குட்டையில் குதித்து காதலன் தற்கொலை கிணற்றில் குதித்து கவுன்சிலர் காதலி சாவு: குடியாத்தம் அருகே பரிதாபம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக குட்டையில் குதித்து காதலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த கவுன்சிலர் காதலியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வாணியம்பாடியான்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார்(26), டிப்ளமோ படித்துள்ளார். மாடுகளில் பால் கறக்கும் கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரீட்டா(22). நெல்லூர்பேட்டை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர். அஜீத்குமாரும், ரீட்டாவும் நீண்ட நாட்களாக காதலித்துள்ளனர்.இந்நிலையில் அஜீத்குமாரும், ரீட்டாவும் நேற்று வழக்கம்போல் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அஜீத்குமார், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று மாலை திடீரென மாயமானார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், தங்களது மகனை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை்.இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் குடியாத்தம் அடுத்த காளியம்மன் கோயில் குட்டை அருகே அஜீத்குமாரின் பைக், செல்போன் கிடந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு கிராம மக்களுக்கும், தீயணைப்புதுறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி தேடினர். சுமார் அரை மணி நேரம் தேடிய நிலையில் அஜீத்குமாரை சடலமாக மீட்டனர். இதையறிந்த ரீட்டா பதற்றமடைந்தார். உடனே வீட்டின் வெளியே ஓடி வந்த அவர், அங்குள்ள கிணற்றில் குதித்தார். இதைக்கண்ட அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அஜீத்குமார் குட்டையில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அஜீத்குமார் தற்கொலை செய்துகொண்டதால் ரீட்டாவும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post குட்டையில் குதித்து காதலன் தற்கொலை கிணற்றில் குதித்து கவுன்சிலர் காதலி சாவு: குடியாத்தம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: