3000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை: பாடகி பலக் முச்சல் சத்தமின்றி சேவை

மும்பை: பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி பலக் முச்சல். இவர் 2000ம் ஆண்டு முதல் ‘சேவ் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனம் மூலம் இதய நோய் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். 2000ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு தனது இசை மூலம் நிதி திரட்ட உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தற்போது ‘சேவ் லிட்டில் ஹார்ட்ஸ்’ தொண்டு நிறுவனம் வெற்றிகரமாக 25ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை கொண்டாடும் வகையில் பலக் முச்சல்க்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதில் அவர் பேசும்போது, ‘‘இந்த தொண்டு நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகளாகிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. இதுவரை 3000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளோம். அதற்கு முக்கிய காரணமாக இருந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோருக்கு நன்றி. இந்த தொண்டு நிறுவனம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் நபர் லோகேஷ். அந்த சிறுவன் இப்போது வளர்ந்து விட்டான். நிறைய குழந்தைகள் இப்போது வளர்ந்து விட்டனர். அதை பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. பெண்ணாக பிறப்பது ஆசீர்வாதம், பெண்கள் அனைவரும் தங்கள் மீது தன்னம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: