தமிழகத்தில் 1,548 பேர் உடல் உறுப்பு தானம் செய்து 5,642 பேர் பயன் பெற்றுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

சென்னை: சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் 10வது அறுவை சிகிச்சை நோயாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். மருத்துவர்கள் மனோகரன், பார்த்தசாரதி, கே.கே.நகர் கவுன்சிலர் தனசேகர் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அப்போது, ஹிதேந்திரன் என்ற இளைஞர் தான் முதல் முதலில் உறுப்புகளை தானம் செய்தார். உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஆணையம் இந்தியாவிலே தமிழகத்தில்தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 36 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் தான் உறுப்பை கொடையாக பெறும் உரிமம் இருக்கிறது. அடுத்த வாரத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து அவர்களின் உடல் உறுப்பை  கொடையாக பெறும் உரிமை கிடைத்து விடும்.தமிழகத்தில் 1548 பேர் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் 5642 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பேரிடம் உடல் உறுப்பு தானம் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் ரூ.15 லட்சம் தொடங்கி ரூ.22 லட்சம் வரை காப்பீடு திட்டத்தின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரையும் 12,633 பேர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பெற விண்ணப்பித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்….

The post தமிழகத்தில் 1,548 பேர் உடல் உறுப்பு தானம் செய்து 5,642 பேர் பயன் பெற்றுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! appeared first on Dinakaran.

Related Stories: