திருமூலருக்கு அருள்புரியும் அன்னை புவனேஸ்வரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருமூலர் தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறையில் பத்தாம் திருமுறையாக விளங்கும் திருமந்திர நூலை அருளிச்செய்தவர். மாபெரும் சித்தர் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர். அவர் இறையருளால் திருவாவடுதுறைக்கு வந்து அங்கிருக்கும் போதி (அரச) மரத்தின் கீழ் அமர்ந்து யோகத்தில் நிலைபெற்றார். அப்போது, தான் உணர்ந்த ஞானத்தை மூவாயிரம் பாடல்களாகப் பாடினார். அந்த பாடல்களின் தொகுப்பே திருமந்திரமாகும். திருமந்திரம் சிவபெருமானைப் பெரிதும் பேசினாலும், அதன் அடியின் சக்தி வழிபாடு இருப்பதைக் காணலாம். திருமூலர், அன்னை புவனேஸ்வரியின் அருள் பெற்றவர். அவள் அருளாலேயே திருமந்திரத்தை அருளிச்செய்தார் என்பர்.

திருவாவடுதுறை புவனேஸ்வரியின் இடமாகும். அவள் அருளாலேயே திருமூலர் அங்கு வந்தார். இதனை அவர் பலபாடல்களில் குறித்துள்ளார். அவர் திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் பொருந்திய செல்வி புவனாதிபதி என்று அன்னையையும், திருவாவடுதுறையை சிவமங்கை என்றும் கூறுவதைக் காணலாம். (காவிரிக் கரையில் சூல மங்கை, தாழமங்கை, என்ற பெயர்களில் ஊர்கள் இருப்பது சிந்திக்கத்தக்கதாகும். புவனேஸ்வரி மங்கலத்தை தரும் தெய்வம் என்பதால் அவள் உறையும் திருவாவடுதுறை சிவமங்கை எனப்பட்டது.

இனி திருமந்திரத்தில் பேசப்படும் அன்னையின் பெருமைகளையும் திருமூலருக்கு அன்னை அளித்ததால் மந்திர ராஜம் என்னும் சக்தி மகாமண்டல யந்திரமான புவனாபதி சக்கரம் பற்றிய செய்திகளையும் காணலாம்.முதலில் திருமூலர்தான் திருவாவடுதுறைக்கு வந்த காரணத்தை இந்திரநாதன் என்பவரை நோக்கி,

‘‘பொருந்திய செல்வி புவனாபதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே’’

 - என்று கூறுகிறார்.

இதன்மூலம் ‘‘இந்திரநாதரே! எல்லா ஞானங்களும் பொருந்தி இருப்பதற்கு இடமாக இருக்கும், செல்வியான புவனேஸ்வரி எனும் அருந்தவச் செல்வியான பராசக்தியை வணங்கி பக்தி செய்வதற்காகவே வந்தேன்’’ என்கிறார். பின்னர் மாலங்கநாதன் என்பவனை நோக்கி, ‘‘நான் ஆவடுதுறைக்கு வந்த காரணம் நீலநிறம் பொருந்திய, பெருமை மிக்க நுண்மையான ஞானத்திற்கு இடமாக இருப்பவளாகிய புவனேஸ்வரியோடு சிவபெருமான் தன் நடனத்தின் மூலம் உணர்த்திய வேதத்தின் மெய்ப் பொருள் மக்களுக்கு அளிப்பதற்கே’’ என்கிறார். இதனை,

‘‘மாலாங்கனே! இங்கு நான் வந்த காரணம்

நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு

மூலாங்க மாக பொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.’’

- என்று கூறுவதால் அறிகிறோம்.

மேலும், திருவாவடுதுறையில் இருக்கும் அம்பிகை, பிறப்பு அறுத்து ஆள்பவள். ஞானத்தின் தலைவியாக இருப்பவள், என்று கூறுவதையும் காண்கிறோம். இதன்மூலம் திருமூலர் அன்னை பராசக்தியை புவனேஸ்வரி கோலத்தில் வழிபட்டு அவள் அருளைப் பெற்று அதன் மூலம் சிவனருளைப் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. மேலும், அவர் நான்காம் தந்திரத்தில் திருவம்பலச் சக்கரம் வயிரவி மந்திரம், வயிரவச் சக்கரம், நவாக்கரி சக்கரம்,புவனாபதிச் சக்கரம் போன்றவற்றைவிரிவாகக் கூறுகிறார்.

இவ்வரிசையில், இடம் பெற்றுள்ள புவனாதிபதிச் சக்கரம் என்னும் பகுதியைக் காணலாம். இதில் பன்னிரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில், புவனாதிபதியான புவனேஸ்வரிக்கு உரிய மந்திரம், தந்திரம் (செயல்முறை) ஆகியவைவிவரமாகக் கூறப்பட்டுள்ளன. முதற்பாடலில் அம்பிகையின் மந்திரமாக விளங்கும் பஞ்சதசாட்சரீ என்னும் பதினைந்து எழுத்து மந்திரத்தின் தன்மைகளைக் கூறுகிறார்.இதில் ‘‘க’’ என்னும் எழுத்து முதலான ஐந்து எழுத்துக்கள் பொன்னிறம் கொண்டவை என்றும், அகரம் முதலான ஆறு எழுத்துக்கள் சிவந்த நிறம் கொண்டதாகும். ‘‘ச’’ முதலான நான்கு எழுத்துக்களும் வெண்மை நிறம் கொண்டவைகளாகவும். இந்த பதினைந்து எழுத்துக்களும் ஒளிரும் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று வித்தைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது இம்மை மறுமை ஆகிய பயன்களை எளிதில் தரும் என்கிறார்.

‘‘க’’ முதலான பொன்னிற எழுத்துக்கள் அடங்கிய ‘‘க, ஏ, ஈ, ல, ஹரீம்’’ என்பன வாக் பவ கூடம் எனப்படும். செந்நிறத்துடன் ஒளிரும் ‘‘ஹ’’ முதலான ஆறு எழுத்துக்கள் என்பன. ‘‘ஹ, ஸ, க, ஹ, ல ஹ்ரீம்’’ எனப்படும். மற்றவை ‘‘சக்தி கூடம்’’ எனப்படுகிறது. இப்படிப் பதினைந்து எழுத்துக்களை உள்ளடக்கி இருப்பதால் இது பதினைந்தெழுத்து (பஞ்சதசாட்சரீ) எனப்படுகிறது. ஹ்ரீம் என்ற பதத்தை சாக்தர்கள் ஓரெழுத்து மந்திரமாகக் கொள்வர். இதனை ஏகாட்சர புவனேசி என்பர். `ஓம்’ என்பது அ, உ, ம ஆகியவற்றின் கூட்டாக இருந்தாலும் அதனை ஓரெழுத்து மந்திரம் என்று சொல்லப்படுவதைப் போலவே, இங்கு ஹ்ரீம் என்பதுவும் ஓரெழுத்து மந்திரமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீவித்தையில் புகழ்பெற்றதான பஞ்சதசாட்சரீ மந்திரமே இங்கு புவனேஸ்வரி மந்திரமாகச் சொல்லப்பட்டுள்ளது. பதினைந்து எழுத்துக்களோடு ரமாபீஜம் (லட்சுமிபீஜம்) எனப்படும் ஸ்ரீம் சேர்ந்து பதினாறெழுத்து மந்திரமாகக் கொள்ளப்படுகிறது. பதினாறாம் எழுத்தைச் சந்திரகலா கூடம் என்பர்.இந்த மந்திரத்தின் பெருமைகளை விளக்கும் திருமூலர் ‘‘இந்த தெய்வத்தைவிட அதாவது புவனேஸ்வரியைவிட எப்படிப் பார்த்தாலும் வேறு தலையாய தெய்வம் இல்லை.

கடல் போன்று எல்லையற்ற பரப்புடைய மூன்று கண்டங்களிலும் மனதிற்கு நிலையான அமைதியையும் அகண்ட ஒளியையும் தரவல்லது இதுவே’’ என்கிறார். அவள் தனியாக இருப்பவள் என்றாலும், சிவபெருமானைவிட்டு அகலாமல் எட்டு சக்தியாக இருக்கிறாள். இந்த உண்மைகளை பராசக்தியை யோகத்தால் அறிந்தவர்க்கே சொல்ல வேண்டும். மூடர்களுக்குச் சொல்லக்கூடாது. மேலும், யந்திரராஜம் எனப்படும் புவனேஸ்வரி யந்திரத்தையும் அதை அமைக்கும் முறையைத் திருமூலர் விளக்குகிறார்.

அதன்படி, அறுகோணத்தை வரைந்து கொள்ள வேண்டும். அதன் மத்தியில் ஹ்ரீம் ஸ்ரீம், எனும் வித்தெழுத்துக்களை இட வேண்டும், ஆறு கோணங்களுக்கும் நடுவிலேயும் இந்த வித்தெழுத்துக்களை எழுதிக் கொள்ள வேண்டும்.அறுகோணத்தின் கூர்முனைகளின் மீது ஹ்ரீம் என்ற எழுத்துக்களை எழுதவேண்டும். அதன்பிறகு அறுகோணத்தைச் சுற்றி வட்டம் எழுதி, பதினாறு உயிர் எழுத்துக்களையும் கட்டத்திற்கு இரண்டு வீதம் எழுத வேண்டும்.

அதற்கு மேல் எட்டு இதழ் தாமரையை எழுதி இதழ்களுக்கிடையே, `ஆம்’, `ஹ்ரீம்’ என்று ஒவ்வொரு இதழிலும் எழுத வேண்டும், அதற்கு மேல் இதழ்களின் இணைவில் (ளு) வருஷம் என்பதை எழுதி (இது ‘‘ஹ’’ எனும் எழுத்தையும்’’ ‘‘உ’’ எனும் எழுத்தையும் சேர்த்து எழுத, அது ளூு ஆகிறது.

இந்த எட்டு ஹவ் எழுத்துக்களுக்கு இடையே மும்முறை ஹ்ரீம், ஹ்ரீம், ஹ்ரீம் என்றும் அதன் கீழே ‘‘குரோம் சிரோம்’’ என்று எட்டு முறையும் எழுத வேண்டும்.  இந்த அமைப்பை சுற்றி நாற்கோணமாக அமைந்த பூபுரத்தை வரைந்து அதில் நாற்புறம் வாயில் வைத்து வலது வாயிலில் ஆம், கிரோம் இடது வாயிலில் ஆம்கிரோம் என்று மனதில் எண்ணி விருப்பத்துடன் எழுத வேண்டும் (பார்க்க எதிர் பக்கத்திலுள்ள புவனாபதி சக்கரம்)திருமூலர் இந்த யந்திரத்தில் அருவமாக வீற்றிருக்கும் அன்னை புவனேஸ்வரியை உருவமாகத் தியானிக்கும் நிலையைக் கூறுகிறார்.

அது,செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்

கையிற் படையங் குசபாசத் தோடபயம்

மெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி

துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

 - என்பதாகும்.

இதன்பொருள், அன்னை செம்பட்டு ஆடைகளை அணிந்து இரத்தினக் கற்கள் பதித்த மணிமகுடம்சூடி இரத்தினாபரணங்களைப் பூண்டுள்ளாள். கைகளில் பாசம், அங்குசம், அபய, வரத முத்திரைகளைக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அன்னைக்கு பால்சோற்றை ‘‘நாரதாய சுவாஹா’’ என்று நான்கு திசைகளிலும் நிவதித்து அதை உண்டுவர, அஷ்டமா சித்திகளும் எளிதில் கைகூடும் என்கிறார். புவனாம்பிகை கலைக்ஞானம் எனும் நூலில் சிவபெருமானிடமிருந்து இந்த மந்திர ராஜமாகிய யந்திரத்தையும், மந்திரத்தையும் பெற்று திருமூலதேவர் பூஜித்து இந்த பூமியிலும் எட்டுதிசைகளிலும் அஷ்டமா சித்திகளை செய்து மகிழ்ந்திருந்தார் என்று கூறுகிறது.

புவனேஸ்வரி சித்தர்களும், பேரரசர்களும் கொண்டாடும் தெய்வமாக இருக்கிறாள். திருவாவடுதுறை முற்காலத்தில் சித்தர்களின் இருப்பிடமாக இருந்தது. இங்கு நவகோடி சித்தர்கள் தங்கி வழிபாடு செய்துள்ளனர். இங்கு நவலிங்கத் திடல் என்ற இடம் இருந்ததாகக் கூறுவர். சித்தர்கள் வரியில் முதலிடம் பெற்றவரான போகர் இங்கு தங்கி தமது வழிபாடு தெய்வமான புவனேஸ்வரியை வழிபட்டு தனது சீடரான திருமாளிகைத் தேவருக்கு படிமப்பாதத்தை அளித்துச் சென்றுள்ளார் என்றும் கூறுகின்றனர்.திருவாவடுதுறை ஆதீனத்தில் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சந்நதிக்கு வடகிழக்கில் திருமாளிகைத் தேவர் சந்நதி உள்ளது.

அதில் மேற்கரங்களில் தீவட்டிகளையும் முன்கரத்தில் அபயமுத்திரை பயற்றஞ் சுண்டல் பாத்திரம் ஏந்தியவராக திருமாளிகைத் தேவர் எழுந்தருளியுள்ளார். அவர் முன்பாக பெரிய தாமரைப்பீடத்தில் கல்லாலான போகரின் படிமப்பாதம் உள்ளது. போகரின் படிமப்பாதங்களை முன்வைத்து தியானித்தவாறு திருமாளிகைத் தேவர் இருப்பதாகக் கூறுகின்றனர்.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் தினமும் ஞானமா நடராச மூர்த்தியை வழிபட்ட பின், காலையும் மாலையும் போகரை தியானம் செய்து கொண்டிருக்கும் திருமாளிகைத் தேவரை, மலர் தூவி வழிபட்ட பின்னரே நமச்சிவாய மூர்த்திகள் சந்நதிக்குச் சென்று வழிபாடு செய்கின்றார்கள். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வட கிழக்கில் அமைந்துள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய முற்றத்தில் நீண்ட மேடைகளை அமைத்துள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய முற்றத்தில் நீண்ட மேடைகளை அமைத்து அதில் இப்பகுதியில் கிடைத்த தெய்வத் திருமேனிகள் கொண்டு வந்து நிலைப்படுத்தியுள்ளனர்.இவற்றில் ஒன்றாக, பெரிய புவனேஸ்வரியின் திருவுருவம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இது மிகவும் அழகாக இருக்கிறது. இவள் திருமூலர் வழிபட்ட புவனேஸ்வரி என்பது சிலரது நம்பிக்கையாகும்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Related Stories: