சென்னை: நைசாத் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் கடந்த 7ம் தேதி ரிலீசான ‘எமகாதகி’ என்ற படத்தின் வெற்றிவிழா நடந்தது. தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச ராவ் ஜலகம், ராகுல் வெங்கட், இயக்குனர் பெப்பின் ஜார்ஜ், நடிகைகள் ஹரிதா, கீதா கைலாசம், நடிகர்கள் நரேந்திர பிரசாத், சுபாஷ், ராஜூ ராஜப்பன், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங், இணை தயாரிப்பாளர் கணபதி ரெட்டி கலந்துகொண்டனர்.
தெலுங்கில் ‘உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா’, ‘மிஸ்டர்.பிரக்னெண்ட்’ ஆகிய படங்களில் நடித்த எம்பிபிஎஸ் டாக்டர் ரூபா கொடுவாயூர், ‘எமகாதகி’ படத்தில் 20 நாட்கள் பிணமாக நடித்து அசத்தியிருந்தார். அவர் பேசியதாவது: எங்கள் படத்தின் கதை, காட்சிகள் மற்றும் நடிப்பை புரிந்துகொண்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.
எம்பிபிஎஸ் பொது மருத்துவம் படித்துள்ள நான், அடுத்து மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறேன். பரதம், குச்சுப்புடி நடனங்களில் நிறைய சாதித்துவிட்டேன். அதனால்தான் நடிப்பு சுலபமாக வருகிறது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன். ‘எமகாதகி’யில் நான் பிணமாக நடித்தது பற்றி ஆச்சரியப்படுகின்றனர். பிணம் சொல்லும் சமூக கருத்துகளை யோசித்து பாருங்கள். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அப்படி நடித்தேன்.