பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளர்கள் அதிகாரம் குறைப்பு மனை பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய குழு: ஜோதி நிர்மலா சாமி உத்தரவு

சென்னை: தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ள அரசாணை: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கடந்த ஜூன் 29ம் தேதி அனைத்து மண்டல பணி சீராய்வு கூட்டத்தின்போது இதுவரை மாவட்ட பதிவாளர்களால் மனைப் பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி துணை பதிவுத்துறை தலைவர் தலைமையில் ஒரு குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மனைப் பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, குழு அமைப்பது குறித்து பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். அதன்அடிப்படையில், மனைப் பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மாற்றி அமைத்து தொடர்புடைய பதிவு மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), சார்பதிவாளர் (வழிகாட்டி), இப்பணியிடம் இல்லாத இடத்தில் சார்பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் துணை பதிவுத்துறை தலைவரால் நியமனம் செய்யப்படும் தொடர்புடைய தணிக்கை மாவட்ட பதிவாளரல்லாத அந்த மண்டலத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மனை மதிப்பு நிர்ணய குழு மற்றும் துணைப் பதிவுத்துறை தலைவர், அப்பதிவு மாவட்டத்துடன் தொடர்பு இல்லாத மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் அப்பதிவு மாவட்டத்துடன் தொடர்பில்லாத மற்றும் மனை மதிப்பு நிர்ணய குழுவில் இடம்பெறாத மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ஆகியோரை உள்ளடக்கிய மனை மதிப்பு நிர்ணய மேல்முறையீட்டு குழுவினை அமைக்கலாம் எனவும் அக்குழுக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுத்து செயல்படுத்தலாம் எனவும் முடிவு செய்து ஆணையிடப்படுகிறது.அதன்படி, புதிய மனைப் பிரிவுகள் பதிவுக்கு வரும் நிகழ்வுகளில், பதிவு அலுவலர் அவற்றிற்கு மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டி, கருத்துருவினை இதற்கென குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் தயார் செய்து மூன்று தினங்களுக்குள் மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் ஆவண நகல், புல எண்கள், எப்எம்பி, கிராம வரைபடம், மனைப் பிரிவை சுற்றியுள்ள புல எண்கள் ஆகியவற்றின் வழிகாட்டி மதிப்பு விவரங்கள், மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய மனைப் பிரிவில் உள்ளடங்கும் புல எண்கள், எப்எம்பி மற்றும் கிராம வரைபடம், சுற்றியுள்ள புல எண்கள் ஆகியவற்றின் வில்லங்கச் சான்று மற்றும் எப்எம்பி, கிராம வரைபட நகல் ஆகியவற்றை இணைத்து மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய மனைப் பிரிவின் வரைபடமும் இணைக்கப்பட வேண்டும். இந்த கருத்துரு நிர்வாக மாவட்ட பதிவாளருக்கு வரப்பெற்ற பின்னர், தொடர்புடைய நிர்வாக மாவட்ட பதிவாளரே மனையிடத்தை பார்வையிட்டு சந்தை மதிப்பு குறித்து விசாரணை செய்து விசாரணை படியான மதிப்பினை அறிக்கையாக மனை மதிப்பு நிர்ணய குழுவில் சமர்பித்து அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் மதிப்பு அம்மனைப் பிரிவில் உள்ளடங்கும் புல எண்கள் மற்றும் அற்றினைச் சுற்றியுள்ள பல எண்கள் ஆகியவற்றிற்கு ஆவண தேதியில் உள்ளபடியாக வழிகாட்டி மதிப்புகளின் உயர்ந்தபட்ச மனை மதிப்புக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். மனை மதிப்பு நிர்ணய குழுவால் உத்தேசிக்கப்பட்டுள்ள மதிப்புக்கு பொருத்தமான வகைப்பாடு ஏற்கனவே மாவட்ட குழுவால் ஒப்புதல் செய்யப்பட்டுள்ள வகைப்பாடுகளில் இல்லாத நிலையில், நிர்ணயித்துள்ள மதிப்பிற்கு புதிய வகைப்பாடு ஒன்றினை அக்குழு உருவாக்கி ஆணையிடலாம். இந்த புதிய வகைப்பாடு உருவாக்கம் குறித்து நிர்வாக மாவட்ட பதிவாளர் ஏழு நாட்களுக்குள் துணை பதிவுத்துறை தலைவருக்கு பின்னேற்பிற்காக தெரியப்படுத்த வேண்டும். பதிவு அலுவலரிடம் இருந்து கருத்துரு வரப்பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும். மனை மதிப்பு நிர்ணய குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பினை கட்சிக்காரர் ஏற்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட மனை மதிப்பு நிர்ணய மேல்முறையீட்டு குழுவுக்கு மேல் முறையீடு செய்து கொள்ளலாம். மேற்படி குழுவானது சம்பந்தப்பட்ட மனைப் பிரிவினை நேரில் பார்வையிட்டு சந்தை மதிப்பு குறித்து விசாரணை செய்து பொருத்தமான மதிப்பினை நிர்ணயம் செய்ய வேண்டும்.மனை மதிப்பு நிர்ணய குழுவால் அல்லது மனை மதிப்பு நிர்ணய மேல் முறையீட்டு குழுவால் நிர்ணயிக்கப்படும் மதிப்பினை கட்சிக்காரர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(ஏ) பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதிவு மாவட்டத்துக்கும் தனித்தனியே மனை மதிப்பு நிர்ணயக் குழு மற்றும் மனை மதிப்பு நிர்ணய மேல் முறையீட்டுக்குழு துணை பதிவுத்துறை தலைவரால் ஏற்படுத்தப்பட வேண்டும். பகுதி மற்றும் தேவைக்கேற்ப அக்குழுக்கள் துணை பதிவுத்துறை தலைவரால் மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.மனை மதிப்பு நிர்ணய குழுவில் இடம்பெற்றுள்ள ஒரு உறுப்பினரால மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தொடர்புடைய துணை பதிவுத்துறை தலைவரால் நியமிக்கப்படுவார். மனை மதிப்பு நிர்ணய மேல் முறையீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களான மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தொடர்புடைய துணை பதிவுத்துறை தலைவரால் நியமிக்கப்படுவார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

The post பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளர்கள் அதிகாரம் குறைப்பு மனை பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய குழு: ஜோதி நிர்மலா சாமி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: