ஞானிக்கு எல்லாம் ஈஸ்வர சொரூபமே!

கிருஷ்ண அமுதம் - 26 (பகவத் கீதை உரை)

புலனடக்கம் என்பது எளிதான விஷயம் இல்லைதான். வீட்டு பூஜையறையில் ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருக்கும் போது சமையலறையில் மனைவி அஜாக்கிரதையாக பாத்திரத்தைக் கீழே நழுவ விட்டு ஓசை எழுப்பினாலோ அல்லது கூடத்தில் குழந்தைகள் விளையாட்டாக கூப்பாடு எழுப்பினாலோ நாம் எத்தனை எரிச்சலடைகிறோம்! நம்மால் பூஜையறையில் இறை உணர்வோடு ஒன்ற இயலவில்லை என்ற கோபத்தை எத்தனை முறை, ஸ்லோகத்தை உரத்த குரலில் சொல்வதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறோம்!ஏனென்றால் ஒரு ஞானியின் நிலையை நம்மால் அடைய முடியாததுதான்.

யா நிஷா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ

யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிசா பச்யதோ முனே (2:69)

‘‘அனைத்து ஜீவன்களும் ஓய்வெடுக்கும் இரவு வேளைகளில் தனது ஐம்புலன்களையும் அடக்கத் தெரிந்த யோகியானவன் விழித்திருக்கிறான். அதேபோல பிற ஜீவன்கள் துய்த்து அனுபவிக்கும் பகல் வேளை, அந்த ஞானியைப் பொறுத்தவரை இரவுப் பொழுதாகும்.’’  சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுவார்: ‘‘ஒருவன் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டானானால் சொல்லிக்கொண்டு போகட்டுமே, அவனை ஆத்திகத்துக்கு ஏன் வலுக்கட்டாயமாகத் திருப்ப முயற்சிக்க வேண்டும்? நமக்கெல்லாம் பகல் பொழுது என்றால் அது ஆந்தைக்கு இரவாகும்; அதேபோல நம் இரவுப் பொழுது அதற்கு பகலாகும். ‘இல்லை, இது பகல்தான், ஓய்வுகொள்ளாதே, விழித்துக்கொள்’ என்று ஆந்தையை நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?

 அதனதன் இயல்பு எப்படியோ அப்படியே விட்டுவிடுவதுதான் ஒரு ஞானிக்கு அழகு. மாற்றங்களை ஏற்பதும், ஏற்காததும் அதனதன் விருப்பம். காலப்போக்கில் அந்த மாற்றங்களை அவை ஏற்றுக்கொண்டாலும் அதற்காக நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ளவும் வேண்டாம். ஏனென்றால் இதற்கு முந்தைய அவற்றின் நிலையும் சரி, இப்போதைய நிலையும் சரி, இரண்டுமே அவை தாமாக மேற்கொண்டவையே. ஆகவே அவற்றின் இருநிலைகளைக் குறித்தும் நாம் எந்தக் கவலையும் படத் தேவையில்லை; மாற்றத்தை உணர மறுக்கின்றனவே என்று வருத்தப்படவும் அவசியமில்லை.’’

ஒரு திருடனும் பிறர் உறங்கும்போதுதான் விழித்திருக்கிறான், அதனால் அவன் ஞானியாவானா? இரவு நேர ரயில் வண்டி ஓட்டுநர் ஞானியாவாரா? இல்லை, இவ்விருவரும், இவர்களைப்போல இரவுநேரப் பணி மேற்கொள்பவர்களும், தத்தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே இரவில் விழித்திருக்கிறார்கள். ஏதேனும் வருமானத்தை, ஆதாயத்தை எதிர்நோக்கியே விழித்திருக்கிறார்களேயன்றி, வேறொன்றுமில்லை. அவ்வாறு பலன் எதுவும் கிடைக்காது என்றால் அவர்களும் அந்த வேளையில் உறங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்; விழித்திருக்கமாட்டார்கள்.

ஆனால், ஒரு ஞானி விழித்திருப்பதற்கு எந்த ஆதாயமும் காரணமில்லை, எதையும் அவன் எதிர்பார்ப்பதுமில்லை. அதனாலேயே அவனை, தம் கடமையாற்ற இரவில் விழித்திருப்பவர்களுடன் ஒப்பிடுதலும் முறையல்ல.

தவத்திரு பன்றிமலை சுவாமிகள், ‘‘ஒரு ஞானி, தான் மூச்சிழுக்கும்போது உறங்குவான்; மூச்சை வெளியிடும்போது விழித்துக்கொள்வான்!’’ என்று சொல்வார்கள். பிறர் விழித்திருக்கும்போது தான் அடங்குவதும், பிறர் அடங்கியிருக்கும்போது தான் விழித்திருப்பதும்தான் ஒரு ஞானியின் நிலை. அதாவது உலகியல் காட்சிகள் அனைத்தும், உலக நடப்புகள் அனைத்தும் ஒரு ஞானியைப் பொறுத்தவரை மாயையே. அந்தக் காட்சிப் பொருட்கள் மறையக் கூடியவை, மாறக் கூடியவை. ஆகவே இவற்றில் ஒரு ஞானி சித்தம் கொள்வதில்லை.

அதனாலேயே இந்தக் காட்சிகள் விரியும்பொழுதெல்லாம் அவனுக்கு இரவாகவே அமைந்துவிடுகிறது. இவற்றில் எந்த ஈர்ப்பும் காட்டாமல் ஒதுங்கியிருக்கும் அவனுடைய தன்மையாலேயே அந்தப் பொழுதுகள் அவனுக்கு இரவாக அமைகின்றன. அவன் அனைத்தையும் ஈஸ்வர சொரூபமாகக் காண்பதால் அவன் விழித்திருப்பது என்பதை அந்த ஈஸ்வரனையே தன் ஐம்புலன்களால் அவன் நுகர்வதாகப் பொருள் கொள்ளலாம்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்

கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா  நின்றன்

பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா

கேட்குமொலியிலெல்லாம் நந்தலாலா  நின்றன்

கீதமிசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா  நின்னைத்

தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

- என்ற மகாகவி பாரதியாரின் பாடலை இங்கே நினைவுகூரலாம்.

ஒரு ஞானியின் உயரிய நிலை இது. அவன் பார்க்கும், கேட்கும், நுகரும், பேசும், சுவைக்கும் பொருட்கள் எல்லாமே ஈஸ்வர சொரூபம்தான். ஆகவே அவனுக்குப் பகல், இரவு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவன் விழித்திருக்கும் பொழுதெல்லாம் அந்த ஈச்வரனை அவன் அனுபவிக்கிறான் என்றும், அவன் ‘உறங்கும்’ பொழுதெல்லாம் உலகியல் காட்சிகளைவிட்டு விலகியிருக்கிறான் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

இப்படி ஈஸ்வர தரிசனம் கண்டதால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரால் தன் மனைவியை காளிதேவியாக பாவிக்க முடிந்தது; அன்னைக்கு இறைவழிபாடும் செய்ய முடிந்தது.

இதே நிலையில்தான் அரவிந்தர், மீராவை அன்னையாக, அம்பிகையாகக் கண்டார். அனைவருக்கும் அவரை ‘அன்னை’ என்றே அறிமுகப்படுத்தினார். அவர் புரிந்த அற்புதங்களை இறை அற்புதங்களாக உணர வைத்தார். இப்படி ஈஸ்வர தரிசனம் கண்டவர்கள் தம்முடைய உறவுகளையெல்லாம் அதே அம்சமாக உணர்ந்தார்கள். தாய், தந்தை, மனைவி, மகன், மகள், உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டார் எல்லோருமே அவர்களுக்கு ஈஸ்வர சொரூபமே.

அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை தன் தெய்வ குருவாக பாவித்தார். அதனால் தன் ஊரிலெங்கும் ‘திருநாவுக்கரசு தண்ணீர்ப் பந்தல்’, ‘திருநாவுக்கரசு அன்னதானக் கூடம்’, ‘திருநாவுக்கரசு பசுமடம்’ என்றெல்லாம் தன் குருநாதர் பெயரில் பல அமைப்புகளை நிறுவி பரிபாலித்தார். அவர் எங்கும், எதிலும், யாரிடமும் திருநாவுக்கரசரையே பார்த்தார். இவ்வளவு ஏன், தன் பிள்ளைகள் நால்வருக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயரிட்டார். ஊரிலுள்ளோர், ‘‘இப்படி எல்லாப் பிள்ளைகளுக்கும் ‘திருநாவுக்கரசு’ என்ற ஒரே பெயரை சூட்டியிருக்கிறீர்களே, அவர்களில் யாராவது ஒருவரை அழைக்கவேண்டுமென்றால் எப்படிக் கூப்பிடுவீர்கள்? ஒருவரை அழைத்தால் நால்வரும் வந்து நின்றுவிட மாட்டார்களா?’’ என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு, ‘‘கூப்பிடும் எனக்குத் தெரியும், அழைக்கப்படும் என் மகன்களுக்கும் தெரியும், யாரை நான் விளிக்கிறேன் என்று!’’ என்று பதில் சொன்னார் அப்பூதி அடிகள். அதாவது ஒவ்வொரு மகனையும் ஒருவகை குரல் தொனியில் பெயரிட்டு அழைப்பாராம் அவர்; குறிப்பிட்ட மகனும் அவர் தன்னைத்தான் அழைக்கிறார் என்று உணர்ந்து மிகச் சரியாக அவர் முன்போய் நிற்பானாம்!

அப்பூதி அடிகள் எப்படி எங்கும், எதிலும் தன் குருநாதர் திருநாவுக்கரசரைக் கண்டாரோ அதேபோல ஒரு ஞானி பரந்தாமனைக் காண்கிறான். அவன் கண்ணோட்டத்தில் பரந்தாமனல்லாத எதுவும் அவனுக்குப் பொருட்டல்ல.

ஆளரவமற்ற கோயில் பிராகாரம் ஒன்றில் ஒருவன் படுத்திருந்தான். அவன் தன் கால்களை சுவாமி சந்நதிக்கு எதிரே நீட்டியிருந்தான். அதைப் பார்த்த பக்தர் ஒருவர், அவனிடம் வந்து, ‘‘என்னப்பா நீ கோயிலுக்குள் சுவாமி சந்நதிக்கு எதிராகக் கால்நீட்டிப் படுத்திருக் கிறாயே, இறைவனுக்கு நீ காட்டும் மரியாதை இதுதானா?’’ என்று கேட்டார்.

உடனே படுத்திருந்தவன் பளிச்சென்று எழுந்தான். பிறகு, ‘‘சரி, சுவாமி எந்த திசையில் இல்லை என்று சொல்லு, அந்த திக்கு நோக்கி நான் கால் நீட்டிக்கொள்கிறேன்,’’ என்று கேட்டான். பக்தர் திடுக்கிட்டார். அதுதானே! கடவுள் எங்குதான் இல்லை? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறதல்லவா அந்தப் பரம்பொருள்! பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் அந்தப் பேரருளை, படுத்திருந்தவன் உணர்ந்திருக்கிறான், நிமிர்ந்திருக்கும் தான் உணரவில்லையே என்று அந்த பக்தர் மனம் வருந்தினார்.

இத்தகையவர்களை எல்லாம் ஈஸ்வர தரிசனம் கண்டவர்களாகவே நாம் பாராட்டலாம். ஒருமுறை அப்படித் தம் உள்ளக்கோயிலில் அந்த தரிசனத்தைக் கண்டவர்களுக்கு வெளியுலகிலும் அந்தப் பரம்பொருள் வியாபித்திருப்பது தெரியும். அதனூடே அவர்களுக்கு பகல், இரவு என்ற பொழுது பாகுபாடும் தெரியாது. அதனால்தான் அவர்கள் பிறர் விழித்திருக்கும்போது ‘உறங்குகி’றார்கள்; பிறர் உறங்கும்போது ‘விழித்திருக்கிறார்கள்’.

பகவானை எங்கும், எதிலும், யாரிடத்தும், எப்போதும் காண்பதுதான் ஒரு ஞானியின் பக்குவம். பூரணத்துவமாக அவ்வாறு அவனால் அப்படிக் காணமுடிந்துவிட்ட பிறகு, புலன்களால் அவனுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எந்த அளவுக்கு அந்தப் புலன்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், எந்த கட்டத்தில் அவற்றின் இயல்புகளை நிறுத்திக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற மனோதிடம் கொண்டவன் அவன்.

ஒரு குரு தன் சீடனுடன் காட்டுப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு காட்டாறு. சுழல்களுடன், பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளத்தில் ஒரு பெண் அடித்துச் செல்லப்படுவதை இருவரும் கண்டனர். அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே தோன்றியது. குரு உத்தரவிடட்டும் என்று சீடன் சும்மா இருந்தான். தான் ஆற்றில் குதித்து அவளைக் காப்பாற்றவேண்டும் என்ற மனிதாபிமான உணர்வு குருவை உந்தியது. ஆனால் ஒரு குருவாகத் திகழும் தான், வாலிபப் பருவத்தைக் கடந்து வயோதிகம் அடைந்துவிட்ட தான், அந்த இளம் பெண்ணைத் தொட்டு, இழுத்துக் காப்பாற்றக் கருதுவது முறையான செயலாகாது என்றும் அவருக்குத் தோன்றியது.

ஆனால் அந்தப் பெண் காப்பாற்றப்பட வேண்டும், அது முக்கியம். தான் அவளுக்கு உதவப் பாய்ந்தால், சீடன் என்ன கருதுவானோ என்ற நினைப்பும் குருவுக்கு வந்தது. அதாவது அவளைக் காப்பாற்றக்கூடிய வலிமையும், வாலிபமும் அவனுக்கு இருக்க, வயதான தான் அப்படி முயன்றால் அவன் தன்னை கேலி செய்வானோ என்றும் கருதினார் அவர். காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலா அல்லது காம வேட்கையா என்று அவன் சந்தேகப்படக்கூடுமே! ஆகவே, அப்போதைய தர்மசங்கடத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, சீடனை நோக்கி, ‘‘போ, அந்தப் பெண்ணைக் காப்பாற்று,’’ என்று உத்தரவிட்டார்.

உடனே சீடன் வெள்ளத்துக்குள் பாய்ந்தான். அந்தப் பெண்ணைப் பற்றினான். தோளில் சுமந்தான். கரைக்கு வந்தான். ‘‘நல்ல காரியம் செய்தாய்,’’ என்று சீடனைப் பாராட்டிய குருவின் பார்வை அந்தப் பெண்ணின் மீதே இருந்தது. ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண் சுய உணர்வு கொண்டு தன்னைக் காப்பாற்றியதற்காக இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டாள். குருவும், சீடனும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். வெள்ளம் வடிந்து வேகம் குறைந்துவிட்ட ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போனார்கள் இருவரும்.  ‘‘அந்தப் பெண் மீண்டும் ஏதேனும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும், ‘ என்று ஆறுதலாக, ஆனால் சத்தமாக குரு விசனப்பட்டார்.

சீடன் அவரைப் பார்த்துத் திரும்பினான். ‘நான் அவளை ஆற்றின் அந்தக் கரையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனே. நீங்கள் இன்னமுமா சுமந்து கொண்டு வருகிறீர்கள்?’ என்று கேட்டான்.வெள்ளத்தில் சென்ற அந்தப் பெண்ணை இருவர் கண்களும் பார்த்தன; அவள் இட்ட ஓலத்தை இருவர் காதுகளும் கேட்டன. அவளைக் காப்பாற்றவேண்டும் என்று இருவர் உடலும் பரபரத்தன. ஆனால் காப்பாற்றப்பட்ட அவளை சீடனுடைய மனம் அங்கே விட்டுவிட்டு மீண்டுவர, குருவின் மனசுமட்டும் அவளிடமே தங்கிவிட்டது!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Related Stories: