நந்தியாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: தூர் வார விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி பகுதி நந்தியாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூர் வார வேண்டும், கரைகளில் பனை மரங்களை வளர்த்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராமமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்கதரநெல்லுார் ஒடைதண்ணீர் அங்கிருந்து, பொன்னை ஏரிக்கு செல்கிறது. அந்த ஏரி தண்ணீர் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஞானகொல்லி தோப்பு அருகே உருவாகும் ஆற்றில் தண்ணீர் கலக்கிறது. அங்கிருந்து, நந்தியாறாக உருவாகி அய்யனேரி, கங்காபுரம், ஜானகாபுரம், செருக்கனூர், ராமகிருஷ்ணாபுரம், கோரமங்கலம், அகூர் தரணி வராகபுரம் வழியாக திருத்தணி நகருக்கு வருகிறது.பின் அங்கிருந்து நந்தியாறு சென்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா, கீழாந்தூர் கிருஷ்ணாபுரம் வழியாக மீண்டும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நாபலூர்‌ ராமாபுரம் இடையே சென்று கொசஸ்தலை ஆற்றி்ல் நந்தியாறு கலக்கிறது. நந்தியாற்றால் சில ஏரிகள் நிரம்புகிறது. மேலும், ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை நந்தியாற்றின் மூலம் தீர்க்கப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி ஒன்றியம் பகுதியில் இருந்து செல்லும் நந்தியாற்றில் அதிகளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடாமல் தடைப்படுகிறது. மேலும், ஆற்றில் உள்ள நீர் சீமை கரிவேல மரங்கள் முட்செடிகளால் தண்ணீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது. எனவே, பூமியின் உள்ள தண்ணீர் உறிஞ்சப்பட்டு அந்த பகுதியில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் நந்தியாற்றில் கடைசி வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நேரில் நந்தியாற்றை பார்வையிட்டு வளர்ந்த முட்செடிகள் அகற்றி ஆற்றின் கரைகளை பலப்படுத்தி தூர் வார வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் கரைகளை பலப்படுத்தி அந்த கரைகளில் அதிக அளவில் பனை மரக்கன்றுகள் நட்டு பூமியின் ஈரப்பதத்தை காப்பதுடன் நீர்மட்டத்தை உயர்த்தவும் வழிவகை ஏற்படும்  என சமூக  ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  *கழிவுகளை கொட்டக்கூடாதுமழைக்காலங்களில் நந்தியாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, திருத்தணி நகரத்தில் உள்ள நந்தியாற்றில் இறைச்சி கழிவுகள் ஊராட்சி, நகராட்சி  வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த ஆற்றில் கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனர். இதன் காரணமாக திருத்தணி மற்றும் சென்னை நகருக்கு வழங்கப்படும், குடிநீர் மாசு ஏற்பட்டு பல்வேறு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆற்றில், கண்ட கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post நந்தியாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: தூர் வார விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: