கண்நோய் போக்குவாள் கருவலூர் மாரி

அவிநாசி தலத்தில் முதலையொன்று பாலகனை குளத்திற்குள் இழுத்துச் சென்றது. சில வருடங்களுக்குப் பிறகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் அங்கே  எழுந்தருளியிருந்த போது ஊரார் சுந்தரரை பணிந்தனர். முதலை இழுத்துச் சென்ற பாலகனை மீட்டுத் தருமாறு பெற்றோர்கள் வணங்கி நின்றனர். குளக்கரையில்  நின்று கண்மூடி ஈசனின் நாமத்தை சொல்லி பதிகம் பாடத் தொடங்கினார் சுந்தரர். பதிக வரிகளின் அதிர்வுகள் விண்நோக்கி பாய்ந்தன. வானவர் போற்றும்  மறைநாயகன் ஈசன் தன் திருக்கண்களைத் திறந்தார்.

திருப்பதிகம் பாடிய நாளில், வறண்டிருந்த அந்த குளத்தில் எங்கோ இடுக்கில் சென்று மறைந்திருந்தது முதலை. மீண்டும் நீர் நிரம்பும் பொருட்டு கருவலூரில்  கருமேகமொன்று தோன்றியது. விண் நிறைந்து அடர்ந்து படர்ந்தது. பருவ மழையாகக் கொட்டித் தீர்த்தது. அவிநாசி குளமும் நிரம்பி வழிந்தது. நீர்ப் பெருக்கில்  தோன்றிய முதலை சுந்தரரின் சீரடி பணிந்து தனது வாயினின்று பாலகனை வெளிக் கொணர்ந்தது. சுந்தரர் சிறுவனை கைபிடித்து தூக்கினார். அவிநாசி  ஆச்சரியத்தில் விழி விரித்தது. ஆம், முதலையால் விழுங்கப்பட்ட குழந்தை இந்த காலகட்டத்திற்கேற்ப வளர்ந்த பாலகனான முழு உருவாய்த் தோன்றினான்!

மேகம் என்னும் கருவிலிருந்து மழை பொழிந்த காரணத்தால் இத்தலம் ‘கருவலூர்’ எனும் பெயர் பெற்றது. இவ்வூரில் உள்ள நள்ளாற்றில் நீராடி,  கங்காதரேஸ்வரரை வழிபட்டு காமதேனு தன் கருவை, கன்றாக ஈன்றதாலும் கருவலூர் எனப்பட்டது என்பர். கருவலூர் கிராமம், கொங்கு நாட்டின் சிறப்பு பெற்ற  பகுதியாக இந்த கிராமத்தைச் சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம், இந்த தலத்தில் அருள் வளர்க்கும் அன்னை மாரியம்மன்தான். இந்த கருவலூர்  மாரியம்மன் கோயில், நாயக்கர் கால கட்டிட அமைப்பைக் கொண்டது. இந்த ஆலயத்தில் அன்னை நிகழ்த்திய அற்புதங்கள் பல.

பெரும்பாலான ஆலயங்களில் அம்மன் அமர்ந்த கோலத்தில்தான் அருள்பாலித்துக் கொண்டிருப்பாள். ஆனால், இங்கோ இந்த பராசக்தி நின்றருள்கிறாள்!  மாரியம்மனை பொதுவாக மாரியாத்தா என்று கிராமங்களில் அன்போடு அழைப்பார்கள். அப்படித் தாயாக இருப்பவள் இத்தலத்தில் சேயாக வந்திருக்கிறாள்.  அகக்கண்களுக்கு மட்டுமே புலப்படும் மாரி, இத்தலத்தில் புறக்கண்ணின் புரையை போக்குகிறாள்.

ஆமாம், ஞான சொரூபமாக விளங்கும் அம்பிகை, இங்கு புரையோடிய, பாதிக்கப்பட்ட விழிகளுக்கு நோய் நீக்கி ஒளி தருகிறாள். அமர்ந்த நிலையிலேயே  அம்பிகையை தரிசித்து வந்த பல பக்தர்களுக்கு, தான் நின்ற நிலையிலும் தோற்றம் தருவதை அவர்களுடைய கனவில் உணர்த்தியிருக்கிறாள். தான்  குடிகொண்டிருக்கும் கோயிலுக்குத் தேவையான புனரமைப்புகளையும் அதேபோல கனவில் தோன்றியே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள். அவற்றில் ஒன்று,  பழுதுபட்ட தேர். இப்போது அந்த தேர் புதுப் பொலிவுடன் உற்சவ காலங்களில் வீதி உலா வருகிறது. கருவலூர் மாரிக்கு பங்குனி மாதம் தேர்த் திருவிழா  நடைபெறும்.

பண்ணாரிக் கோயில் குண்டம் முடிந்த இரண்டாம் நாள் புதன்கிழமை திருத்தேர் வலம் வரும். இவ்வாறு பண்ணாரிக்கும், இவ்வூருக்கும் பழங்காலம் முதல்  தொடர்பு இருந்து வருகிறது. புதன்கிழமையன்று தேர்வலம் வருதலுக்கு முன்னதாக 15 நாள் கணக்கிட்டு, காப்புக்கட்டி கம்பம் நிறுத்தப்படும். இந்த நாள் முதல்,  அம்மன் தேருக்கு போகும் புதன்கிழமை அதிகாலை வரையிலும் அம்மன் பட்டினியிருப்பதாக ஐதீகம். இக்காலங்களில் அம்மனுக்கு நிவேதனம் எதுவும் கிடையாது.

இரவு மட்டும் பச்சை மாவு படைத்து வழிபடுகிறார்கள். காப்புக் கட்டும் பூசாரியும் இதுபோல பதினைந்து நாட்கள் பட்டினியிருப்பார். சிறப்புபெற்ற கருவலூர் மாரிக்கு  எந்நாளும் திருநாளே. திங்கள், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை நாட்களில் பக்தர்கள் அலையென திரண்டு ஆலயத்திற்கு வருவர். அவினாசியிலிருந்து  மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகளில் பயணித்து இத்தலத்தை அடையலாம். திருப்பூரிலிருந்து கருவலூர் 25 கி.மீ. தொலைவு.

 -  வி.என்.ராஜன்

Related Stories: