அழியாத செல்வம் தரும் அழகேஸ்வரர்

விருத்தாசலம் வட்டம்

பாலக்கொல்லையில் அமைந்துள்ளது அழகேஸ்வரர் ஆலயம். வறண்ட பிரதேசங்களில் வளரும் வெப்பாலை மரம், தமிழகத்தின் சில திருக்கோவில்களில் தல மரமாகத் திகழும் அரிய குறுமரம், வெப்பாலை மரம். சற்றே நீளமான இலைகளுடன், கொத்தாக மலரும் வெளிர்வண்ணப் பூக்களுடன், இதன் காய்கள் நீண்டு, இரட்டையாகக் காய்த்துக் குலுங்கும். இதன் மரப்பட்டைகளை வெட்டினால், நீர்ச்சத்து மிக்க பால் பீறிடும், இதனாலே, இந்த மரத்தின் பட்டைகளை, யானைகள் தந்தத்தால் உரித்து, இதன் பாலைப் பருகும் என்பர்.

இதன் இலையை மென்று துப்ப, பல்வலி நீங்கும். விஷக்கடி, தோல்நோய்கள், என பல நோய் தீர்க்கும் மரம். பட்டையில் இருந்து பேதியை நிறுத்தும் மருந்து செய்கின்றனர். இருளர் இன மக்களிடமிருந்து ஒரு மருந்துத் தயாரிப்பு முறை பெறப்பட்டு, இன்று சித்த மருத்துவர்களிடையே மிகவும் பயன்பட்டுவருகிறது.அதுதான், ‘வெட்பாலைத் தைலம். சொரியாசிஸ்’ என்ற மிகவும் மோசமான தோல் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்து. அருகிலேயே இருளர்கள் வசித்த இருளக்குறிச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்பாலை  மர நிழலில் அமரும் கணவன் மனைவிக்கிடையே உள்ள பிணக்குகள் விலகி, அவர்களின் மனம் ஒன்றிணைந்து குடும்பம் அமைதியாக, வெப்பாலை மரத்தின் காற்றே, காரணமாகிறது என்கின்றனர். இதுபோன்ற, அரிய நற்பலன்களை நமக்கு அளிக்கும், அற்புத வெப்பாலை மரங்களை கொண்ட ஊர் தான் இந்த பாலைகொல்லை, பின்னாளில் பாலக்கொல்லை ஆனது.  இங்குள்ள அழகேஸ்வரர் கோயிலில் பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும், அதற்கு மேல் விமானம் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்களால் இந்தக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.  

விதானத்தில் மீன் சின்னம் உள்ளதை வைத்து பாண்டியர்கள் காலம் என சொல்வோரும் உண்டு. ஆனால் ஒற்றை மீன் வளமையின் அடையாளமாக இருக்கலாம். ஊரின் மேற்கில் உள்ள ஏரிக்கரையில் ஜேஷ்டாதேவி வீற்றிருக்கிறார். இதனை வைத்து இவ்வூர் ஆறாம் நூற்றாண்டில் இருந்து உள்ளது  என கொள்ளலாம்.  கிழக்கு நோக்கிய இறைவன் அழகேஸ்வரர்  அவரது இடப்புறம் கிழக்கு நோக்கிய அம்பிகை அழகம்மை கோயில் கொண்டுள்ளார். இருவருக்கும் இடையில் கிழக்கு நோக்கிய முருகன் சிற்றாலயம்.

தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் இல்லாத நிலையில்  இதனை சோமாஸ்கந்த அமைப்பு என கொள்ளலாம்.  பெருங்கோயில், பெரிய வளாகம், நான்கு கால பூஜைகள், கொடிமரம் திருவிழா என  கண்ட இந்த ஆலயம்  ஏதோ காரணத்தினால் பராமரிக்கப்படாமல் முட்செடிகள் பரவி கிடக்கின்றன. ஆனாலும் பழைய தரை மட்டத்தில் இருந்து கருவறைகள் முற்றிலும் பிரித்து எடுக்கப்பட்டு எட்டு அடிகள் வரை உயர்த்தி கட்டி சுற்றிலும் மண் கொண்டு நிரப்பி பெரும்பகுதி பணியினை இந்த சிற்றூர் மக்கள் முடித்துள்ளனர். என்பது பெருமை கொள்ளத்தக்கது.

இறைவனுக்கான பீடம் புதிதாய் தருவிக்கப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றுள்ளது. ஆண்களும் பெண்களும் சிறார்களும்  சேர்ந்து சித்தம் அழகியார் திருவாசக முற்றோதல் திருக்கூட்டம் எனும் குழுவாக இணைந்து திருமுறை ஓதத்துவங்கினர், பல நூறாண்டுகள் கழித்து  கருவறையில் விளக்கெரியத் தொடங்கியது. பிரதோஷம், அன்னாபிஷேகம், சிவராத்திரி என பூஜைகள்  செய்யத் தொடங்கினார்கள். இறைவனும் இறைவியும் மனம்  குளிர்ந்து அருளை வாரி வழங்கினர்..

கேட்டவர்க்கு கேட்டவரம் கிடைத்தது அனைவரும் அழகேஸ்வரருக்கு அடியார்கள் ஆனார்கள். அழியாத செல்வங்கள் தரும் அழகேஸ்வரரை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கி வாழ்க்கை வளமாகும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

தற்போது கோயிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பக்தர்கள் உதவி செய்யலாம்.

செல்வது எப்படி?

விருத்தாசலத்தில் இருந்து ஆலடி செல்லும் சாலையில் 19 கிமீ தூரத்தில் அழகேஸ்வரர் ஆலயம் உள்ளது. பேருந்து வசதி

உண்டு.

Related Stories: