இந்த வார விசேஷங்கள்

24.9.2022 - சனி - அருணந்தி சிவாச்சாரியார் குரு பூஜை

அருள்நந்தி சிவம் என்று சைவ சமயத்தில் மிக உயர்வாகக் கருதப்படும் அருணந்தி சிவாச்சாரியார் சந்தான குரவர்களில் ஒருவர். புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் முக்தி அடைந்தார். அந்த தினம் தான் இன்று. பண்ருட்டிக்கு பக்கத்திலே உள்ள பாடல் பெற்ற தலமான திருத்துறையூரில் ஆதிசைவர் குடும்பத்தில் அவதரித்த இவர் அச்சுத களப்பாளரின் வம்சா வளிக்கு குலகுருவாக இருந்தவர்.

இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார். பல கலைகளை கற்றுத் தேர்ந்த இவரை அனைவரும் ‘சகலாகம பண்டிதர்’ என்று அழைத்துவந்தனர். இவர் சகல ஆகமங்களிலும் வல்ல வராய் திகழ்ந்ததால் இப்பெயர் பெற்றார்.

அந்த அடிப்படையில் மெய்கண்டாருக்கு இவரே குல குரு. ஆயினும் மெய்கண்டாரின் மீது பொறாமை கொண்டார். மெய்கண்டார் அப்போது திருவெண்ணெய்நல்லூரில் தங்கி சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குல குருவான தன்னை வந்து சந்திக்காததை நினைத்து கோபம் கொண்டார். இதனால் தன்னுடைய சீடர்களில் ஒவ்வொருவராக அனுப்பி, திருவெண்ணெய் நல்லூரில் நடப்பதை அறிந்துவரச் செய்தார்.

ஆனால் சென்றவர்கள் மெய் கண்டாரின் உபதேசத்தில் மயங்கி, அவரிடமே சீடராக சேர்ந்துவிட்டனர்.

இதனால் மிகுந்த சினம் கொண்ட சகலாகம பண்டிதர், தானே நேரடியாக சென்று மெய்கண்டாரைச் சந்தித்தார். அப்போது மெய்கண்டார் ஆணவம் குறித்து சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். இடையில் குறுக்கிட்ட சகலாகம பண்டிதர் “ஆணவத்துக்கு ஒரு வடிவை காட்ட இயலுமா?” என்று கேட்டார். அதற்கு மெய்கண்டார், பலகற்றும் பொறாமை உணர்வோடு தன்னை அணுகிய அவரை நோக்கி “நீங்கள்தான் ஆணவத்தின் வடிவம்” என்று பதிலுரைத்தார். மெய்கண்டாரின் கம்பீரமான பதிலும், பார்வையும் இவருடைய அறியாமையை முற்றிலுமாக நீக்கியது.

அடுத்த நொடி ஆணவம் நீங்கி, மெய்கண்டாரின் பாதம் பணிந்து தம்மை சீடராக ஏற்கும்படி வேண்டினார். மெய்கண்டாரும், சகலாகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, ‘அருள் நந்தி சிவம்’ என்னும் பெயரிட்டு தன்னுடைய தலைமைச் சீடராக ஏற்றுக்கொண்டார்.  ‘அருள்நந்தி சிவம்’ என்பதே ‘அருணந்தி சிவாச் சாரியார்’ என்றானது. நாயன்மார்களுக்குப் பின், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை பரப்பியவர்களுள் முக்கியமானவர்.

சந்தான குரவர்களில் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந்நூலின் சிறப்புக்கு, “சிவத்தின் மேல் தெய்வ மில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம்

இல்லை’’ என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். மேலும் பல நூல்களையும் இயற்றியுள்ளார்.

25.9.2022 - ஞாயிறு மகாளய அமாவாசை

இன்றைய நாள் சூரியனின் நாள். சூரியன் பிதுர்காரகன். தந்தை வழி உறவைக் குறிப்பவன். சூரியனுக்குரிய இந்த நாளில் தாய் வழியை குறிக்கக் கூடிய சந்திரன் ஒன்றாக இணைந்து மகாளய அமாவாசையை ஏற்படுத்துகிறார்கள். மஹாளய அமாவாசை என்பது தென்புலத்தார் என்று போற்றப்படும் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள்.

மறந்தவனுக்கு மகாளயம் என்று சொல்வார்கள். முன்னோர்களுக்கு முறையான வழிபாடுகள் செய்யாதவர்கள், மறந்து போனவர்கள், குறைந்தபட்சம் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். பிதுர்தோஷம் இருந்தால் குடும்பத்தில் பலவிதமான சுபகாரியத் தடைகள் ஏற்படும். அதை நீக்கிக் கொள்வதற்கு தில ஹோமம் செய்ய வேண்டும். அத்தகைய ஹோமம் செய்வதற்கு ஏற்ற நாள்.

26.9.2022 - திங்கள் காமதேனு பூஜை

காமதேனு என்பது தேவ லோகத்தில் வசிக்கின்ற பசுவாகும். கேட்கும் பொருளைத் தருகின்ற சக்தி படைத்தது காமதேனு. காமதேனுவை சுரபி என்ற பெயரிலிலும் அழைக்கின்றனர். இதற்கு நந்தினி, பட்டி என இரு மகள்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பக விருட்சம் போல கேட்டதைத் தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. தெய்வங்களின் வாகனமாக காமதேனு உள்ளது.

காமதேனுவின் பிரதிநிதியாக நாம் பசுவைக் கருதி பூஜை செய்ய வேண்டும். இன்றைய தினம் கோபூஜை செய்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும். சுபகாரிய தடைகளை விலக்கி காரியங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும். அதனால்தான் முக்கியமான காரியங்களை தொடங்குவதற்கு முன், “கோ பூஜை” செய்கிறோம். நவராத்திரியின் தொடக்க நாளான இன்று காமதேனு பூஜை செய்வது, மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும். குறைந்தபட்சம் பசுமாடுகளை தொட்டு வணங்கி, அவற்றுக்கு ஏதேனும் பழமோ, புல்லோ, கீரையோ தாருங்கள்.

26.9.2022 - திங்கள் தௌஹித்ர பிரதிபட்

நம்முடைய சமய வாழ்வியல் நெறிகள் நுட்பமானவை. ஒவ்வொரு உறவுகளும் எப்படி கௌரவிக்கப்பட வேண்டும் என்பதை அருமையாகச் சொல்லி இருப்பார்கள். அந்த அடிப்படையில் இன்றைய நாளுக்கு தௌஹித்ர பிரதிபட் என்று பெயர். ஒருவருக்கு தாத்தாக்கள், அம்மா, அப்பா என இரண்டு வழிகளிலும் அமைவார்கள். இதில் அம்மா வழி தாத்தாவுக்கு முக்கியத்துவம் தரும் நாள் இது.

நவராத்திரியின் முதல் நாள், பெண்வழி பேரன் பேத்திகளை பரிசுப் பொருள் தந்து ஆசீர்வதிப்பதும், பேரன் பேத்திகள் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதுமாக இந்த நாளுக்கு உரிய முக்கியத்துவத்தைத் தந்திருக்கிறார்கள். நேரில் சென்று வாழ்த்த முடியாதவர்கள் இன்றைக்கு அவசியம் தொலைபேசி மூலமாவது தங்களுடைய ஆசீர்வாதத்தைத் தெரிவிக்க வேண்டும். பேரன், பேத்திகள், அம்மா வழி தாத்தாவிடம் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

27.9.2022 - செவ்வாய் திருப்பதி பிரம்மோற்சவம்

செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை திருமலையில் பிரசித்தி பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி எந்தெந்த நாட்களில், எந்தெந்த வாகனங்களில் பெருமாள் உலா வருவார் என்பதைப் பார்ப்போம்.

27.9.2022 - செவ்வாய்க்கிழமை - பகல் - துவஜாரோகணம்

27.9.2022 - செவ்வாய்க்கிழமை - இரவு - பெரிய சேஷ வாகனம்

28.9.2022 - புதன்கிழமை - பகல் - சிறிய சேஷ வாகனம்

28.9.2022 - புதன்கிழமை - இரவு - ஹம்ச வாகனம்

29.9.2022 - வியாழக்கிழமை - பகல் - சிம்மவாகனம்

29.9.2022 - வியாழக்கிழமை - இரவு - முத்துப்பந்தல் வாகனம்

30.9.2022 - வெள்ளிக்கிழமை - பகல் - கல்ப விருட்ச வாகனம்

30.9.2022 - வெள்ளிக்கிழமை - இரவு - சர்வ பூபால வாகனம்

1.10.2022 - சனிக்கிழமை - பகல் - மோகினி அவதாரம்

1.10.2022 - சனிக்கிழமை - இரவு - கருட வாகனம்

2.10.2022 - ஞாயிற்றுக்கிழமை - பகல் - அனுமந்த வாகனம்

2.10.2022 - ஞாயிற்றுக்கிழமை - இரவு - யானை வாகனம்

3.10.2022 -  திங்கட்கிழமை - பகல் - சூரிய பிரபை வாகனம்

3.10.2022 - திங்கட்கிழமை - இரவு - சந்திர பிரபை வாகனம்

4.10.2022 - செவ்வாய்க்கிழமை - பகல் - திருத்தேர்

4.10.2022 - செவ்வாய்க்கிழமை - இரவு - குதிரை வாகனம்

5.10.2022 - புதன்கிழமை - பகல் - சக்கர ஸ்நானம் தொடர்ந்து துவஜாரோகணம்

30.9.2022 - வெள்ளிக்கிழமை உபாங்க லலிதா விரதம்.

லலிதா என்ற நாமம் அம்பாளைக் குறிப்பது. புரட்டாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் உபாங்க லலிதா விரதம். அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையாக இருப்பது மிகமிகச் சிறப்பு. நவராத்திரியில் அம்பாள் பரமேஸ்வரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதம் மன ஒருமைப்பாட்டையும் ஆற்றலையும் அதிகரிக்கும். சகல மங்களங்களையும் தரும். நவராத்திரியோடு இணைந்து வருவதால் இதைக் கொண்டாடுவது எளிது.

தேவியின் ஆயிரம் நாமங்களில் லலிதா ஸஹஸ்ர நாமம் ரகசியங்களுள் ரகசியமானது. நோய்களைப் போக்கும். செல்வத்தை அளிக்கும். அகால மரணம் ஏற்படாது, ஆயுளைத் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை போன்ற நதிகளில் நீராடுதல், காசியில் லிங்கப் பிரதிஷ்டைசெய்தல், கிரஹண காலத்தில் அசுவமேத யாகம் செய்தல், கிணறு வெட்டுதல், அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம். எனவே இன்று லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்யவும்.

Related Stories: