ஐதராபாத்: சமூக வலைதளங்களில் தன்னை பற்றி ஆபாசமாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக 73 பேர் மீது தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி நடந்த ‘தண்டோரா’ பட நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி, பெண்களின் உடை மற்றும் அழகு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வயது தொடர்பான கேலி கிண்டல்களும், தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், யூடியூபர்கள், தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் என மொத்தம் 73 பேர் மீது அனுசுயா பரத்வாஜ் கடந்த 12ம் தேதி சைபராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகம் மற்றும் உடலை ஆபாசமாகச் சித்தரித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் அனுமதியின்றி பரப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதையடுத்து ஊடகங்கள் மீதும், பாவனி, கராத்தே கல்யாணி போன்ற தனிநபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும், பாலியல் தொல்லை கொடுக்கும் வகையிலும் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
