பசிப்பிணியே பெரும்பிணி; அதைத் தீர்ப்பதே முதல் பணி-முத்துக்கள் முப்பது

தைப்பூசம் என்றாலே நமது நினைவுக்கு வருவது, வடலூர் வள்ளல் பெருமான்தான். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” அந்த மகானின் மகத்தான வாழ்க்கையிலிருந்து முப்பது முத்துக்கள் இங்கே உங்களுக்காக:

1. அவதாரம் நிகழ்ந்தது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகாமையில் உள்ள சிறிய ஊர் மருதூர். அங்கே இராமையா பிள்ளை-சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தவர். தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். 5.10.1823 ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம், 21ஆம் நாள், சித்திரை நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.54 மணி அளவில் ஐந்தாவது மகனாக அவதரித்தார்.

2. பன்முக ஆற்றல் உடையவர்

இராமலிங்க அடிகளார், வெறும் ஆன்மீக வாதி மட்டுமல்ல. பன்முக ஆற்றல் உடையவர். சிறந்தசொற்பொழிவாளர். போதகாசிரியர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப்பிணி போக்கிய அருளாளர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், இதழாசிரியர், ஞானாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, தீர்க்கதரிசி.

3. விளையும் பயிர் முளையிலே

‘‘விளையும் பயிர் முளையிலே” என்பதுபோல குழந்தை பிறந்து ஐந்தாவது மாதம் குடும்பத்தோடு ராமையா பிள்ளை சிதம்பர நடராஜர் தரிசனத்துக்கு சென்றார். சிற்சபையில் நடராஜப் பெருமானின் அற்புத வடிவத்தை தரிசனம் செய்த பிறகு, ரகசிய தரிசனத்திற்காக அனைவரும் நின்றனர். பால் குடிக்கும் குழந்தையாக, வடலூர் சுவாமிகள் தாயின் கையிலிருந்தார். தீட்சிதர்கள் திரையை விலக்க, சிதம்பர ரகசியம் தரிசனம் ஆயிற்று. கைக் குழந்தையாக இருந்த வள்ளலார் அதைப்பார்த்து சிரித்தார். அப்பொழுது தான் பார்த்த வித்தியாசமான வெட்டவெளி தரிசனத்தை நினைவு கொண்டு பின்னால் ஆறாம் திருமுறையில் பதிவுசெய்கிறார். குழந்தையாக இருந்தபோது தான் பார்த்த தத்துவத்தை நினைவு வைத்துக் கொண்டு பாடும் ஆற்றல் வள்ளல் பெருமானுக்கு இருந்தது என்பதை உணர முடிகிறது அல்லவா?

‘தாய் முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது

வேய் வகை மேல் காட்டாதே என் தனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டிய என்மெய் உறவாம் பொருளே’

என்று பாடுகின்றார்.

4. இறைவன் தாங்கினார்

மூன்று வயதில் ஒருநாள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தார். அதுபெரிய ஒட்டுத் திண்ணை. அப்பொழுது, தூக்கக்கலக்கத்தில் திண்ணையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஆனால் தரையில் விழவில்லை. அதற்குள் யாரோ, தெருவோடு போகும் ஒருவர் குழந்தையைத் தாங்கி கீழே கிடத்திச் சென்றார். வந்தவர் யார்? இந்த சம்பவத்தை நினைவில்கொண்டு தன்னுடைய வாழ்க்கை அனுபவமாக வள்ளல் பெருமான் பாடுகின்றார்.

ஓங்கிய ஓர் துணையின்றிப் பாதி இரவில்

உயர்ந்த ஒட்டுத் திண்ணையில் படுத்த கடை சிறியேன்

தூக்கம் மிகப் புரண்டு விழ தரையில் விழாது எனையே

தூக்கி எடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த்துணையே

இந்த இடத்தில் இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று இறைவன் யார் என்பதை சூசகமாக இச்சம்பவத்தின் மூலமாக தெரிவிக்கின்றார். யாரொருவர் ஆபத்து நேரும் என்ற பொழுது தாங்கி காப்பாற்றுகிறாரோ, அவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

5. மூன்று தீக்கைகள்

வள்ளல் பெருமானுக்கு மூன்று வகையான தீக்கைகளை இறைவனே அருளிச் செய்தார் என்பதை ஒரு வாக்குமூலமாக வள்ளலார் தருகின்றார். ஒன்று பரிசதீக்கை, இரண்டு வாசகதீக்கை, மூன்று திருவடி தீக்கை இதை இரண்டாம் திருமுறையில் பாடுகின்றார்.

அழகுற புன்னகை காட்டி,

தெருளுற அருமை திருக்கையால் தடவி

திருமணி வாய் மலர்ந்து அருகில்

பொருளுற இருந்தோர் வாக்களித்து என்னுள்

புகுந்தனன் புனித ஈ தந்தோ

6. படிப்பில் நாட்டமில்லை

வள்ளலாருடைய இறை அனுபவங்கள் அற்புதமானவை. எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் தான் கண்ட காட்சிகளை மெய்ப்பட தம் பாடல்களில் பதிவு செய்ததால் அந்த அனுபவங்களை நம்மால் இன்றும் உணர முடிகின்றது. இளம் வயதில் அவர் முறையாகப் பள்ளிக்கூடத்துக்குச் சென்றதில்லை. தந்தையார் இறந்து விட்டதால் தமையனார் சபாபதிப் பிள்ளை இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். இவரை பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது இவர் அந்தப் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகளை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார்.

7. முருகப் பெருமானின் அருட்காட்சி

தினம் அவர் தன் வீட்டு மாடிக்குச் செல்வார். பாடம் படிக்கவே செல்வதாக எல்லோரும் நினைத்தனர். அங்கு அவர் வேறு ஒரு செயலில் ஈடுபடுவார். ஒரு கண்ணாடி முன் அமர்ந்து முருகனை உபாசனை செய்வார்.உண்ணும் நேரம் தவிர, மற்ற நேரத்தில் அவர் கீழே இறங்குவதே இல்லை. கண்ணாடியின் முன்னால் இவர் முருகனைக் காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தியானத்தில் இருந்தார். ஒருநாள் அந்தக் காட்சியையும் கண்டார். முருகப் பெருமான் எப்படி இவருக்குக் காட்சி தந்தார் என்பதை ஐந்தாம் திருமுறையில் பதிவு செய்கின்றார்.

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்

தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்

கூர்கொண்ட வேலும் மயிலும் கோழிக் கொடியும் அருட்

கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என்கண்ணுற்றதே ஆறுமுகமும், பன்னிரு தோள்களும், வேலும், மயிலும்,

கோழிக் கொடியும் கொண்டு தணிகை முருகன் தோன்றினான்.

8. வள்ளலார் என்கின்ற பெயர் ஏன் வந்தது?

இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு “திருவருட் பிரகாச வள்ளலார்” என்கின்ற பெயர் ஏன் வந்தது என்றால், பிரதியுபகாரம் எதையும் கருதாமல் உலகியல் பொருட்களை வாரி வழங்கக் கூடியவர் களை வள்ளல்கள் என்று சொல்லலாம். ஆனால் அருளை அள்ளித் தந்தவர் என்பதால் இவரை “வள்ளலார்” என்று அழைக்கிறோம்.

9. வடலூரில் சிதம்பர தரிசனம்

ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரைத் திருவிழாவிற்கு வெளியூர் அன்பர்கள் பலர் வடலூரில் கூடுவர். வள்ளலாரை அழைத்துக்கொண்டு சிதம்பரம் சென்று தரிசிப்பது வழக்கம். அப்படி ஒருமுறை தில்லை தரிசனம் காண வடலூரில் ஒன்றுகூடினர். வள்ளலாரோடு இருந்தனர். ஆனால் வள்ளல் பெருமான் சிதம்பரம் செல்வதாகத் தெரியவில்லை. வந்தவர்களில் பலர் சிதம்பர தரிசனத்துக்குச் சென்று விட்டனர். வள்ளலாரோடு இருந்த ஒருசிலருக்கு தரிசனம் பார்க்க முடிய வில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. அவர்கள் வருத்தத்தோடு வள்ளலாரைப் பார்த்தனர். அவர்கள் உணர்வை புரிந்து கொண்ட வள்ளலார் ‘‘சிதம்பர தரிசனம் தானே பார்க்க வேண்டும்.

இதோ உள்ளே நீங்கள் சென்று பாருங்கள்” என்று, தரும சாலையின் ஒரு பகுதியில் திரையிடச் செய்து அதில் சென்று பார்க்கக் கூறினார். அவர்கள் அங்கே சிதம்பரத்தில் நடக்கக்கூடிய அத்தனைக் காட்சிகளையும் கண்டனர். வள்ளல் பெருமான் சிதம்பரம் செல்லவில்லை. தான் இருந்த இடத்தையே சிதம்பர தரிசனம் ஆக்கினார்.அதனால் வடலூர் திருச்சபையை உத்தர ஞான

சிதம்பரம் என்று அழைப்பர்.

10. பசியின் கொடுமை

உலகில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பசிப்பிணிதான் என்பதை உணர்ந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை உலகுக்குச் சொன்னவர். ஒருவன் பசியோடு இருக்கும் பொழுது அவனுக்கு எந்தவித கருத்தும் தேவைப்படாது. அவன் பசியைப் போக்கி விட்டு தான் மற்ற ஆன்மீக விஷயத்தை அவனோடு பேச முடியும்.பசியின் கொடுமையை பழம் பாடல் ஒன்று சொல்லும். மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்

வயிற்றுப் பசியை விட கொடுமையான நெருப்பு எதுவும் இல்லை. பசியோடு ஒரு மனிதன் முகத்தை பார்க்க முடிவதில்லை. எனவே பசி இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்க வேண்டும். எல்லோருக்கும் சோறிட வேண்டும் என்கின்ற உயர்ந்த லட்சியத்தோடு இருந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை தீர்க்க தானே வழி

கண்டார். அதுதான் சத்திய ஞானசபை.

11. அணையா அடுப்பு

1867 ஆம் ஆண்டு பார்வதிபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தருமச் சாலையை நிறுவினார் வள்ளல் பெருமான். 1867 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி, இருபத்தி ஒரு அடி நீளம், 2.5 அடி அகலம் இரண்டரை அடி ஆழமுள்ள அணையா அடுப்பு ஏற்படுத்தினார். அன்று எரியத் தொடங்கிய அந்த அணையா அடுப்பு 154 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

மனிதனின் பசி என்கின்ற நெருப்பு அணைய வேண்டும் என்று சொன்னால், இந்த அணையா அடுப்பு எரிய வேண்டும், இந்த அணையா அடுப்பை எரிய விட்டால் மனிதனின் பசிப்பிணி நீங்கி விடும் எனவே இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த தர்ம சாலையை ஏற்படுத்தினார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

12. அவதார புருஷன்

வள்ளலாரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லுகின்ற பொழுது ஜீவன் முக்தர்களுக்கும் அவதார புருஷர்களுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்வார். ஜீவன் முக்தர்கள் தங்களுக்காகவும், தங்கள் ஆத்மாவுக்கும் முயற்சி செய்து பிறப்பில்லாத நிலையை அடைவார்கள்.  ஆனால் அவதார புருஷர்கள் அப்படியல்ல. இந்த உலகத்தில் உள்ள ஜீவன் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுப்பார்கள். உலகத்தை காப்பதற்காக பிறப்பு எடுத்தவர் தான் வள்ளல் பெருமான்.

எனவே அவர் அவதார புருஷன் என்பார்.

13. நிறைவேறியே தீரும்

வள்ளல் பெருமான் நவீன சமுதாயங்களின் பிரச்னைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.வள்ளல் பெருமான் சொல்வார். ‘‘நாம் எதையும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய தேவைகள் நியாயமானதாக இருந்தால், அந்தத் தேவை ஏதாவது ஒருவகையில் நிறைவேறியே தீரும்” என்பார். இதற்கு எடுத்துக்காட்டாக பற்பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தன.

14. நாளை என்ன செய்வது?

ஒரு நாள் தர்ம சாலையில் சமைப்பதற்கு ஒரு மணி அரிசியும் இல்லை. சாலை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த சண்முகம்பிள்ளை, வள்ளல் பெருமானிடம் வந்து,‘‘நாளை சமைப்பதற்கு அரிசி இல்லையே, என்ன செய்வது?” என்று வருத்தத்தோடு கேட்டார். வள்ளல் பெருமான் ஒரு நிமிடம் தியானத்தில் இருந்தவர் அடுத்த வார்த்தை சொன்னார். “அரிசியும் மற்ற பொருட்களும், நாளை காலை வந்து சேரும். நீங்கள் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்”  என்றார். சண்முகம் பிள்ளை, எந்த ஏற்பாடும் இல்லாமல் மறுநாள் எப்படி நமக்கு அரிசி கிடைக்கும் என்று வருத்தத்தோடு போய் படுத்துக்கொண்டார். அடுத்த நாள் வியப்பு. காலை திருத்துறையூரில் இருந்து ஓர் அன்பர் மூன்று வண்டிகளில் அரிசியும், பிற உணவுப் பொருட்களும் கொண்டு வந்தார். நேற்றிரவு கனவில் தனக்கு இந்த பொருட்களையெல்லாம் உடனடியாக வடலூர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஓர் உள்ளுணர்வு உத்தரவிட்டதாகச் சொல்லிச் சென்றார்.

15. பத்து பேர் உணவு 100 பேருக்கு

ஒன்று வளர்வதற்கும் தளர்வதற்கும் மனம்தான் காரணம். மனம்போல் தான் அனைத்தும் வளரும்.உயர் எண்ணங்களால் எந்த விஷயத்தையும் சாதித்துவிட முடியும். நேர்மறை வார்த்தைகளும் நிஜமான நம்பிக் கையும் நாம் நினைப்பதை எப்படியும் நடத்தும். ஒரு நாள் தருமச் சாலையில் இரவு உணவு நேரம். திடீரென்று பலரும் வந்து விட்டனர். ஆனால் உணவு ஒரு சிலருக்கே போதுமானதாக இருந்தது. இத்தனை பேருக்கும் எப்படி இந்த உணவை வைத்துக்கொண்டு சமாளிப்பது? இனி சமைப்பதற்கு பொருள் இல்லையே? என்று சென்று கேட்டபோது, ‘‘இதோ வருகிறேன்” என்று சொன்ன வள்ளல்பெருமான், ‘‘எல்லோருக்கும் இலை யைப் போடுங்கள்.

பார்த்துக்கொள்ளலாம்” என்றார் .அவர்தம் கையால் அன்னத்தை எடுத்துக்கொண்டு வந்து ஒவ்வொரு இலையாக வைத்துக் கொண்டே சென்றார். பத்து இலைகளுக்கு மேல் இந்த அன்னம் போதாது என்று நினைத்தவர்களுக்கு, வந்திருந்த அத்தனை பேருக்கும் அன்னம் போதுமானதாக இருந்தது கண்டு வியந்தனர். காரணம் வள்ளல் பெருமானார் திருக்கரம். அருட் கருணை கரத்தால் உணவைப் பரிமாறியதால், அந்த பாத்திரமே அட்சய பாத்திரமாக மாறியது.

16. ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் ஆற்றல்

வடலூர் வள்ளல் பெருமான் ஞான புருஷர் மட்டுமல்ல. சித்த புருஷரும் கூட. சித்த புருஷர்கள் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் காட்சி அளிக்கக் கூடியவர்கள். வடலூரில் ஞானசபை கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த காலம் அது. அதற்கு தேவையான மரங்கள் சென்னையில் வாங்க வேண்டும். மரம் வாங்கப் பொறுப்பேற்றிருந்த ஆறுமுக முதலியார் வள்ளல் பெருமான் தன்னோடு சென்னை வந்து மரம் வாங்குவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“சரி, நீ போ, நான் வருகிறேன்” என்று சொன்ன வள்ளல்பெருமான், வடலூரிலேயே தங்கி விட்டார். ஆறுமுக முதலியார் மகிழ்ச்சியோடு மரங்களை வாங்கிக் கொண்டு வந்தபோது, ‘‘சொன்ன படியே வடலூர் வள்ளல் பெருமான் சென் னையில் வந்து எனக்கு மரம் வாங்குவதற்கு உதவினார்” என்று சொன் னார். மற்றவர்கள் வியந்தனர். “இவர் சென்னைக்கு போகவில்லையே. இரண்டு மூன்று நாட்கள் இங்கே தானே இருந்தார். ஆனால் இவர் சென் னையில் உதவியதாகச் சொல்லுகிறாரே” என்று அவர்கள் சிந்தித்த போது தான், சித்த புருஷர்கள் ஒரே நேரத்தில் எல்லா

இடத்திலும் இருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று தெரிந்தது.

17. ஆஹா, மனிதன் போகின்றான்

திருவொற்றியூர் தேரடித் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் துறவி ஒருவர் இருந்தார். அவர் திகம்பரர். (ஆடை எதுவும் அவர் உடுப்பதில்லை)  யார் தெருவில் போனாலும், மாடு போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, நரி போகிறது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மனிதன் குணங்களினால் ஏதோ ஒரு விலங்கின் தன்மையில் இணைத்து இருக்கின்றான் என்பது அவருடைய கூற்று. வடலூர் வள்ளல் பெருமான் திருவொற்றியூருக்கு செல்லும் போதெல்லாம் நேரடியாக சன்னதித் தெரு வழியாகச் செல்வதில்லை.

தெற்கு மாட வீதியில் உள்ள நெல்லிக்காய் பண்டார சந்தின் வழியாகவே கோயிலை அடைவார். ஒருநாள் அவர் தேரடி வழியாகச் செல்லுகின்ற பொழுது நிர்வாணத் துறவியார் வள்ளலாரைப்  பார்த்தார். ‘‘இதோ ஒரு உத்தம மனிதர் போகின்றார்” என்று கூறியவாறு தனது கைகளால் மெய்யை பொத்திக் கொண்டாராம். வள்ளலார் அவரிடம் சென்று சிறிது நேரம் உரையாடினார். அதற்குப் பிறகு அந்தத் துறவி அந்த இடத்தில் இல்லை. வள்ளல் பெருமான் வரவுக்காகவே காத்திருந்து அந்த இடத்தை விட்டு அகன்று எங்கோ சென்றுவிட்டார்.

18. பசியாற்றிய இறைவன்

ஒருநாள் வள்ளல் பெருமான் திருவொற்றியூர் கோயிலின் மண்டபத்தில் பசியோடு படுத்து உறங்கினார். நண்பர்கள் சிலரும் அவரோடு இருந்தனர். அக்காலத்தில் கோயிலுக்குள் தங்குகின்ற வழக்கமிருந்தது. திடீரென்று கோயில் பூசகர் ஒருவர் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்துச் சென்றார். இரண்டு நாள் கழித்து கோயில் பூசகரிடம் விசாரித்தபோது அவர் சொன்னார். ‘‘நான் இரண்டு நாளாக ஊரிலேயே இல்லையே. நான் இல்லாத போது வேறு யார் உங்களுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருக்க முடியும்?” அப்பொழுது தான், இறைவனே கோயில் பூசகர் வடிவில் வந்து வள்ளல் பெருமான் பசியாற்றி சென்றார் என்று அவர்களுக்குத் தெரிந்தது,

19. திருவடியில் ஊற்ற பெருமழை பெய்தது

சித்திரை மாதம் கோடைக்காலமல்லவா? ஒருமுறை மழை பொய்த்தது. தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் எங்கும் நீர் இன்றித் தவித்தனர். குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் கூட இல்லை. வயல்கள் வறண்டு கிடந்தன. குடிநீருக்காக மக்கள் படும் துன்பத்தை உணர்ந்த வள்ளல் பெருமான், ஒரு செம்பு தண்ணீரை தமது காலில் ஊற்றும்படி கூறினார். அப்படியே செய் தனர். சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்து கடுமையான மழை பெய்தது. குளம் குட்டைகள் எல்லாம் நிரம்பின. மரங்கள் பச்சை பசேலென வளர ஆரம்பித்தன.

தண்ணீர் பஞ்சம் முற்றிலுமாக அழிந்தது.

20. ஆறு குடம் தண்ணீர், ஆறு, குளமெல்லாம் நன்னீர்

இந்நிகழ்ச்சியைக் கண்ட புதுப்பேட்டை ஊர்க்காரர்கள், தங்கள் ஊரிலும் மழை பொழியாமல் துன்பப்படுவதாக விண்ணப்பிக்க, வள்ளல் பெருமான் அங்கே சென்று, ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் விடுமாறு சொன்னார். அவ்வாறே செய்தனர். அதன் பிறகு புதுப்பேட்டையில் ஆறு கிணறுகளில் நீர் நன்கு ஊறி மேலே வந்தது. அந்நீர் ஏற்கனவே உள்ள நீரை விட சுவையுடைய நீராக இருந்தது. தொடர்ந்து மழையும் பொழிந்தது.

21. துண்டை வீசி தீயை அணைத்தார்

வடலூர் வள்ளல் பெருமான் ஒருமுறை உபன்யாசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென தம் மேல் ஆடையை வீசினார். எதற்காக இவ்வாறு செய்கிறார் என்று அன்பர்கள் திகைத்தனர். ஆனால் சற்று நேரத்தில் ஒரு செய்தி கிடைத்தது. அருகாமையில் உள்ள ஒரு ஊரில் பல குடிசைகள் திடீரென்று தீப்பற்றியது. அது மேலே பயங்கரமாக எரியும் என்று நினைத்த போது, தீ சட்டென்று எப்படியோ அணைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். அது அணைந்த நேரத்தைக் கணக்கிட்டு பார்த்த பொழுது அந்த நேரமும் வள்ளல் பெருமான் சடக்கென

தம்முடைய மேலாடையை எடுத்து வீசிய நேரமும் ஒன்றாக இருந்தது.

22. தீஞ்சுவை நீரோடை

சித்திவளாகத் திருமாளிகை கீழ்ப்புறத்தில் சிறிது தூரத்தில் செடிகளும் கொடிகளும் மரங்களும் சூழ அழகான நீரோடை ஒன்று இருக்கிறது. அங்கே அன்பர்கள் பக்தியுடன் நீராடி வந்தார்கள். ஒரு சமயம் அந்த நீரோடை வற்றி விட்டது. என்ன முயன்றும் தண்ணீர் கிடைக்கவில்லை. வள்ளல் பெருமானார் அங்கே சென்று தம்முடைய அருட்

கரத்தால் அந்த நீரோடையைத் தொட்டார். மெல்லிய பூங்காற்று வீசியது. அங்கேயே நின்று கொண்டு.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்தகுளிர் தருவே, தருநிழலே, நிழல்கனிந்த கனியே,

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே,

உகந்ததண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே,

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே,

மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே,

ஆடையிலே எனைமணந்த மணவாளா,

பொதுவில்

ஆடுகின்ற அரசே, என் அலங்கல்

அணிந்தருளே.

- என்கின்ற பாடலைப் பாட அங்கே நீரோடை ஊற்றெடுத்தது. அதன் சுவை இதுவரை இல்லாத இனிமையோடு இருந்தது. இன்றைக்கும் அந்த நீரோடை அங்கே இருக்கிறது. தீஞ்சுவை நீரோடை என்றழைக்கப்படுகிறது. கோடை காலத்தில் தண்ணீர் வற்றாமல் நிறைந்தே இருக்கிறது. இந்த ஓடையில் குளித்தாலும், குடித்தாலும், நோய் நொடிகள் நீங்குவதாகச் சொல்கின்றனர்.அவர் பாடிய மேலே கண்ட பாடல் அருள் விளக்க மாலையில் இரண்டாம் பாடலாக அமைந்தது.

23. ஆடையிலே எனை மணந்த மணவாளா

இப்பாடல் அரும் பெரும் கருத்தும் தத்துவமும் செறிந்தது.  இதை உருக்கமாகப் பாட கண்ணீர் பெருகும். பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் உணர்தற்கரிய பரம்பொருளை, அம் முதல்வனது

திருவருளே கண்ணாகக் கொண்டு, (அவன் அருளால் அவன் தாள் வணங்கி) சிந்தையிலே இடை விடாது சிந்திக்கவேண்டும். வந்திக்க வேண்டும். அங்ஙனம் சிந்திப்போரது பிறவி வெப்பம் தணியும். அவ்விறைவனது திருவடி ஞானம் குளிர்ந்த நிழலாய்த் தோன்றும். குளிர்ச்சியை நல்கும் என்பர் மெய்கண்டார்.

(சூத்திரம் 9) இதனை நினைவு கூரும் முறையிலமைந்தது, ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே’ என வரும் தொடராகும். இறைவனை, விளையாடும் இளம் பருவத் திலேயே என்னை மணந்து கொண்ட தலைவன் நீ என்பார். “ஆடையிலே எனை மணந்த மணவாளா” என அழைத்தார் (ஆடையிலே - விளையாடும் பருவத்திலேயே - இளம் பருவத்திலே, ஆடையிலே என்பது உலகவழக்குச்சொல்).

24. புற்று நோயை நீக்கி அருளினார்

சித்த புருஷரான வள்ளல் பெருமான் எத்தனையோ மக்களுக்கு உள நோயும் உடல் நோயும் தீர்த்து உதவி இருக்கிறார். வள்ளல் பெருமானின் மகத்துவத்தை அறிந்த பலரில் கூடலூர் அப்பாசாமி செட்டியாரும் ஒருவர். இவர் பெரு மானாரின் பெருமைகளை உணர்ந்தவர். அவர் கொள்கைகளை கடைபிடித்து வந்தார். வள்ளல் பெருமான் ஏற்றத்தையும் தோற்றத்தையும் கண்டு அவரை தொழுதார். அவருடைய தமையனார் ராமசாமி செட்டியார் நாவில் புற்று நோய் வந்து துன்பப்பட்டார். வள்ளலாரின் அடி வணங்கி,” தம்மால் இந்த நோய்க் கொடுமை தாங்க முடியவில்லை, காத்தருள வேண்டும்” என்று வேண்ட, பெருமானார், மூன்றுவேளை பூசவும், உட்கொள்ளவும் திருநீறு அளித்து புற்று நோயை நீக்கி அருளினார்.

25. மரணமிலாப் பெருவாழ்வு

மரணமிலாப் பெருவாழ்வு குறித்து வள்ளல் பெருமான் அடிக்கடி உபதேசிப்பார். இதனை அடைய சாகாக்கலை அல்லது சாகாக்கல்வி தேவை என்பார். சன்மார்க்கத்தின் முடிந்த முடிவு என்பது இந்த மரண மிலாப் பெருவாழ்வு பெறுவதே. இதை அனுபவத்தில் பெற்றவன் எவனோ அவனே சன்மார்க்கி என்றார் வள்ளலார். “என் மார்க்கம் சன்மார்க்கம்” என்பது அவர் கொள்கை. அவருடைய திருமுறையில், தான் அடைந்த அந்த மரணமிலா பெருநிலையை அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காக அனைவரையும் அறைகூவி அழைத்த பாடல் இந்தப் பாடல்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பேநிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு

நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான

நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்

மரணம் இல்லாப் பெருவாழ்வில்

வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே

‘‘மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர், புனைந்துரையேன், பொய்புகலேன், சத்தியஞ் சொல்கின்றேன் என்று நம்மை நேசத்துடன் அழைக்கும் பாடல் இது.இந்தப் பாடலை உருக்கமுடன் பாடினாலே ஒருவன் உன்னத நிலையைப் பெறலாம்.

26. முதல் குரல் கொடுத்தவர்

‘‘இறந்தவரை எடுக்கும்போது

அரற்றுகின்றீர், உலகீர்

இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்?

என்று அவர் ஆறாம் திருமுறையில் “மரணமில்லாப் பெருவாழ்வு” குறித்து கேள்வி எழுப்பி விடையும் சொல்லுகின்றார். வள்ளலார் மேலும் சொல்லுவார்: பிறந்தது மரணமடைய அல்ல?“இறவாத பெருவாழ்வு ஏன் அடைய முடியாது? உங்களாலும் முடியும். உனக்கு சம்மதமோ? மறந்தும் அவற்றை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்குமே? சன்மார்க்கம், “பிணி மூப்பு மரணம் இல்லாமல்” தவிர்க்கும். இங்கே வாருங்கள். பிறந்த இதில் தானே நித்தியமான மெய் வாழ்வு பெறலாம் என்று அழைப்பார். பிறந்தது இறப்பதற்கே என்ற உலக கொள்கையில் நின்று மாறி, பிறந்திருப்பது இனி மரணமிலாப் பெரு வாழ்வு அடைவதற்கே என்று முதல் குரல் எழுப்பியவர் வள்ளலார்.

27. காலையில் கிடைத்த காட்சி

தருமச்சாலை நிறுவிய வள்ளல் பெருமான், அதையே தவச் சாலையாக மாற்றிக்கொண்டார். அவர் தனக்கு இன்னும் இறையருள் முழுமையாக கிடைக்கவில்லையே என்ற துயரத்தோடு இருந்தார். இரண்டாவதாக, தான் எத்தனையோ நல்லது சொல்லியும், இந்த மக்கள் கேட்கவில்லையே என்கிற வருத்தமும் அவருக்கு இருந்தது. தன்னுடைய பிள்ளை படும் வருத்தத்தை அறிந்த

இறைவன், அந்த வருத்தத்தை போக்குவதற்காக ஒருநாள் காலையில் அவருக்கு தன்னுடைய அருட்கருணை காட்சி தந்தான். அதன்பிறகே வள்ளலாரின் மனக்குழப்பம் நீங்கியது. இதை ஒரு பாடலில் பாடுகிறார். “காலையிலே என் தனக்கே கிடைத்த பெரும் பொருளே” என்றும், “காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்க சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்” என்றும் பாடுகின்றார்.

28. மழையில் நனையா உடம்பு

இறைவன் தன்னுடைய அருட்பெரும் சக்தியை வள்ளலாரின் உடம்பில் செலுத்தி அவர் ஆன்மாவை ஒளிரச் செய்தான். ‘‘நான் என்னை அவனுக்குத் தர, அவன் தன்னை எனக்கு அளித்தான்” என்று வள்ளல் பெரு மான் பாடுகின்றார். “ஊனுடம்பே ஞான உடம்பாய் ஒன்றிணைக்க ஞான அமுது எனக்கு நல்கியதே என்று இதை பதிவு செய்கின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக சில சம்பவங்களை அன்பர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மழை பெய்யும் பொழுது, எம்பெருமானார் வெளியிலே செல்வார். குடை எடுத்துச் செல்வதில்லை. உடம்பும் நனைவதில்லை. அவருடைய உடம்பு தங்கத்தையே உருக்குகின்ற அளவுக்கு கனல் ஒளி உடம்பாக இருக்கும். மழைத்துளிகள் இவருடைய உடம்பில் பட்டு உஷ்ணத்தினால் ஆவியாகி விடுவதை அன்பர்கள்

பார்த்திருக்கின்றனர்.

29. நான் இறைவனின் பிள்ளை

இறைவன் எல்லோரையும் படைத்ததால் தந்தையாகிறான். நாம் அவர் பிள்ளை ஆகிறோம். ஆனால் இந்த உணர்வு நமக்கு இருப்பதில்லை. வள்ளல் பெருமான்,  இறைவனுக்கு எல்லோரும் பிள்ளைகள். நான் தான் பெரிய பிள்ளை. செல்லப்பிள்ளை. நல்ல பிள்ளை என்று நினைத்தார். இதை பல பாடல்களில் அவர் மெய் உணர்ந்து பாடுகின்றார்.

‘‘அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழம் தந்து அடியேனைத்

தெருளே சிற்றம் பலவா செல்வப்பிள்ளை ஆக்கினையே

மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்”

என்று ஆறாம் திருமுறையில் பாடுகின்றார்.

தமது திருமுகம் ஒன்றில் கையெழுத்து இடுகின்ற பொழுது “திருச்சிற்றம்பலம் உடைய செல்வப் பிள்ளை வார்த்தை” என்றே அருளுகின்றார் .இதை அறிந்த அன்பர்கள் வள்ளல் பெருமானாரை பிள்ளை பெருமானார் என்றும் வழங்கினர். கந்தசாமிப் பிள்ளை எழுதிய வரலாற்றில் பிள்ளைப் பெருமாள் என்றே குறிப்பிடுகின்றார்.

30. வள்ளலாரின் கொள்கைகள்

வள்ளலாரின் கொள்கைகளை சுருக்கி பட்டியலிட்டால் சில விஷயங்கள்

புலப்படும். அவைகளில் சில.

1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்

2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்

3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது

4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது

5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது

6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்

7. புலால் உணவு உண்ணக்கூடாது

8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

9. சாதி, மதம், இனம், மொழி முதலிய

வேறுபாடு கூடாது

10. மத வெறி கூடாது.

நிறைவுரை

வள்ளலாரின் வாழ்வு அற்புதமானது.வாழ்வியலோடு இணைந்தது. எப்படி எல்லாம் வாழ வேண்டும்? எதை உண்ண வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஏராளமான விஷயங்களைச் சொல்லிச் சென்றி ருக்கிறார். அவர் சொல்லாத வைத்தியமில்லை ஆன்மீகச் செய்திகள் இல்லை. அதை இந்த மானுட உலகம் பின்பற்றினாலே மகத்தான வாழ்வைப் பெறலாம்.

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Related Stories: