ஜாதகரீதியாக புத்திர தோஷங்களும் பரிகாரங்களும்!

சில விஷயங்கள் இயல்பாக நடந்து விடும். சில விஷயங்கள் சற்று தாமதித்துத்தான் நடக்கும். சில விஷயங்கள் தெய்வ அருளினால் மட்டுமே நடக்கும். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் குழந்தை பேறு. இன்றைக்கு பலவிதமான மருத்துவ சிகிச்சை முறைகள் வந்து விட்டாலும் கூட, அது வெற்றி அடைவதும் இறைவன் திருவருளில் தான் இருக்கிறது. பலகாலம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள், தொடர்ந்து நம்பிக்கையோடு இறைவனை வணங்கும் போது அவர்கள் விதி மாறுகிறது. வினை தீருகிறது.

விதி இல்லாதவர்களின், விதியை மாற்றி, நன்மையைத் தர வேண்டும் என்பதற்காகவே, பல அற்புதமான குழந்தை நலம் அருளும் திருத்தலங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில், லக்னத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியத்தைக் குறிக்கிறது. ஒன்பதாம் இடம் ஒருவனுடைய சந்தோஷத்தையும், யோக ஷேமத்தையும், முன்னோர்களையும், குல தெய்வத்தையும், தந்தையையும் குறிக்கிறது.

இந்த மூன்று ஸ்தானங்களையும் திரிகோண ஸ்தானங்கள், மங்கல ஸ்தானங்கள் என்று சொல்லுவார்கள். பூர்வ புண்ணியத்தைக்  குறிக்கக்கூடிய ஐந்தாம் இடத்தில்தான் காதல் என்கின்ற உணர்வையும் வைத்தார்கள். குழந்தை என்கின்ற விஷயத்தையும் வைத்தார்கள். பூர்வ புண்ணியம் இருந்தால்தானே அன்பு, காதல், மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல், குழந்தைச் செல்வங்கள் என்ற பல விஷயங்கள் கிடைக்கும். 6ஆம் இடத்துக்கு விரயத்தானமாக, 5ஆம் இடம் வரும். ஆறாம் இடம், வேலையைக் குறிக்கிறது.

ஐந்தாமிடம் வேலையில் இருந்து பெரும் ஓய்வைக் குறிக்கிறது. ஆறாம் இடம் நோயைக் குறிக்கிறது. ஐந்தாமிடம் நோய் நீங்குவதை குறிக்கிறது. ஆறாம் இடம் பகையைக் குறிக்கிறது. ஐந்தாமிடம் நட்பைக் குறிக்கிறது. ஆறாம் இடம் சண்டை போடுவதைக் குறிக்கிறது. ஐந்தாமிடம் சண்டையின்றி சமாதானமாக வாழ்வதைக் குறிக்கிறது. ஆறாம் இடம் கடனைக் குறிக்கிறது. ஐந்தாமிடம் கடனில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது.

இந்த ஐந்தாமிடத்தில்தான் குழந்தைச்செல்வம் என்கின்ற செல்வம் வருகிறது. ஒருவர் பட்ட கடனிலிருந்து அல்லது துன்பத்திலிருந்து விடுவிக்க வேண்டியது குழந்தையின் கடமையல்லவா. ஐந்தாமிடம் வலுபெற்றால், 5ம் இடத்துக்கு, ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடம் தானே வலுவடையும். ஒன்பதாம் இடம் வலு அடைந்தால், அதற்கு 5ம் இடமான லக்னம் வலுவடையும். அதைப்போலவே ஒன்பதாம் இடம் வலுவடையும் போது, 9ஆம் இடத்துக்கு ஒன்பதாம் இடமான 5ஆம் இடம் வலுப்பெறும். இவைகளில்தான் ஒருவன் பெரும் மகிழ்ச்சி, புகழ், எதிர்காலம், அவன் அடையும் சந்ததி விருத்தி, எல்லாம் இருக்கிறது. ஒன்பதாம் இடத்தை “தர்மஸ்தானம்” என்பார்கள். ஐந்தாமிடம் அந்தத் தர்மம் சேகரித்து வைக்கப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள்.

ஒருவன் புண்ணியத்தின் அடிப்படையில்தான் தெய்வமே குழந்தையாக வந்து பிறக்கும் அல்லது அந்த தெய்வத்துக்கு நிகராக குழந்தை பிறக்கும். இங்கே தெய்வத்தின் அருளும்  குழந்தையின் பிறப்பும் சேர்ந்திருப்பதை கவனித்தால் இந்த உண்மைகள் புரியும். குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். புத்திர தோஷம் பலவகை சாபங்களினால் ஏற்படுகிறது.

சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், இப்படி பல வகை உண்டு. எந்த வகை தோஷம் எனத் தெரிந்து பரிகாரம் காண வேண்டும். பிதுர் தோஷம் இருந்தால், ராமேஸ்வரம் அல்லது சேதுக்கரையில் நீராடி, தில ஹோமம் செய்ய தோஷம் விலகி, புத்திர பாக்கியம் கிடைக்கும். ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு, கேது இருந்தால் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் அல்லது திருப்பாம்புரம், காளஹஸ்தி  சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி ராகு, கேதுவை தரிசனம் செய்து வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோயில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும். ராமநாதபுரம் அருகில் இருக்கிறது திருப்புல்லாணி திருத்தலம். 108 வைணவ  தலங்களில் ஒன்று. ஆதிஜெகன்னாத பெருமாள் என்று ஸ்வாமிக்கு திருநாமம். இந்த ஆலயத்தில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனித்த நிலையில் உள்ளார். இந்த பெருமாள் கோயில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. குழந்தை பாக்கியத்திற்காக தசரதர், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் அளித்த பாயசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அவர்கள் அதை சாப்பிட்டனர். அதன் பலனாக அவர்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.

இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை அமைந்திருக்கிறது. சேதுக்கரையில் நீராடி விட்டு, கோயிலுக்கு வந்து நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

ஜாதகத்தில் குரு கெட்டு, புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ தரிசனம் வரப்பிரசாதம். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாது தவிப்பவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து, மனம் உருகி குழந்தை வரத்தை வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருச்செந்தூரில் அன்னதானம் செய்தால் புத்திர தோஷத்திற்கு சிறந்த பரிகாரம்.

சஷ்டி விரதம் இருப்பது நிச்சயம் குழந்தை பாக்கியத்தை தரும். ‘‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி அல்லவா. சஷ்டியில் இருந்தால் என்றால் சஷ்டி விரதம் இருந்தால் என்று பொருள். அகப்பை என்பது கருப்பையை குறிக்கும். எத்தனையோ நபர்கள் சஷ்டி விரதம் இருந்து வழிபட்டு சந்தான பாக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். ஜாதகத்தில் செவ்வாய் பகவான் 5ஆம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோயில் சென்று தீர்த்தமாடி அங்கு கோயிலில் ஒருமணி நேரம் தியானம் செய்ய வேண்டும். செவ்வாய் பகவானையும், முத்துக்குமார சுவாமியையும், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். கிருத்திகை விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்பு.

ஜாதகத்தில், சனி பகவான் 5ஆம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட வேண்டும். பெண் சாபத்தாலும், தாயாரை சரியாக கவனிக்காததாலும் சந்திரனால் புத்திரதோஷம் ஏற்படுகிறது. புத்திர தோஷம் உள்ளவர்கள், முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும். ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும், பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். நம்முடைய முன்னோராகக் கருதப்படும் காக்கைக்கு தினமும் உணவு அளித்தால் தோஷங்கள் நீங்கிவிடும். தக்க ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பிராயச்சித்தம் செய்யவும். தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சந்தான கோபால மந்திரத்தை பக்தியுடன் பாராயணம் செய்ய, சகல தோஷங்களும் நீங்கி புத்திரப் பேறு ஏற்படும்.

ஓம் தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே|

தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|

தேவ தேவ ஜகன்னாத கோத்ர

வ்ருத்திகரப்ரபோ|

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, தொடர்ந்து ஜெபித்துவர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.

இந்திரா நீல சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |

சங்க: சக்ர: கதாபத்மை: லசத்பாஹு விசிந்தயேத்||

இதனை, ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினமும் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து, ஜெபித்து வர விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும். இன்னும் ஒரு எளிமையான வழி. வீட்டில் குழந்தை கிருஷ்ணர் படத்தை ஆங்காங்கே மாட்டி வையுங்கள். வீட்டில் இருக்கும்போது குழந்தை கிருஷ்ணரின் படத்தை பார்த்துக் கொண்டே இருங்கள். பூஜை அறையில், கிருஷ்ணர் படத்தை வைத்து வழிபாடு செய்தாலும், குழந்தை ரூபத்தில் இருக்கும் கிருஷ்ணருடைய படத்தை வரவேற்பறையில் மாட்டி வைத்து அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தாலும்,  உங்களுடைய மடியிலும் கூடிய விரைவில் ஒரு குழந்தை நிச்சயம் தவழ்ந்து விளையாடும்.

 பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி

Related Stories: