதிர்வேட்டுக் குழாய்க்கு அருகில் சென்று குழாய்கள் குழாய்க்கு அடியில் இருந்த திரியில் நெருப்பு இல்லாதது போல் தோன்றியது. அதை மீண்டும் பற்ற வைக்க எண்ணி கையில் இருந்த தீவத்தியை எடுத்தான். எதிர்பாராத ஒரு தருணம் அது.

அந்தோ பரிதாபம்! க்ஷண நேரத்தில் அதிர் வேட்டு பயங்கர ஓசையுடனும் பேரொளியுடனும் வெடித்தது. அதிர் வேட்டுக் குழாய்க்கு நேர் எதிரில் இருந்த கூனன், அடுத்த கணமே ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டான். ஒரு தென்னை மரம் உயரம் அவன் உடல் ஆகாய வெளியில் பறந்து சென்று அங்கிருந்து கீழே விழுந்தது. கூனன் அலங்கோலமாகத் தரையில் கிடந்தான். அவன் மூச்சு நின்றுவிட்டது. திருவிழாவுக்கு வந்த மக்கள் ‘குய்யோ முறையோ’ எனக் கதறிய வண்ணம் கூனன் விழுந்த கும்பலே கூடிவிட்டது. பரிதாபமாக அவன் இறந்ததை எண்ணிப் பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

அந்தக் கும்பலில் இருந்த சிலர், ‘‘அடடா, வள்ளலார் பெருமான் ஏற்படுத்திய முதல் ஜோதி தரிசனத்தின் போது இப்படிப்பட்ட துர் மரணம் ஏற்பட்டு விட்டதே! இது அப சகுனம் போல் அல்லவா இருக்கிறது!’’ என்றும் ‘‘ஆஹா, முருகப் பெருமானுக்குரிய தைப்பூச நன்னாளில் இப்படியொரு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதே!’’ என்றும் மனம் கலங்கி மிகுந்த வருத்தத்துடன் பேசிக் கொண்டார்கள்.

சத்ய ஞான சபையின் முன் கூடியிருந்த கூட்டமே அல்லோல கல்லோலப்பட்டது. கூனனின் மறைவு அனைவரிடமும் இருந்த சந்தோஷத்தை ஒரு நிமிடத்தில் போக்கடித்துவிட்டது எல்லோரும் கவலைப்பட்டார்கள்.இந்தக் காட்சியை சத்திய ஞான சபையில் இருந்து திருஅருட்பிரகாச வள்ளலார் பார்த்தார். உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது வள்ளல் பெருமானுடன் சபாபதி குருக்கள், கல்பட்டு ராமலிங்க அடிகள், காரணப்பட்டு கந்த சாமி, தொழுவூர் வேலாயுதம் முதலிய பெரியவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் உடன் இருந்தார்கள். வள்ளலார் பெருமான் கூனன் விழுந்து கிடக்கும் இடத்தை நோக்கிச் சென்றார்.  அவருடன் மேற் குறித்த அன்பர்களும் சென்றனர்.

வள்ளலார் பெருமான் வருவதைப் பார்த்தலும் கூட்டத்தினர் தாங்களே விலகி வழிவிட்டனர். வள்ளல் பெருமான் திருமுகத்தில் ஜோதிசுடராகப் பேரொளி பிரகாசிக்க, கருணை பொங்கும் கண்களுடன் கூனன் விழுந்து கிடந்த இடத்தை அடைந்தார். கூனனின் உடல் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். கருணாநிதி யாகிய வள்ளல் பெருமான், கார் மேகென கருணை மழை பொழியும் திருக்கண்களால் அவனைப் பார்த்தார்.

இரு கரங்களாலும் அவனை ஆசீர்வதித்தவர், தனது வலது கரத்தினை அவனது தலையில் வைத்து ஒரு க்ஷணம் தியானித்தார். பிறகு அவனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் தமது கரங்களால் நீவிவிட்டார். ‘‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அன்பரே உமக்கு ஒன்றுமில்லை. எழுத்திரு!’’ என்றார் வள்ளலார். அந்த அதிசயம், அற்புதம் அப்போது நிகழ்ந்தது. அவன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்திருப்பது போல் எழுந்தான். அவனது கூன் முதுகு காணப்படவில்லை. அது மாயமாய் மறைந்து போயிருந்தது. நல்ல இளைஞனாக நிமிர்ந்து எழுந்தான்.

தன்னையே ஒருமுறை வியப்புடன் பார்த்தான். அவனுக்கு அவனையே அவனால் நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டான். வியப்பினால் அவனுக்கு என்ன செய்வது என்ற தெரியவில்லை. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அவன் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தன. அடுத்த கணம் அப்படியே திருவருட்பிரகாச வள்ளலாரின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கதறினான். கண்ணீர் விட்டான். பாதங்களைப் பற்றிக் கொண்டு பல முறை வணங்கினான்.

வள்ளலார் அவனைக் கருணையுடன் தூக்கி நிறுத்தி ‘‘அப்பா, ஜோதி சொரூபமான இறைவனின் கருணையினால் நீ மீண்டும் பிறவி பெற்றாய் வாழ்க!’’ என்று அவனை வாழ்த்தினார். வடலூர் வள்ளலார் பெருமானின் இந்த அருள் அற்புதத்தை நேரில் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்த பொது மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். அவரைப் போற்றித் துதித்தார்கள். கூட்டத்தில் இருந்த மக்கள் தாங்கள் நின்ற இடத்தில் இருந்தே வள்ளலார் பெருமான் நின்றிருந்த திசை நோக்கித் திரையில் விழுந்து வணங்கினார்கள். உணர்ச்சிப் பெருக்கால் பலர் விம்மிவிம்மி அழுத்தார்கள்.

வள்ளலாருடன் வந்திருந்த சபாபதி குருக்களும் கல்பட்டு ராமலிங்க அடிகளும், காரணப்பட்டு கந்த சாமியும், தொழுவூர் வேலாயுதமும் வள்ளல் பெருமானின் இந்த அருள் அற்புதத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனார்கள். தங்களை அறியாமலேயே கண்களில் கண்ணீர் மல்க வள்ளலாரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். வள்ளலார் பெருமானின் இந்த அருள் அற்புதத்தை நேரில் பார்த்த ‘காரணப்பட்டு கந்த சாமி’ அவர்கள், தாம் எழுதிய ‘‘வள்ளலார் வரலாற்றுக் கீர்த்தனைப்’’ பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டிருக்கும் பாடலைப் பாருங்கள்;

‘‘மதி நிலை பெறும் வகை உணராமல்            

மயங்கும் எங்களை அவத்தில்        

மாளா வகை வகுத்திட்ட வடல் சபை            

மகத்து ஆம் பூச நட்சத்திரத்தில்        

அதிர் வெடி தூக்கி எறிய கூனன் தேகம்        

    

ஆகாயம் போய்க் கீழ் விழவும் குணமாக        

ஆக்கிய நின் அருள் கண்டவர் வியந்திடும்            

அருமை அறிந்தோமை ஒண் தவர் நயந்திடும்       

கதி பெற்று உய்ய கடைக்கண் பார் ஐயா ராமலிங்க ஐயா!            

கருணை செய்ய இங்கு எமத்து யாரையா?’’

பாட்டின் பொருள்:

‘‘மரண மிலாப் பெருவாழ்வை எங்களுக்கு விளங்கும்படி செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டது சத்ய ஞான சபை! அந்த சபையில் தாங்கள் முதலில் தைப்பூச ஜோதித் திருவிழாவை நடத்திக் காட்டினீர்கள்! அப்போது சத்ய ஞான சபைக்கு வெளியில் ஒரு கூனல் முதுகுடன் இருந்த ஒரு அன்பன் உற்சாக மிகுதியால் அதிர் வேட்டு வைத்து வெடித்துக் கொண்டிருந்தான்! எதிர்பாராமல் அந்த அதிர் வெடி வெடிக்கும் போது அந்த கூனன் ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டுத் தரையில் விழுந்து மாண்டன்! திருவருட் பிரகாச வள்ளலாராகிய தாங்கள் தங்கள் பெருங்கருணையால் அவனை உயிர்ப்பித்தீர்கள் அதுமட்டுமா? அவனுடைய கூனையும் நிமிர்த்தி அருளினீர்கள். அத்தோடு அவனை வாலிபனாகவும் ஆக்கினீர்கள்!

இந்த அருள் அற்புதத்தை நிகழ்த்திய ராமலிங்க ஐயா, எங்களுக்குத் தங்களை விட்டால் வேறு கதி இல்லை ஐயா!’’ இப்படி வெகு விபத்தில் தூக்கி எறியப்பட்டு உயிர் பிரிந்த மனிதன் மீண்டும் உயிர் பெற்று எழுவதே நம்ப முடியாதது. அதிலும் அவனுடைய கூனும் நிமிர்ந்து இளமையுடனும் எழுந்தான். உண்மையில் நிகழ்ந்தது இச்சம்பவம், ஏராளமான மக்கள் நேரில் கண்ட காட்சி! இப்படிப்பட்ட நம்ப முடியாத காரியங்கள் எல்லாம் இன்றும் மகான்களின் அருள் அற்புதத்தினால் இந்த உலகில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன்’.

தொகுப்பு: டி.எம்.இரத்தினவேல்

Related Stories: